shadow

காற்றுக்குக் கொடியசைக்கும் திரைச்சீலைகள்

8வீட்டின் உள் அலங்காரத்தில் அவசியமான ஒன்று திரைச்சீலைகள். இந்தத் திரைகளை, காற்றையும் வெளிச்சத்தையும் கொண்டு வரும் ஜன்னல்களுக்கும் கதவுகளுக்குமான ஆடை எனலாம். தூசிகள் வீட்டினுள்ள வராதுவாறு தடுக்கக்கூடியவை இந்தத் திரைகள். ஜன்னல் திரைகள் அலங்காரம் மட்டுமல்ல, அவசியமானதும்கூட.

சில இடங்களில் இன்னும் தொகுப்பு வீடுகள் என்பதுபோல் சுவரோடு சுவர் ஒட்டினாற்போல் அடுத்தடுத்து வீடுகள் இருப்பதைக் காணலாம். என்னுடைய பாட்டியின் வீடு அவ்வாறான ஒன்றாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அவ்வாறான வீடுகளில் ஜன்னல்கள் வைக்க இடமில்லை.

வாசல் கதவு முதல் வரிசையாக கொல்லைப்புறம் வரை வாசற்காலும், கதவுமாக இருக்கும். அவ்வாறான வீடுகளில், வீட்டின் நடுப்பகுதி திறந்த வெளியாக மேற்கூரை இன்றி, இயற்கை வெளிச்சத்தையும், காற்றையும் தரும் வகையில் கட்டப்பட்டிருக்கும்.

தனி வீடுகள் கட்டத் தொடங்கிய பிறகு, ஜன்னல்கள் வைப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அவ்வாறு வைக்கப்பட்ட ஜன்னல்கள், மரக் கதவுகளுடன் கூடியதாகக் கட்டப்பட்டன. கதவுகள் அனைத்தும் திறந்த நிலையில் இருந்தாலும், வெளிச்சத்தைச் சற்று குறைக்க ஜன்னலின் முக்கால் அளவு மறையும்படி திரை போடப்படும். இந்தத் துணியிலான திரையின் மேலும் கீழும் ஸ்பிரிங் கோக்கப்பட்டு, தொங்கவிடப்படும்

இப்போது கட்டப்படும் வீடுகள் அனைத்திலும் ஜன்னல் கதவுகள் கண்ணாடிக் கதவுகளாக வைக்கப்படுகின்றன. காரணம், மரவேலை செய்ய ஆகும் செலவு, நேரம், கூலி எல்லாம் கணக்கில் கொண்டு கண்ணாடிக் கதவுகள் வைக்கப்பட்டு விடுகின்றன போலும்.

அவ்வாறான ஜன்னல்களுக்குத் திரை அவசியமாகிவிடுகிறது. சில வகை ஜன்னல்கள் தரைக்குச் சற்று மேல் தொடங்கி 6 அடி உயரம் வரை கட்டப்படுகிறது. அவற்றுக்குத் திரை போட்டே தீர வேண்டும் என்பது கட்டாயமாகிவிடுகிறது.

இந்தத் திரைச்சீலைகள் பல ரகங்களில் துணியாக, ரெடிமேட் ஆக என்று கடைகளில் கிடைக்கின்றன. சிலர் வெயிலை மறைக்க கனமான கர்ட்டன், வெளிச்சம் வர மெல்லிய துணியால் ஆன திரை என்று ஒரே ஜன்னலுக்கும் இருவித திரை போடுகின்றனர்.

அதேபோல் திரையைத் தொங்கவிடும் கம்பிகளும் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப ஏகப்பட்ட ரகங்கள் குவிந்து கிடைக்கின்றன. நாமே துணி வாங்கித் தைப்பதிலும் நிறைய விதங்கள் உள்ளன.

குறிப்பாக லூப் வைத்துத் தொங்கவிடுபவை. கொக்கி மாட்டி வைத்துத் தொங்கவிடுபவை என ஏகப்பட்ட வகை. இற்கெனவே பிரத்யேகக் கடைகள் இருக்கின்றன. துணி வகையைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்கள் வீட்டிற்கே வந்து ஜன்னல் அளவுகளைக் கணக்கெடுத்து, நமக்கு வேண்டிய வகையில் தைத்து வந்து மாட்டிவிடுவார்கள்.

திரைகள் வீட்டுக்குள் வரும் விருந்தினர்களை மட்டுமல்லாது காற்றையும் வெளிச்சத்தையும் வரவேற்கும் வரவேற்பாளர்.

Leave a Reply