shadow

காதலைக் காப்பாற்றும் 6 குணங்கள்! – ரொமான்ஸ் ரகசியம்

loveஇதயம் முரளி போல விழுந்து விழுந்து காதல் கொள்பவர்களாக இருந்தாலும் சரி, ஓகே கண்மணி துல்கர் போல ஜஸ்ட் லைக் தட் ரொமான்ஸ் செய்பவர்களாக இருந்தாலும் சரி, ரிலேஷன்ஷிப்பை பேணிக் காப்பது கத்தி மேல் நடக்கும் வித்தைதான். கொஞ்சம் பிசகினாலும், ‘எல்லாக் கோட்டையும் அழிங்க’ என முதலில் இருந்து தொடங்க வேண்டும். ஸோ, ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்பின் தொடக்கமும் முடிவும், நீங்கள் உங்கள் துணையிடம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது. சில வகை குணாதிசயங்கள், எவ்வளவு ஆழமான உறவையும் பாதிக்கும் சக்தி கொண்டவை. இதில் ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் ரெட் அலர்ட்தான். உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

ஓவர் நெருக்கமும் ஆபத்துதான்!

‘நாங்க ரொம்பவே நெருக்கம்’ என சில தம்பதிகள் பெருமையாகக் கூறுவார்கள். ஆனால் அந்த வகை நெருக்கமே உங்கள் உறவை பாதிக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஒரு கட்டத்தில் எல்லாமே போரடித்து, உங்களுக்கு இடையே இருக்கும் ‘ஸ்பார்க்’ மிஸ் ஆகும். மனசுக்குள் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி டயர்டாகி தூங்கிவிடும். முன்பு மனதிற்கு நெருக்கமாக தோன்றியது எல்லாம் இப்போது அபத்தமாக இருக்கும். ஓவர் நெருக்கம் உங்களை விலகவும் விடாது. இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்க வேண்டியதுதான். ஆகவே, காதலை பிரியாணி போல வயிறு முட்ட அடைத்துக் கொள்ளாமல், அதிகாலை காபி போல சிப் சிப்பாக அருந்துங்கள்.

விக்ரமாதித்தனும் வேதாளமும்:

படமா? நாங்க கைகோத்துக்கிட்டுதான் போவோம். ஷாப்பிங்கா? சேர்ந்துதான் வாங்குவோம். பார்ட்டி கூட சேர்ந்துதான் பண்ணுவோம் என எங்கே போனாலும், என்ன செய்தாலும் விக்ரமாதித்தனும் வேதாளமுமாய் இருக்கிறீர்களா? கவனம் மக்களே! நாளடைவில் சுயமாக யோசிக்கவே நீங்கள் தயங்கக்கூடும். உங்கள் துணையும் உங்களைப் பாரமாக கருதலாம். எத்தனை நாளைக்குத்தான் விக்ரமாதித்தனும் வேதாளத்தை சுமப்பார்? உங்களுக்கென, உங்கள் பார்ட்னருக்கென தனி வட்டம் இருக்கிறது. இருக்கவேண்டும். மாற்றானாகவே இருந்தாலும் இரண்டு சூர்யாக்களுக்குமே வேறு வேறு டேஸ்ட் தானே!

நான்…நான் மட்டுமே!

முந்தைய குணாதிசயத்திற்கு அப்படியே எதிர்மறை இது. தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பது, தனக்கு இருப்பது மட்டும்தான் லட்சியம் என துணையின் ஆசைகளை அலட்சியப்படுத்துவது. இதெல்லாம் ஆபத்தான அறிகுறிகள். தனி ஒருவனாக இங்கே நீங்கள் வாழவே முடியாது. உங்கள் துணையின் ஆசைகளை மதியுங்கள். அவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவது போல, நீங்களும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுங்கள். அவர்களோடு கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். கொஞ்சம் காஃபி… நிறைய காதல்!

சர்வாதிகாரி!

‘எல்லாம் எனக்குத் தெரியும்’ என்பவர்களை விட ‘எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும்’ ரக ஆசாமிகள் ஆபத்தானவர்கள். ‘நீ ஏன் இதை பண்ணுற, என்னைக் கேக்காம பண்ணக்கூடாது’ என ஆட்டிப் படைக்காதீர்கள். நீங்கள் ஜாக்சன் துரையும் இல்லை, அவர்கள் பாளையக்காரர்களும் இல்லை. ரிலேஷன்ஷிப், புரிதலினால் வருவதே அன்றி, பனிஷ்மென்டினால் அல்ல. பந்தே நீருக்குள் அமுக்க அமுக்க திமிறிக் கொண்டு வெளியே வரும்போது, மனித மனம் சும்மா இருக்குமா என்ன? அவர்கள் வழியில் அவர்களைப் போகவிடுங்கள். அதுதான் உங்களுக்கும் அவர்களுக்கும்… உங்களுக்கு இடையிலான காதலுக்கும் நல்லது!

அந்நியன்கள்!

சட் சட்டென கோபம், கவலை, மகிழ்ச்சி என மனது மாறிக்கொண்டே இருக்கிறதா? இது உங்கள் ரிலேஷன்ஷிப்பை மோசமாக பாதிக்கலாம். உங்கள் மனநிலையை உங்கள் பார்ட்னருக்கு கடத்தாதீர்கள். கொஞ்ச நாளைக்குத்தான் அவர்களால் இதை சகித்துக் கொள்ள முடியும். அதன் பின் உங்கள் மேல் வெறுப்புதான் வளரும். முடிந்தவரை நெகட்டிவ் எண்ணங்களை குறைத்து ’சந்தோஷமாக’ இருங்கள்.

அழுகாச்சி காவியம்!

‘நீயின்றி அமையாது என்னுலகு’ டைப் மனநிலை இது. ‘என்ன பிரச்னை என்றாலும் தன் பார்ட்னரிடம் சரணடைந்தால் போதும்… அவர் பார்த்துக்கொள்வார்’ என நினைப்பார்கள். உங்கள் பார்ட்னர் ஒன்றும் சூப்பர்மேனோ மகாராணியோ இல்லை… எந்த சிக்கலையும் ஒரு சொடுக்கில் தீர்க்க. அவர்கள் முடியாது என சொன்னால் அழுது வடியாதீர்கள். சீரியல் பாணி காட்சிகள் எல்லாம் நிஜத்தில் உதவாது. நீங்கள் செய்த தவறுகளை நீங்கள்தான் திருத்திக் கொள்ளவேண்டும். அவர்கள் தலையில் வைத்துவிட்டு சொகுசாக இருக்க நினைத்தால் வலி உங்களுக்குத்தான்.

’அட… இது நான்தான்பா..!’ என இவற்றைப் படிக்கும்போது மனதில் தோன்றினால்…. கொஞ்சம் நேரம் எடுத்து, சிட்டி ரோபோ போல ரீ ப்ரோக்ராம் செய்துகொள்ளுங்கள். லைஃப் நல்லா இருக்கும்!

Leave a Reply