shadow

ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கும் திட்டம்


தமிழகம் முழுவதும் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதுவரையில் கடந்த 6 ஆண்டுகளாக 2.46 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 73,558 பேருக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தகுதி சான்றிதழ் எதும் இல்லாத 1 லட்சம் திறன் பெற்ற தொழிலாளர்களை தேர்வு செய்து, திறன் சான்றிதழ் அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிகழாண்டில் 2017-18 இல் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டுத் திறன் பயிற்சி மையம்: இது தவிர கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் மத்திய அரசு நிதி உதவியுடன் இந்தியப் பன்னாட்டு திறன் பயிற்சி மையங்களை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வேலை தேடுவோருக்கு மேம்பட்ட பயிற்சியும், அயல் மொழிப் பயிற்சியும் இம்மையங்கள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உதவியுடன் வேலைவாய்ப்பும் உருவாக்கித் தர முடியும்.

வேலைவாய்ப்பு உதவித் தொகை: வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையானது இந்த ஆண்டில் இருந்து இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இத்திட்டத்தில் பயனடையும் இளைஞர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி, தகுதிக்கு ஏற்ப திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெற்றுத் தரவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply