shadow

காவல் நிலையம் போகாமலேயே புகார் தரலாம்!

6மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் உள்ள பெண் பத்திரிகையாளார்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு கடந்த ஜூன் 7-ம் தேதி டில்லியில் நடந்தது. டில்லி விக்யான் பவனில் நடந்த இந்தப் பயிலரங்கில் காஷ்மீர் முதல் அந்தமான் வரையுள்ள பெண் பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும் மேம்பாட்டுக்காகவும் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களையும் விவரித்தார். அவற்றைச் செழுமைபடுத்தவும், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களையவும் பத்திரிகையாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

ஒரு குடையின் கீழ்

எந்தப் பாரபட்சமும் இல்லாமல் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் ஆளாகிறார்கள். பாதிப்புக்குள்ளாகிற அனைத்துப் பெண்களும் காவல் நிலையத்தின் துணையை நாடுவதில்லை. ஏதோவொரு தயக்கம் அவர்களைக் கட்டிப்போட்டுவிடுகிறது. இந்த நிலையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘One stop centre’ திட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுசெய்யப்படும் என்று மேனகா காந்தி தெரிவித்தார்.

இது பெண்களுக்கான பிரத்யேக மையம். பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல், அமில வீச்சு, சூனியக்காரி என்று சொல்லி கொல்லப்படுவது இப்படி எந்த வகைப் பிரச்சினையாக இருந்தாலும் இந்த மையத்தை அணுகலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்கப்படும் இந்த மையத்தில் பெண்களுக்கு மருத்துவம், சட்டம், உளவியல் ஆலோசனை என எந்த உதவி உடனடியாகத் தேவைப்படுகிறோ அதற்கான வழிவகைகள் செய்துதரப்படும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கனவே செயல்பட்டுவரும் அமைப்புகளுடன் இது ஒருங்கிணைக்கப்படும்.

மீட்கப்படும் பெண்கள் இந்த மையத்திலேயே தற்காலிகமாகத் தங்கிக்கொள்ளலாம். நீண்ட நாள் தங்குமிடம் தேவைப்படுகிறவர்களாக இருந்தால் அவர்கள் அரசின் தற்காலிக தங்கும் விடுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

காவல் நிலையம், நீதிமன்றம் போன்றவற்றுக்கு வரத் தயங்கும் பெண்களுக்காக வீடியோ கான்ஃபரன்சிங் வசதியும் ஏற்பாடு செய்துதரப்படும். பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு இந்தத் திட்டம் விரைவில் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று மேனகா காந்தி தெரிவித்தார். இன்று பலரும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதால் பெண்களின் பாதுகாப்புக்காகப் பிரத்யேக Panic button அமைப்பது குறித்து செல்போன் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆபத்து நேரத்தில் இந்த பட்டனை அழுத்தினால் நாம் பதிவு செய்துவைத்திருக்கும் நபர்களுக்கும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் சென்றுவிடும். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் அலாரம் போல இந்தத் தகவல் பரிமாறப்படுவதன் மூலம், சம்பந்தப்பட்ட நபரை மீட்பது எளிதாக இருக்கும். 2018-க்குள் அனைத்து செல்போன்களிலும் இந்த வசதி இருக்க வேண்டும் என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

விற்பது எளிது!

தவிர குழந்தகளின் நலனைக் கருத்தில் கொண்டு அங்கன்வாடிகளை முழுமையாகக் கண்காணிக்கும் பணியும் முடுக்கிவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களில் ஈடுபடும் பெண்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை இலவசமாகச் சந்தைப்படுத்தும் வகையில் செயல்பட்டுவரும் //mahilaehaat-rmk.gov.in/en/ இணையதளத்தை இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயன்படுத்திவருகிறார்கள். அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் மேனகா காந்தி தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இந்தத் தளத்தில் பதிவுசெய்து தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலாம். பொருட்களை விற்பதற்காக அமேசான், ஃபிளிப்கார்ட் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக மேனகா காந்தி குறிப்பிட்டார்.

Leave a Reply