shadow
கண்களைப் பாதிக்கும் எல்.இ.டி. விளக்கொளி. தவிர்ப்பது எப்படி?
மின்சக்தியைச் சேமிக்க எல்இடி விளக்கைப் பயன்படுத்துங்கள் என்று அரசே பிரசாரம் செய்து வருகிறது. மானிய விலையில் எல்இடி விளக்குகள் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. இன்று, பெருவாரியான மக்களால் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில்,  “எல்.இ.டி. விளக்குகள் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்றாலும், அவற்றிலிருந்து வெளிவரும் நீல நிறக் கதிர்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன, சருமத்தையும் பாதிக்கின்றன..”. என்று ஒரு செய்தி பரவி வருகிறது. 
எல்.இ.டி.
இந்த செய்தி உண்மையா என்ற கேள்விக்குப் பதில் தேடும் முன்பு எல்.இ.டி என்றால் என்ன என்று பார்த்து விடலாம்.
‘Light-emitting diode’  என்பதன் சுருக்கமே எல்.இ.டி(LED ). இந்த தொழில்நுட்பம் மின் விளக்குகளில் மட்டுமல்ல… லேப்டாப், செல்ஃபோன், குளிர்சாதனப் பெட்டி, தெரு விளக்குகள், டிராஃபிக் சிக்னல்கள், டார்ச் லைட்டுகள், எமர்ஜென்சி விளக்குகள் என நாம் அன்றாடம் பயன்படுத்துகிற, பல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. விலை சற்று அதிகமானாலும், அதிக நாள்கள் உழைக்கும், மின்கட்டணம் குறையும் என்பதுபோன்ற சில நம்பிக்கைகளால் தான் மக்கள் இந்த மின் விளக்குகளை விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். இச்சூழலில் எல்.இ.டி விளக்குகள் பற்றி எதிர்மறையான செய்திகள் பரவுவது அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. 
கண் பாதிப்பு
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. அடிக்கடி குறைந்த மின் அழுத்தமும் ஏற்படுகிறது. குண்டு பல்புகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு என்று கூறப்படுவதால் மக்கள் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் எல்.இ.டி தொழில்நுட்பத்தில் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரத் தொடங்கி விட்டன. நம் வாழ்க்கையே எல்இ.டியை சார்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில் அதனால் கண்களுக்கு பாதிப்பு வரும், சருமம் பாதிக்கும் என்றெல்லாம் செய்திகள் பரவுவதால் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.   
உண்மையில், எல்.இ.டி. விளக்குகள் மற்றும் எல்.இ.டி தொழில்நுட்பத்தில் இயங்கும் டி.வி, கம்ப்யூட்டர், மொபைலைப் பயன்படுத்துவது நல்லதா? அதனால் கண்களுக்குப் பாதிப்பு என்ற செய்தி உண்மையா? 
கண்மருத்துவர் இந்துமதி பவுல்துரையிடம் பேசினோம். 
“குளோபல் வார்மிங் பிரச்னைக்கு முக்கியக் காரணமே நாம் பயன்படுத்திய குண்டு பல்புகள்தான் என்று கூறப்பட்டதால் பெரும்பாலான மக்கள் எல்.இ.டி பல்புகளுக்கு மாறியிருக்கிறார்கள்.  எல்.இ.டி.விளக்குகளில் மின்காந்த அலைக்கற்றைத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. எந்தவகை மின்சாதனம் என்பதைப் பொறுத்து, மின்காந்த அலைகள் வித்தியாசப்படும். சில விளக்குகளின் ஒளி அலைக்கற்றையில் சேரும்போது, கண்ணுக்கு தெரியாத அகச்சிவப்பு (இன்ஃப்ரா-ரெட்) கதிர்கள் வெளிப்படும். இந்த அகச்சிவப்புக் கதிர்கள் கண்களைப் பாதிக்கும்.
லேப்டாப்
பெரும்பாலும் நீல நிற விளக்குகளில் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது.  எல்.இ.டி. டிவி, செல்ஃபோன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தும்போது  இதுமாதிரியான பாதிப்புகள்  ஏற்பட வாய்ப்புண்டு.  அதேநேரத்தில் எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்துதான் பாதிப்பின் வீரியம் அமையும். தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ரெட்டீனாவில் உள்ள ஃபோட்டோ-ரெசிப்டார் (Photo Receptors) மற்றும் மேக்யூலா (Macula) பாதிப்படைந்து பார்வையில் பாதிப்பு ஏற்படலாம்.  சில நேரங்களில் நரம்பு சார்ந்த  பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  வெள்ளை நிற விளக்குகளைப் பொறுத்தவரை பெரிதாக பாதிப்பு இருக்காது. 
ஆனால், எரியும் விளக்குகளை நேரடியாகக் கண்களால் பார்த்தால் பாதிப்பு வர வாய்ப்புண்டு. பார்க்காத பட்சத்தில் பிரச்னையில்லை. எல்.இ.டி. டி.வியை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது, எல்.இ.டி லேப்டாப்களை இடைவெளியின்றி தொடர்ந்து பயன்படுத்துவது, எல்.இ.டி செல்ஃபோன் திரைகளை தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். எல்.இ.டி விளக்குகளால் சருமப் பாதிப்பு வரும் என்பது நிரூபிக்கப்படவில்லை..” என்றார் அவர்.

Leave a Reply