shadow

ஒரே சந்நிதியில்… 10 அவதாரங்கள்! – மாசி மகத்துவம்

திருநெல்வேலி – தூத்துக்குடி மார்க்கத்தில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லநாடு. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள `அகரம்’ கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீஅஞ்சேல் தசாவதாரப் பெருமாள் ஆலயமும், இந்த ஆலயத்தில் மாசி மாதம் வளர்பிறை துவாதசி திருநாளில் நடைபெறும் `தசாவதார ஜயந்தி’ வைபவமும் பிரசித்திப்பெற்றவை.

அற்புதமான இந்த வைபவத்துக்குக் காரணமாக, கோயிலின் தலபுராணம் சொல்லும் திருக்கதை சுவாரஸ்யமானது.

முற்காலத்தில், இந்த அகரம் கிராமத்தில் வசித்துவந்த அந்தணத் தம்பதிக்கு `மித்ரசகா’ என்ற மகன் பிறந்தான். மிகவும் சூட்டிகையாகத் திகழ்ந்த மித்ரசகா, வேதங்களோடு புராண, இதிகாச காவியங்களையும் கற்றுத்தேர்ந்தான்.

அந்தக் காலத்தில், அகரம் கிராமத்தில் தினமும் தெய்விக நாடகங்களும் பாகவதக் கச்சேரியும் நடைபெறும். ஒருமுறை இந்தக் கிராமத்துக்கு வந்த நாடகக்குழு ஒன்று, பல நாள்கள் தங்கியிருந்து ராமாயணக் கதையை நாடகமாக நடத்தியது. அந்த நாடகத்தை தினமும் தவறாமல் கண்டு ரசித்துவந்த மித்ரசகாவுக்கு, தானும் நாடகக்குழு ஒன்று அமைத்து ஸ்ரீமந் நாராயணனின் புகழைப் பரப்ப வேண்டும் என்று ஆசை பிறந்தது. எனவே, நண்பர்களை ஒன்றிணைத்து நாடகக்குழு ஒன்றை உருவாக்கினான். நாடகத்துக்கு அவன் தேர்ந்தெடுத் தது தசாவதாரக் கதையை.

விரைவில் அகரம் கிராமத்தில் அரங்கேறிய நாடகத்தின் புகழ், எல்லை கடந்தும் பரவியது. இந்த நிலையில், விஷ்ணு பக்தரான காஷ்மீரத்து மன்னன் குங்குமாங்கதன், மித்ரசகாவின் பெருமையை அறிந்து, தனது நாட்டுக்கும் வந்து அந்த நாடகத்தை நடத்தும்படி கேட்டுக் கொண்டான். மன்னனின் அழைப்பை ஏற்ற மித்ரசகா, தன் குழுவினருடன் காஷ்மீரத்துக்குச் சென்று நாடகம் நடத்தினான். மித்ரசகாவின் தசாவதார வேடங்களில், சாட்சாத் பெருமாளே எழுந்தருள்வதாகக் கருதி போற்றினார்கள் காஷ்மீரத்து மக்கள். தினமும் நாடகத்தை ரசித்துவந்த மன்னனின் மகள் சந்திரமாலினி, மித்ரசகாவிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத் தாள். தனது விருப்பத்தைத் தந்தையிடமும் பகிர்ந்து கொண்டாள். அதைக்கேட்டு மிகவும் அகமகிழ்ந்த மன்னன், அவளை மித்ரசகாவுக்குத் திருமணம் செய்துவைத்தான். அதன்பிறகு, தம்பதி சமேதராக இருவரும் சேர்ந்து பெருமாளின் தசாவதாரப் பெருமைகளை உலகெங்கும் பரப்பினர்.

