shadow

காவேரி புஷ்கரம் என்றால் என்ன என்பது தெரியுமா?

கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பாயும் காவிரி நதியினை போற்றும் வகையில் இந்த வருடம் காவேரி புஷ்கரம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

காவிரி நதி, குடகு மாவட்டம் பிரம்மகிரி என்னும் இடத்தில் இருந்து துவங்கி ஸ்ரீரங்கபட்டினம், சிவன்சமுத்திரம் வழியாக தமிழ கத்தில் உள்ள ஒக்கேனக்கல் வந்து மேட்டூர் பவானி, பள்ளிபாளையம், கொடுமுடி, ஸ்ரீரங்கம் (திருச்சி), வழியாக திருவையாறு, சுவாமிமலை, கும்பகோணம், வழியாக காவிரி பூம்பட்டினம் என்னும் பூம்புகார் வழியாக வங்க கடலில் கலக்கிறது.

ஈரேழு உலகத்தில் உள்ள மூன்றரை கோடி தீர்த்தத்திற்கு அதிபதியானவர் புஷ்கரன் என்பவர். இவர் பிரம்ம தேவனின் கரங்களில் இருப்பவர். குருபகவான் பிரம்மாவை நோக்கி தவம் செய்தார். பிரம்மன் குருதேவனின் தவத்தினை கண்டு மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். குருபகவான், பிரம்ம தேவனின் கரங்களில் இருக்கும் அமிர்த கலசத்தினை கேட்டார். அந்த அமிர்த கலசத்துக்குத் தான் புஷ்கரம் என்று பெயர். பிரம்மா புஷ்கரனை குருவுடன் செல்லும்படி கூறினார்.

ஆனால் புஷ்கரன் என்னும் தேவதை பிரம்ம தேவனை விட்டு செல்ல மறுக்கிறார். இதற்காக தன் வாக்கினை காப்பாற்ற பிரம்மா, புஷ்கரனிடம் ஒரு ஆலோசனை கூறுகிறார். அதாவது குருபகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்லும் போது (குருப்பெயர்ச்சி), குரு எந்த ராசியில் இருக்கிறாறோ அங்கும் அடுத்த ராசிக்கு செல்லும் போதும் 13 நாட்கள் இருந்து விட்டு மீண்டும் தன்னிடம் வந்துவிடும்படி கூறினார் பிரம்மதேவன். பிரம்மதேவனின் வாக்கை காப்பாற்ற புஷ்கரன் சம்மதித்து குருபகவானிடம் சேர்கிறார்.

குருபகவான் எந்த ராசிக்கு மாறுகிறாரோ அந்த ராசியின் நதி எதுவோ அங்கு வந்து புஷ்கரன் தேவதை (அமிர்தகலசம்) தங்குவார். புஷ்கரன் தங்கும் காலமே அந்த நதியின் புஷ்கரமாக கருதப்படுகிறது.

பிரம்ம தேவனின் அருளாலும், குருபகவானின் பெயர்ச்சியாலும், புஷ்கரன் நதியில் கலக்கும் போது 66 கோடி தீர்த்தங்களும் அந்த நதியில் கலப்பதாக ஐதீகமும், நம்பிக்கையும் ஆகும்.

குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். துலாம் ராசிக்கான நதி காவிரி நதியாகும். கர்நாடகத்திலும், தமிழகத்திலும் பாயும் காவிரி நதியினை போற்றும் வகையில் இந்த வருடம் காவேரி புஷ்கரம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

காவிரி நதி பாயும் கரையோ ரங்களில் வடகரையில் 53-ம் தென்கரையில் 127-ம் ஆக 190 பாடல் பெற்ற சிவாலயங்கள் அமையப்பெற்றுள்ளன. (274 பாடல் பெற்றவை)

108 வைணவ தேசங்களில் பெரும்பான்மையான ஆலயங்கள் காவிரி நதிக்கரை யோரத்தில் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி நதி பாயும் எந்த இடத்திலாவது நீராடி, நியாயமான கோரிக்கைகளுடன் வேண்டிக்கொண்டால், நிச்சயம் நடைபெறும். இந்த புஷ்கரம் நடைபெறும் காலத்தில் அனைத்து நதிகளும் காவிரி நதியுடன் சங்கமிப்பதால் நமது பழைய வினைகள் நீங்கும். பித்ருக்களின் சாபம் நீங்கும்.

இந்த காவேரி புஷ்கரம் திருவிழாவினை காஞ்சி காம கோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் பாரதத்தில் உள்ள அனைத்து துறவியர்களும் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply