shadow

கலை, அறிவியல் படிப்புகளுக்கு நாளை 7ஆம் கட்ட கலந்தாய்வு

be_counsellingபுதுச்சேரி கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கான (7ஆம் கட்ட கலந்தாய்வு 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, கதிர்காமம் இந்திராகாந்தி கலை அறிவியல் கல்லூரி, கலித்தீர்த்தாள் குப்பம் காமராஜர் கலைக் கல்லூரி, தவளக்குப்பம் ராஜீவ் காந்தி கலை அறிவியல் கல்லூரி, வில்லியனூர் கஸ்தூரிபா மகளிர் கல்லூரி ஆகிய 6 கல்லூரிகளில் உள்ள 27 இளங்கலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 2,118 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த முறையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

அதன்படி, 2016-17 ஆம் ஆண்டு கலை, அறிவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் முடிவில் 3,400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு, அதில் 1756 இடங்கள் (82.90 சதவீதம்) நிரப்பப்பட்டன. தற்போது 362 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் காலியிடங்களை நிரப்புவதற்கான 7ஆம் கட்ட கலந்தாய்வு ஆக.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கபாஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு துவங்கி புதன்கிழமை வரை புதுச்சேரி அனைத்து பிரிவினருக்கான கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களுக்கு ஏற்கெனவே அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பிஎஸ்சி, பி.காம், பிபிஏ போன்ற பாடப்பிரிவுகளில் கடும் போட்டி நிலவியது. இதனால் அந்தப் பாடப்பிரிவுகளில் அதிக கட்ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் குறைந்த கட்ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இதுவரை இடம் கிடைக்கவில்லை. எனவே, அந்த மாணவர்கள் கபாஸ் அலுவலகத்துக்கு சென்று கடிதம் கொடுத்தால் வேறு பாடப்பிரிவில் சேர அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என கபாஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply