shadow

கந்தசஷ்டி கவசம் தோன்றியது இப்படித்தான்

kanda-sashti-kavasamஉலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிந்த பெரும்பாலான இந்து மக்கள் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல் அது. படிப்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தி, மன நிம்மதி தரும் மந்திர மறை நூல்! அது என்னவென்று உங்களுக்குப் புரிந்திருக்குமே!

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட..

என்று தொடங்கி கேட்கும் இடங்களிலெல்லாம் நம்மைத் திரும்ப உச்சரிக்கவைக்கும்; உள்ளத்திலும் உடலிலும் அதிர்வு தரும் ஆற்றல் மிக்க அழகு முருகனின் அருந்தமிழ்ப் பாமாலை. அதுதான் அனைவரும் அறிந்த கந்தர் சஷ்டி கவசம். இதனைப் பாடியவர் தேவராய சுவாமிகள் என்னும் அருளாளர். அவர் இக்கவசத்தைப் பாடிய பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

ஒருமுறை, பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் சென்றார் தேவராயர். மலையைச் சுற்றி கிரிவலம் வந்தார். அங்குள்ள மண்டபங்களில் உடல்நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மனநோயால் வருந்துவோர், வறுமையால் வாட்டமுற் றோர் எனப் பலர் அழுவதும் அரற்றுவதும் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் அனைவரும் நலம்பெற ஞானபண்டிதன் வழிகாட்ட வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார். பழநியாண்டவர் கோயில் மண்டபத்தில் துயில் கொண்டார். அன்றிரவு அவரது கனவில் பழநியப்பரமன் பிரசன்னமானார்.

‘‘உன் எண்ணம் ஈடேற அருளினோம்.பிணிகள் முதலான அனைத்து உபாதைகளும் நீங்கும். அதற்கு வழி உன்னிடம் உள்ளது. உலகிலுள்ளோர் அனைவரும் மந்திரமாக ஓதி இன்புற்று வாழ்வுறும் வகையில் செந்தமிழில் பாடு!’’ என்று ஆசியளித்து கந்தவேள் மறைந்தார்.

உடனே பரவசத்துடன் எழுந்தார் தேவராயர். ‘‘அரஹரா போற்றி! அடியார்க்கு எளியாய் போற்றி! சண்முகா போற்றி! சரவணபவனே போற்றி!’’ என்று ஆடிப்பாடி மகிழ்ந்தார். மயில்மேல் வலம் வரும் அயில் வேலனைப் போற்றுவோர்பால் மறலியும் அணுகமாட்டான் என்று முருகன் திருவருளை வியந்து போற்றி பாமாலை சூட்டியருளினார். அதுதான் 238 அடிகளைக் கொண்ட கந்தர் சஷ்டி கவசம் என்னும் புகழ்பெற்ற தோத்திரம்

பாலதேவராய சுவாமிகள்

கந்தர் சஷ்டி கவசம் பாடிய தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்து வல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர், அவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை என்றும், அவர் கணக்கர் வேலை பார்த்தவர் என்றும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.

வீராசாமிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை செல்வம் இல்லாமல் முருகன் திருவருளால் தேவராயர் பிறந்தார். நன்கு கல்வி கற்று வியாபார நிமித்தமாக பெங்களூரு சென்று அங்கு தமது வணிகத் தொழிலை மேற்கொண்டார். திருவாவடுதுறை ஆதினத்தில் பெரும் புலவராகத் திகழ்ந்த திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பெங்களூர் வந்தபோது தேவராயர் அவரைத் தமது இல்லத்துக்கு அழைத்து உபசரித்து மகிழ்ந்தார்.

பிள்ளையவர்களிடம் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். தாம் இயற்றிய கவிதைகளை மகாவித்வானிடம் காட்டி பிழை திருத்தம் செய்துகொள்வாராம். தணிகாசல மாலை, பஞ்சாக்ர தேசிகர் பதிகம், சேட மலை மாலை முதலிய நூல்களை தேவராயர் இயற்றியதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் எழுதியுள்ள மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வரலாற்றில் தேவராயர் அவரது மாணவர் என்பதற்கான குறிப்பு எதுவும் காணப்பெறவில்லை.

சஷ்டிக்கவசம் பாடப்பட்டது எந்த ஊரில்?

தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு பதிகளுக்கும் தனித்தனியே ஆறு கவசம் பாடியுள்ளார் என அறிய முடிகிறது. தற்போது அனைவரும் பாராயணம் செய்யும் கவசம் திருச்செந்தூரில் பாடப்பட்டது என்று கூறிகிறார்கள். ஆயினும் இக்கவசத்தின் நிறைவுப் பகுதியில் ‘பழநிமலையின் மீது’ கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிறு குழந்தை வடிவாகிய முருகப் பெருமானது செம்மையான திருப்பாதங்களைப் போற்றுகின்றேன்’ (பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி (225, 226) என்று பாடியுள்ளார். எனவே இக்கவசம் பழநியில் பாடப்பெற்றது என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றையும், இவ்வரிகளையும் ஆதாரமாகக் கொள்ளலாம்.

மேலும் ‘எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாதோட நீ எனக்கு அருள்வாய் (156, 157) மைந்தன் என்மீது உன் மனமகிழ்ந்து அருளித் தஞ்சமென்று அடியார் தழைத்திட அருள்செய்! (198, 199) எனைத்தடுத்து ஆட்கொள் எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் ‘வேலவா போற்றி’ (227,228) என்ற வரிகள் மூலம் பழநிப் பரமன் ஆட்கொண்டு இக்கவசம் பாட வைத்ததை உறுதியாகக் கூறலாம். இப்பாமாலையை சிரகிரி எனப்படும் சென்னிமலையில் அரங்கேற்றியதாகச் சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் காணப்பெறவில்லை.

இதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறு முறை ஓதி ஜபம் செய்து திருநீறணிய எல்லா நோயும் நீங்கும்; நவக்கிரகங்கள் மகிழ்ந்து நன்மை செய்வர்; என்றும் இன்பமுடன் வாழ்வர் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் தேவராயர்.
‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தைப் பொருத்தி இதனைப் பாடியுள்ளார் என்று கருத முடிகிறது. முருகனடியார்கள் அனைவரும் விரும்பிப் படிக்க வேண்டும் என்பதற்காக வள்ளியம்மையாரின் குழந்தையாகிய தேவராயன் இயற்றியதாகக் (கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை) குறிப்பிடுகிறார். கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது.
ஞானாசாரியார் ஒருவரின் மூலம் அந்த அடிகளின் உண்மைப் பொருள்களைத் தெளிவாக உணரலாம். உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.

Leave a Reply