shadow

கவனத்தை ஈர்க்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்

2ஆடம் ஹில்மேனின் இன்ஸ்டாகிராம் பக்கம் இப்படியும் படங்களை உருவாக்க முடியுமா என வியக்க வைக்கிறது. கலை ஆர்வமும் வடிவமைப்புத் திறனும் கொண்ட ஹில்மேன் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே இந்தப் படங்களை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அந்தப் பொருட்களை அவர் அமைத்திருக்கும் விதத்தில்தான் விஷயமே இருக்கிறது. அவர் வடிவமைக்கும் விதத்தில் பொருட்கள் புதிய தோற்றம் கொள்வதோடு, தனி அழகையும் பெறுகின்றன.

உதாரணத்திற்குப் பல வண்ண லாலிபாப் மிட்டாய்களை வட்ட வடிவில் ஒன்றாக அடுக்கி வைத்து ஒரு சக்கரம் போலத் தோன்ற வைத்திருக்கிறார். அதேபோலப் பல வண்ண பென்சில்களை ஒரு வரிசையில் செங்குத்தாகவும், மற்றொரு வரிசையில் பக்கவாட்டிலும் அமைத்திருக்கிறார். பென்சில்களின் அளவும் சிறியதிலிருந்து தொடங்கிப் பெரிதாகிறது. இந்த வரிசை சந்திக்கும் இடத்தில் ஒரு ஷார்ப்னரையும் வைத்திருக்கிறார். இன்னொரு படத்தில் ஜெம்ஸ் மிட்டாய்களைக் கொண்டு அழகிய கோலத்தை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பார் என வியக்காமல் இருக்க முடியாது. ஹில்மேனின் கற்பனைத் திறனும், படைப்பாற்றலும் ஒவ்வொரு படத்திலும் மிளிர்வதோடு ஒளிப்படச் சேவையான இன்ஸ்டாகிராமை இப்படியும் பயன்படுத்தலாமா என்ற வியப்பும் ஏற்படும்.

ஹில்மேன் படங்கள் காண: //www.instagram.com/witenry/

Leave a Reply