shadow

“ஐ.டி. பணிநீக்கத்தால் அதிகரிக்கும் பெண்களின் மன உளைச்சல்!” – கலங்கடிக்கும் உண்மை

அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்தியாவின் ஐ.டி.நிறுவனங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குத் தேவையான சேவையை வழங்கி வருகின்றன. அந்நாடுகளில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் அங்கு இருப்பவர்களுக்கு வேலையில்லாத சூழல் ஏற்படுகிறது. அதனால் அந்நாட்டினருக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, வெளிநாட்டிலிருந்து, அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து, ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிய வருபவர்களுக்கு விசா வழங்குவதற்கு பல்வேறு நிபந்தனைகளை அந்நாடுகள் விதித்துள்ளன. அதனால் இங்கிருந்து அங்கு பணிக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய ஐ.டி.நிறுவனங்களுக்கு வரும் புராஜெக்ட்டுகளின் எண்ணிக்கையும் குறையலாம் என்கிறார்கள். இதனால் இந்தியாவில் உள்ள இன்போசிஸ், காக்னிசென்ட், விப்ரோ உட்பட பல்வேறு ஐ.டி.நிறுவனங்கள் `லே ஆஃப்’ என்ற பெயரில் கடந்த மாதத்திலிருந்து ஆள்குறைப்பு செய்யத் துவங்கிவிட்டன. இந்தப் பணி நீக்கத்தால் இந்தியாவில் 56 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்பட இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்த ஆட்குறைப்புக்கு நிறுவனங்கள் கூறும் ஒரே காரணம்… அப்பணியாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பது மட்டும்தான். ‘‘புவர் பெர்ஃபாமன்ஸ்’ என முத்திரை குத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். யாராவது போர்க்கொடி தூக்கினால் அவர் எந்த நிறுவனத்திலும் பணிபுரிய இயலாதபடி `நாஸ்காம்’ அவரை பிளாக் லிஸ்ட் பண்ணிவிடும் என்ற அதிர்ச்சித் தகவலும் பணியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

`எதனால் இந்த ஆள்குறைப்பு… இதற்குத் தீர்வு என்ன?’ என்பது போன்ற கேள்விகளுடன் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத் தலைவர் பரிமளாவிடம் பேசினோம்…

“ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நவீனத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களின் திறன்களை மதிப்பிட ‘அப்ரைசல்’ செய்கின்றன. இந்த அப்ரைசல் ஆறு மாதத்துக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அப்ரைசலில் குறைவாக மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலை எப்போதும் தயாராக வைத்திருக்கும். ஒரு நிறுவனம் ஆள்குறைப்பு செய்யத் தொடங்கும் போது இதனையே சாக்காகக் கொண்டு அனைத்து நிறுவனங்களும் அப்பணியை மேற்கொள்ளும். இதில் பணியில் சேர்ந்து 3 ஆண்டுகளுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவர். சில சமயங்களில் இந்த ஆள்குறைப்பு வேறுவிதமாக நடைபெறும். எடுத்துக்காட்டாக, பெரிய நிறுவனங்களின் பணிகளைச் சின்ன நிறுவனங்கள் செய்யும்.parimala அச்சமயம் சின்ன நிறுவனங்களில் பணிகளைச் செய்ய தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இருக்கமாட்டார்கள். அச்சமயங்களில் பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்களை `லே ஆஃப்’ செய்து சிறிய நிறுவனங்களுக்கு அப்படியே பணிமாற்றம் செய்வார்கள். பெரிய நிறுவனங்களில் பயிற்சியளிக்க தனி யூனிட் இருப்பதால் புதிதாகப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பணிக்கு அமர்த்திக்கொள்வார்கள். இதன் மூலம் அனுபவம் வாய்ந்த பணியாளர்களின் சம்பளத் தொகையில் பாதியை மட்டும் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்கினால் போதும். இதன்மூலம் பெரிய நிறுவனங்களின் பொருளாதாரச் சுமையும் குறையும்.

நம் நிறுவனங்கள் வெளிநாடுகளை நம்பி இருப்பதால் அங்கு ஏற்படும் மாற்றம் நம்மையும் உடனே பாதிக்கிறது. சில சமயங்களில் ஒரு புராஜெக்டை எதிர்பார்த்து ஆட்களை நியமனம் செய்திருப்பார்கள். அச்சூழலில் புராஜெக்ட் கிடைக்காமல் போனால் நிலைமையைச் சமாளிக்க நிறுவனங்கள் உடனே ஆள்குறைப்பு நடவடிக்கையைக் கையில் எடுத்துக்கொள்ளும். இந்நிலையைச் சமாளிக்க அரசின் தலையீடு அவசியம். ஐ.டி.நிறுவனங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தைத் தவிர்க்க இயலாது. அதே நேரத்தில் வேலைபார்ப்பவர்களையும் தவிர்க்க இயலாது. திடீரென ஆள்குறைப்பு செய்வதால் தனிநபர் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு, சமூகப் பொருளாதாரமே பாதிக்கப்படும். இவ்வாறான சூழ்நிலைகளில் அரசின் பிரதிநிதிகள் ஐ.டி.நிறுவனங்களின் கமிட்டியில் இடம் பெற வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் ஆள்குறைப்பு செய்யப்பட இருக்கின்ற பணியாளர்களையும், நிறுவனப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும். அவ்வாறு செய்வதால்தான் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். திடீரென பணியாளர்களை அழைத்து ‘புவர் பெர்ஃபாமன்ஸ்’ எனக் கூறி ஒரே நாளில் வெளியேற்றுகின்றனர். அதனால் எத்தனை பேர் குறைக்கப்பட்டுள்ளனர்; இனி எவ்வளவு பேர் குறைக்கப்படவுள்ளனர் போன்ற எந்தப் புள்ளிவிவரத்தையும் எடுக்க முடிவதில்லை. அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்குக்கூட நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை.

ஐ.டி நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடக்கும் என்ற அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலையை விட்டு அடுத்த வேலைக்கு நகர்வது ஆண்களைப் போல பெண்களுக்கு எளிதில்லை. பயணம், குடும்பம் சார்ந்த பொறுப்புகள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, குடும்பத்தின் செலவு, சேமிப்புத் திட்டம் எனப் பல விஷயங்கள் இதில் அடங்கும். ஒரு வேலையை இழந்து அடுத்த வேலைக்குக் காத்திருக்கும் காலகட்டமும் பெண்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். கணவன் – மனைவி இருவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருக்கும்போது இந்தக் கவலை இன்னும் கூடும். `வேலை போய்விட்டால்…’ என்ற கேள்வியே அவர்களை மன அழுத்தத்தில் தள்ளும். பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தும். ஏற்கெனவே வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் கழுத்தை இறுக்கும். குடும்பத்தில் மிகப்பெரிய நிதிப்பற்றாக்குறை என்ற புயலை இந்தச் சூழ்நிலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் ஆண்களைவிட பெண்கள் அடையும் மனச்சிக்கல்கள் அதிகம்’ என்கிறார் பரிமளா.

Leave a Reply