shadow

கலாம்களை உருவாக்கும் சபரிமாலா!

15“மாணவர்களைப் புத்தகப் படிப்பில் தேர்ச்சியடைய வைப்பதுதான் தலைசிறந்த பள்ளி என்பதை நான் ஏற்க மாட்டேன். பாடத்தைத் தாண்டி அந்த மாணவர்களிடம் எந்த அளவுக்கு தேச பக்தி வளர்ந்திருக்கிறது, மாணவர்களின் தனித்திறமை என்ன, விளையாட்டில் அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள், மாணவர்களின் புதிய முயற்சி என்ன? இதற்கெல்லாம் ஆரோக்கியமான பதிலைச் சொல்லும் பள்ளிதான் உண்மையிலேயே தலைசிறந்த பள்ளி’’ என்கிறார் சபரிமாலா.

திண்டிவனம் அருகிலுள்ள வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர். பட்டிமன்றப் பேச்சாளராக இருந்து ஆசிரியப் பணிக்கு வந்தவர். சரியான போக்குவரத்துக்கூட இல்லாத வைரபுரம் பள்ளி மாணவர்கள், இப்போது கடல் கடந்தும் பேசப்படுகிறார்கள். அதற்குக் காரணம் சபரிமாலா.

எழுச்சி தரும் மாணவர் இயக்கம்

அப்துல் கலாம் மறைந்தபோது, அவரைப் போன்ற மாணவர்களை நம்மால் ஏன் உருவாக்க முடியாது என்று களமிறங்கினார் சபரிமாலா. `அப்துல் கலாம் ஆகலாம்’ மாணவர் இயக்கத்தை உருவாக்கினார். பேச்சு வல்லமை கொண்ட மாணவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இதில் சேர்த்தார். அந்த மாணவர்களுக்கு கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கக் கொடுத்தார். அவர்களைக் கொண்டே கலாமின் கருத்துகளை மடை திறந்த வெள்ளமாகக் கொட்டும் பேச்சாளர் அணிகளை உருவாக்கினார் சபரிமாலா. இவரிடம் பேச்சுப் பயிற்சி பெற்ற மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் முதல் பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்தார்கள்.

வைரபுரம் பள்ளியை மற்ற பள்ளிகளும் திரும்பிப் பார்க்க, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 75 மாணவர்கள் ‘கலாம் ஆகலாம்’ மாணவர் இயக்கத்தில் உறுப்பினரானார்கள். இவர்களைக் கொண்டு ‘கலாம் போல் ஆகலாம் மாணவர் பட்டிமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். கலாமின் நினைவு தினத்தில் ஐம்பதாவது பட்டிமன்றத்தை நிறைவு செய்திருக்கிறார்கள்.

சாதிக்கும் மாணவர்கள்

சரியாகப் பேச முடியாமல் திக்கிப் பேசும் மாணவர் ஒருவர், பட்டிமன்றத்தில் பேச ஆரம்பித்த பிறகு ஜமாய்த்துக்கொண்டிருக்கிறார். பட்டிமன்ற வருமானத்தில் கிடைத்த 15 ஆயிரம் ரூபாயில் தனது தந்தையின் கடனை அடைத்திருக்கிறார். எட்டாம் வகுப்பு மாணவி சுஜித்ரா மதுரையில் ‘திருக்குறள் தமிழ்’ என்ற தலைப்பில் 45 நிமிடம் பேசினார். அந்த உரைவீச்சைக் கேட்டு வியந்த தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று, தங்கள் பள்ளி விழாவுக்கு சுஜித்ராவைச் சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது.

24 குழந்தைப் பாடல்களைத் தொகுத்து ‘ஆடல் பாடல் ஏ.பி.எல்.’ என்ற தலைப்பில் இசை மாலையாக்கி, மாணவிகள் நளினியும் கமலியும் நடனமாடும் குறுந்தகடு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் சபரிமாலா.

தாய்மொழிப் பயிலகம்

ஆரம்ப வகுப்புகளிலிருந்தே மாணவர்கள் தமிழை இலக்கணப் பிழை இல்லாமல் வாசிக்கப் பழக வேண்டும் என்பதற்காகவே ’தாய்மொழி பயிலகம்’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார். வகுப்பறைக்குள் திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் மணக்கிறது.

தமிழன்னை தந்த வரம்!

“எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைத் தமிழன்னை தந்த வரமாக நினைக்கிறேன். கலாம் வாழ்க்கையைப் படித்த மாணவர்களிடம் வித்தியாசத்தைப் பார்க்கிறேன். அவர்கள் டியூஷன் செல்வதில்லை. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பிறருக்கு உதவ நினைக்கிறார்கள். நல்ல பண்புகள் மேலோங்கியிருக்கின்றன.

அப்துல் கலாம் அமைப்பில் உள்ள மாணவர்கள் பள்ளியை விட்டுச் சென்ற பிறகும் எங்களோடு தொடர்பில் இருக்கிறார்கள். மாணவர்களின் பேச்சுகளை நூலாக்கி, அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். கலாம் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்கிறோம். நிச்சயம் எங்களிடமிருந்தும் கலாம்கள் தோன்றுவார்கள்!’’ நம்பிக்கையோடு விடைகொடுத்தார் சபரிமாலா.

Leave a Reply