காலங்கள் ஓடின. வயது முதிர்ந்ததும் மனைவி யுடன் சொந்த ஊரான அகரத்துக்கே வந்து சேர்ந்தான் மித்ரசகா. அங்கே தினமும் தாமிரபரணி யில் நீராடி, துதிப்பாடல்கள் பாடி பெருமாளைத் தரிசித்து வந்தனர் இருவரும். இந்நிலையில் ஒருநாள் மித்ரசகா பரமபதம் அடைந்தான். சந்திரமாலினி மிகவும் வருந்தினாள். கணவனின்றி வாழவே பிடிக்கவில்லை அவளுக்கு. ஒருநாள், நதி தீரத்துக்குச் சென்றவள் உயரமான ஒரு பாறையின் மீது ஏறி, அங்கிருந்து ஆற்றில் குதித்தாள். ஆற்று வெள்ளம், அவளை வெகு வேகமாக இழுத்துச் செல்ல ஆரம்பித்தது. இந்த நிலையில், ஓரிடத்தில் ஆற்றின் நடுவே திடுமென தோன்றிய முதியவர் ஒருவர், சந்திரமாலினியைத் தன் கைகளில் ஏந்திக் காப்பாற்றிக் கரைசேர்த்தார். மயக்கம் தெளிந்த சந்திரமாலினி, தன்னைக் காப்பற்றிய முதியவரிடம், ‘‘என்னை ஏன் காப்பாற்றினீர்கள்?’’ என்று கேட்ட துடன், தன் நிலையைச் சொல்லி அழுது புலம்பவும் செய்தாள். அப்போது, பெரியவர் மறைந்துபோக, ஸ்ரீமந் நாராயணனே அவளுக்குக் காட்சி தந்தார். ‘‘அஞ்சேல்… சந்திரமாலினி!’’ என்று அபயம் அளித்தவர், ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, தினமும் அதை உச்சரித்து வரும்படி அருள்புரிந்து மறைந்தார்.

தெய்வ தரிசனத்தால் பூரித்துப்போனாள் சந்திரமாலினி. தாமிரபரணி நதிக்கரையில், பகவான் உபதேசம் செய்த பவித்ரமான அந்த இடத்தில் தியான ஆசிரமம் அமைத்து (இந்த இடத்தில்தான் திருக்கோயில் அமைந்துள்ளது), அவர் அருளிய மந்திரத்தை ஜபித்துவந்தாள். அத்துடன், மாதம்தோறும் வரும் ஏகாதசி விரதங் களையும் முறைப்படி கடைப்பிடித்து வந்தாள்.

நாள்கள் கழிந்தன. ஒரு மாசி மாதத்தின் வளர்பிறை துவாதசி திருநாளில், பிரம்மமுகூர்த்த வேளையில் நதியில் நீராடிவிட்டு வந்த சந்திர மாலினி ஏகாதசி விரதத்தைப் பூர்த்தி செய்து, மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாள். அப்போது நிகழ்ந்தது அந்த அற்புதம்! வானில் சூரியகோடிப் பிரகாசத்துடன் ஓர் ஒளி தோன்ற, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என பத்து அவதாரங் களும் ஒன்றிணைந்த கோலத்தில் அவளுக்குக் காட்சி தந்தார் பகவான். மேலும் அவளிடம், ‘‘வேண்டும் வரம் என்ன?’’ என்றும் வினவினார்.

‘‘தாமிரபரணியில், இந்த தசாவதார தீர்த்தக் கட்டத்தில் நீராடி, தங்களின் பத்து அவதாரங் களையும் வழிபடுவோருக்கு பித்ரு சாபம் முதற் கொண்டு சகலவிதமான சாபங்களில் இருந்தும் விமோசனம் அளிக்க வேண்டும்’’ என்று வேண்டி னாள் சந்திரமாலினி. ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்று அருளிய பெருமாள், அவளுக்கும் வைகுந்தப் பேறு கிடைக்க வரம் தந்து மறைந்தார். அதன்படி, அதே மாசி துவாதசி திருநாளில் சந்திரமாலினி முக்தி பெற்றாள்.

