shadow

காதுகேளாமைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு?

7காதுகேளாமை பிரச்னை ஏற்படுவதை, கேட்கும் திறன் குறைவதை நாம் உணர்வது இல்லை. ஆரம்பக் கட்டத்தில், தங்களுக்கு அப்படி ஒரு பிரச்னை இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் காதுகேளாமை பிரச்னை மற்றவற்றைவிட வேறானது. இவர்களுக்குக் காது, கொஞ்சம் கொஞ்சமாகத் கேட்கும் திறனை இழந்து, ஒரு கட்டத்தில் முற்றிலும் கேளாத தன்மையை அடைகிறது. கேட்கும் திறனை இழந்துவிட்டோம் என்ற நிலையை அவர்கள் உணரும்போது பிரச்னை முற்றிவிட்டது என்று அர்த்தம்.

என்ன சொன்னாலும், திரும்பத் திரும்ப, ‘ம்… என்ன சொன்னீங்க?’ என்று கேட்பவரா… ஒருவர் பேசும்போது தன்னையுமறியாமல் காதை அவர் பக்கம் திருப்பிக் கேட்பவரா… ஷாப்பிங் சென்டர், உணவகம் போன்ற சலசலப்புச் சத்தம் மிகுந்த இடங்களில் குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்துரையாடும்போது, அவர்கள் சொல்வதைக் கேட்பதற்குச் சிரமப்படுபவரா… அப்படி என்றால், காதுகேளாமை பிரச்னைக்கு ஆளாகியுள்ளீர்கள் என்று அர்த்தம்.

நியூரோபதி காரணமாக கை, கால்களில் ஏற்படக்கூடிய பிரச்னையைப் பற்றி நமக்குத் தெரியும். உண்மையில் அது கை, காலில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை; காதிலும் பிரச்னையை உருவாக்குகிறது. ஆம், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவில்லையெனில், அது காதுகேளாமைக்கும் வழிவகுக்கும். பொதுவாக மற்றவரைவிட, சர்க்கரை நோயாளிக்குக் காது கேளாமைக்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

தொடர்ந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லையெனில், அது சிறுநீரகம் மற்றும் கண்ணில் பாதிப்பை ஏற்படுத்துகிறதல்லவா, அதுபோல காதுக்குச் செல்லும் மிக சிறிய ரத்தக் குழாயின் சுவரையும் அது பாதிக்கிறது. நம்முடைய காதுகள் மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டவை. அதன் செயல்பாட்டை அன்றாடம் நாம் சார்ந்தே இருக்கிறோம். இந்த நிலையில், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காதபோது, இந்த நுண்ணிய ரத்தக் குழாய்ச் சுவர்கள் பாதிப்படைகின்றன. மற்ற உறுப்புகளாவது புதிய ரத்தக் குழாயை உருவாக்கி அதைச் சரி செய்ய முயற்சிக்கும். அந்த வாய்ப்புக்கூட காதுக்குக் கிடையாது.

காதுக்குள் உள்ள ரத்தக் குழாய் பாதிப்படைந்தது என்றால், காதின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்; காது கேட்கும் திறன் மட்டும்தான் பறிபோகும்; வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம். நாம் நிலையாக நிற்பதற்கும் உட்காருவதற்குமான அமைப்பு காதில்தான் உள்ளது. இந்த நிலைத்தன்மை பாதிப்படைவதால், தடுமாற்றம் ஏற்பட்டு, கீழே விழுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

அறிகுறிகள்:

*காதுகேளாமை கொஞ்சம் கொஞ்சமாக நிகழக்கூடியது. எனவே, கேட்கும் திறன் படிப்படியாகக் குறைவதை நாம்தான் உணர வேண்டும்.

*‘என்ன சொன்னீர்கள்?’ என்று திரும்பத் திரும்பக் கேட்கிறீர்களா?

*உங்களுக்குச் சரியாகக் காது கேட்கவில்லை என்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி சொல்கிறார்களா?

*எல்லோரும் தெளிவாகப் பேசாமல் வாய்க்குள்ளேயே முணுமுணுக்கிறார்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

*எதிராளியிடம் உரையாடுவதே மிகவும் சிரமமாகத் தோன்றுகிறதா?

*தொலைக்காட்சி, ரேடியோ உள்ளிட்டவற்றை அதிக சத்தத்தில் கேட்கிறீர்களா?

*கூட்டமான இடத்தில் மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்கள் சொல்வதைக் கேட்பதில் சிரமம் இருக்கிறதா?

*இவற்றுக்கெல்லாம் ‘ஆம்’ என்று பதில் சொன்னால், உடனடியாக உங்கள் காதின் செயல் திறனைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனால், எதிர்காலத்தில் காது கோளாமை பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

கண்டறிதல்

காதுகேளாமை பிரச்னை இருப்பதை உங்கள் குடும்ப மருத்துவரே சொல்லிவிடுவார். இருப்பினும், அதை உறுதி செய்துகொள்ள காது-மூக்கு-தொண்டை (ஈ.என்.டி) சிறப்பு நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டியது அவசியம். ஆடியோலஜிஸ்ட் (Audiologist) எனப்படும் சிறப்பு நிபுணர், காது கேட்கும் திறன், பேச்சுத் திறனை மதிப்பீடு செய்வார்.

ஈ.என்.டி நிபுணர் முழு மருத்துவ வரலாற்றையும் கேட்டுத் தெரிந்துகொள்வார். அதன்பிறகு ஓட்டோஸ்கோப்பி (otoscope) மூலம் காதைப் பரிசோதிப்பார். இதன்மூலம் எந்த மாதிரியான பாதிப்பு, எவ்வளவு தீவிர பாதிப்பு என்பதை அளவிடுவார். ‘ஆடியோகிராம்’ என்ற பரிசோதனையை ஆடியாலஜிஸ்ட் செய்வார். இதன் அடிப்படையில் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்யப்படும்.

சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக காதில் கேன்டிடா அல்பிகன்ஸ் (candida albicans) என்னும் பூஞ்சைத் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு ஏற்படும். இதற்கு ஓட்டோமைக்கோஸிஸ் (otomycosis) என்று பெயர். மற்றவர்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். இது காதில் நமைச்சல், திரவச் சுரப்பு, அடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தி, கடைசியில் காதுகேளாமையை ஏற்படுத்திவிடும். இதற்கு உடனடி சிகிச்சை தேவை.

வீரியம் மிக்க வெளிப்புற இடைக்காது அழற்சி, மெலிக்னன்ட் ஓடைடிஸ் எக்ஸ்டெர்னா (Malignant Otitis Externa) எனப்படும். இது ஏற்பட, சூடோமோனஸ் ஏரோஜினோசா (pseudomonas aeroginosa) எனும் பாக்டீரியா கிருமியே காரணம். இது காதின் உட்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, பாதுகாப்பற்ற பட்ஸ் பயன்படுத்துவதால் இது ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மிகத் தீவிர காது வலி ஏற்படும். இரவு நேரத்தில் வலி அதிகமாக இருக்கும். காதில் துர்நாற்றம் வீசும். கடைசியில், காதுகேளாமை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவை மிகத் தீவிரமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதன் மூலமும், ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வதன் மூலமும் இந்த பாதிப்பில் இருந்து தப்பலாம்.

Leave a Reply