shadow

liverமலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய முடியும் என்பது குறித்து, கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்.

‘கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை ‘ஹெபடைட்டிஸ்’ என்போம். இந்த அழற்சி ஒரு கட்டத்துக்குள் நின்றுவிடலாம். இல்லை என்றால் கல்லீரலில் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.  மேலும் லிவர் ஸ்காரிங், கல்லீரல் செயல் இழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய்கூட ஏற்படலாம். பொதுவாக நோய்க் கிருமிகள் மூலம் இந்த அழற்சி ஏற்படலாம். தவிர, மது அருந்துதல், சில வகையான மருந்து களை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நம்முடைய நோய் எதிர்ப்பு செல்லே நம் உறுப்பைத் தாக்கும் ‘ஆட்டோஇம்யூன்’ பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவும் ஹெபடைட்டிஸ் ஏற்படலாம். 

கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன. இந்த வைரஸ் கிருமிகளின் வகைகள், ‘ஏ’-வில் தொடங்கி ‘ஜி’ வரை சென்றுவிட்டது. இதில், ‘ஹெபடைட்டிஸ் பி’ மற்றும் ‘சி’ மிக மோசமானவை. உலகில் லட்சக் கணக்கானோருக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட, வைரஸ் ‘பி’ மற்றும் ‘சி’ காரணமாக இருக்கின்றன. ஹெபடைட்டிஸ் ‘ஏ’ மற்றும் ‘இ’ உணவு மற்றும் தண்ணீர் மூலம் பரவுகிறது. பி, சி, டி ஆகியவை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய ரத்த வழித் தொடர்புகொள்வதன் மூலமே ஏற்படுகிறது.

பொதுவாக, பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தைப் பெறுதல், சரியாகச் சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவைசிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்துவதாலும் பரவுகிறது. ‘ஹெபடைட்டிஸ் பி’வைரஸ் மட்டும் இதனுடன் கூடுதலாகக் கர்ப்பக் காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும் மற்றும் உடல் உறவு மூலமாகவும் பரவுகிறது. எனவே, கர்ப்பிணிகள் மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால், சிசுவுக்கு அந்தப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணியும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றைத் தடுக்க, குழந்தைப் பிறந்ததும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட வேண்டும். எந்த வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

பாதுகாப்பற்ற ரத்தப் பரிமாற்றத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசியைப் பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெப டைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் பரவாமல் இருக்க, தனிநபர் சுகாதாரம் அவசியம். நோய்த் தொற்று உள்ளவர் உணவை சமைக்கும்போதோ, பரிமாறும்போதோ, அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, சுத்தமாக இருப்பதன் மூலம் பாதிப்பில் இருந்து தப்பலாம்’ என்று எச்சரிக்கிறார்.

தொற்றைத் தடுக்க… தேவை விழிப்பு உணர்வு!

”பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் இந்த வைரஸ் கிருமித் தொற்று பற்றிக் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும். ஒருவேளை பாதிப்பு கண்டறியப்பட்டால், அதை எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். தவிர, அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியைக் கட்டாயமாக்க வேண்டும். இதைச் செய்தாலே, வைரஸ் தொற்றுப் பாதிப்பை பெருமளவு குறைத்துவிட முடியும்” என்கிறார் ஜாய் வர்கீஸ்

Leave a Reply