தாமிரபரணி நதி தீரத்தில், சந்திரமாலினி தசாவதார தரிசனம் பெற்ற இடம், ‘தசாவதார தீர்த்தக்கட்டம்’ என்ற பெயரில் விளங்குகிறது. மேலும், பிரம்மன் நீராடியதால் `பிரம்ம தீர்த்தம்’; சிவனார் எழுந்தருளிய தீர்த்தமாதலால் `சம்பு தீர்த்தம்’ ஆகிய பெயர்களும் இந்த தீர்த்தக் கட்டத்துக்கு உண்டு. இதுகுறித்த மகிமையை வேதவியாசர் அருளிய தாமிரபரணி மகாத்மியம் (60-வது அத்தியாயம்) அழகுற விளக்குகிறது.

தாமிரபரணியின் கரையில் அழகுற அமைந் திருக்கிறது ஆலயம். மூலவர், அஞ்சேல் தசாவதாரப் பெருமாளாகக் காட்சி அளிக்கிறார். சந்திர மாலினிக்கு ‘அஞ்சேல்’ என அபயம் அளித்ததால் இப்படியொரு திருநாமம் ஸ்வாமிக்கு. பெருமாள், முதலில் தேவியர் இல்லாமல் காட்சியளித்து, அதன் பிறகே தசாவதாரக் கோலங்களைக் காட்டி அருளினார் என்பதால், இத்தலத்தில் தேவியருடன் இல்லாமல் தனியாகவே காட்சி தருகிறார். ஸ்தல விருட்சம் அரசமரம். உற்சவர் ஸ்ரீதேவி-பூதேவியுடன் கல்யாண ஸ்ரீநிவாஸராக அருள்கிறார்.

கோயிலின் வலது மூலையில் சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் பட்டாபிஷேகக் கோலத்தில் அருளும் ஸ்ரீராமனும், இடது மூலையில் ருக்மிணி, சத்யபாமாவுடன் ஸ்ரீவேணுகோபாலனும் அருள் கிறார்கள்; விஸ்வக்சேனரும் அருகில் உள்ளார்.

தனிச்சந்நிதியில் திகழும் – ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தசாவதார மூர்த்தியர் தரிசனம், இந்தக் கோயிலின் சிறப்பம்சம். இவர்களில், மச்ச அவதார மூர்த்தி-கேது தோஷம்; கூர்ம மூர்த்தி-சனிதோஷம்; வராக மூர்த்தி-ராகு தோஷம்; நரசிம்மர் மற்றும் பலராமர் – குரு தோஷம்; ஸ்ரீராமன் – சூரியனால் ஏற்படும் பாதிப்புகள்; ஸ்ரீகிருஷ்ணர் – சந்திரனால் ஏற்படும் தோஷங்கள்; கல்கி அவதார மூர்த்தி – புதன் தோஷம்… இந்த அடிப்படையில் ஒவ்வொரு மூர்த்தியும் ஒரு கிரக தோஷத்தைப் போக்கும் தெய்வங்களாகத் திகழ்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கல்கி அவதாரம் எடுக்குமுன்பே, சந்திரமாலினிக்கு அந்த அவதாரத்தைக் காட்டி அருளிய பெருமையும் இந்தத் தலத்துக்கு உண்டு.

சந்திரமாலினிக்குத் தசாவதார கோலம் காட்டியருளிய திருநாளே ‘தசாவதார ஜயந்தி’ வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. மாசி மாதம், வளர்பிறை துவாதசி திருநாளன்று இந்த வைபவம் நடைபெறுகிறது. அன்று மூலவருக்கும், உற்சவருக்கும் 21 வகை திரவியங்களால் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். மாலையில் கருடசேவை நடைபெறும். இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, பெருமாளைத் தரிசித்து வழிபட்டு வந்தால், நம் இல்லத்தில் இன்னல்கள் யாவும் நீங்கும்; திருவருள் கைகூடும்.

Leave a Reply