shadow

எது வேலை வாங்கித் தரும்?

கையில் பட்டத்தோடு கல்லூரியைவிட்டு வெளியே நடைபோட்டாலே வேலை கிடைத்துவிடும் என நம்ப வேண்டாம். ‘பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்’ என்கிற வேலைக்கான அழைப்பைப் பார்த்தவுடன் விண்ணப்பிப்பதற்கு மட்டுமே அது உதவும். பட்டப்படிப்பிலும் உங்களுடைய முக்கிய பாடங்களிலும் நீங்கள் உயர்ந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் அது வேலைக்கான அடிப்படை தேவைக்கு வேண்டுமானால் கைகொடுக்கலாம். ஆனால், அது மட்டுமே வேலையை வாங்கித் தந்துவிடாது. ஏனென்றால், உங்களைப்போலவே ஏகப்பட்ட பேர், அந்த வரிசையில் நின்றுகொண்டிருப்பார்களே!

எதுவும் நிரந்தரம் அல்ல

இன்றைய வேலை உலகமானது மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு வேலையில் சேர்ந்தோம் பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை அதையே செய்தோம் என்கிற காலச் சூழலில் நாம் இல்லை. ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொன்றுக்கு இடம் பெயர்ந்து வெவ்வேறு விதமான வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிட்டது. ஆகவே, புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வமும், சூழலுக்கு ஏற்றாற்போல நம்மைத் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றலும், சுற்றும் முற்றும் நடப்பவற்றை அறிந்துவைத்திருக்கும் திறனும், ஒரு சேரப் பெற்ற பட்டதாரிகளைத்தான் இன்றைய நிறுவனங்கள் தேடுகின்றன. வேலைக்கான ஆற்றல் என்பது இவைதான்.

வேலைக்கான ஆற்றல் ஏன் முக்கியம்?

கிட்டத்தட்ட 70 சதவீத வேலைகளுக்கு எந்தப் பாடத்தில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அறிவிப்புகளிலேயே இதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதிலிருந்தே படிப்பைத் தாண்டி மற்றத் திறன்கள் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறதல்லவா! கூடுதல் திறன்கள் எனும்போது பகுதி நேர வேலை செய்த அனுபவம், படிக்கும்போதே நிறுவனத்தில் பணியிட பயிற்சி பெற்ற (இன்டர்ன்ஷிப்) அனுபவம், தன்னார்வமாகப் பொதுப் பணிகளில் ஈடுபடுதல், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் ஆகியவற்றை வைத்து ஒருவரது தனித்திறமை மதிப்பீடு செய்யப்படுகிறது.

விண்ணப்பப் படிவத்திலேயே இவற்றை நீங்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இவற்றை ஆதாரமாக வைத்துத்தான் நேர்முகத் தேர்விலும் பல கேள்விகள் கேட்கப்படும். அதேநேரத்தில் நீங்கள் எப்படிப்பட்ட பணிவாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அதற்கு ஏற்ற மாதிரியான தனித்திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம்.

அப்படியானால் வேலை தரும் நிறுவனங்கள் முதலில் நம்மிடம் எத்தகைய திறன்களை எதிர்ப்பார்க்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் இல்லையா! அடிக்கடி சொல்லப்படும் திறன்கள் சிலவற்றை முதலில் பார்ப்போம். தொடர்பாற்றல், குழுவாக இணைந்து பணியாற்றுதல், தலைமைப் பண்பு, தன்னார்வம், இணக்கமாகச் செயல்படுதல், உத்வேகம், பிரச்சினைக்குத் தீர்வு காணும் முனைப்பு ஆகியவை அனைத்து விதமான வேலைகளுக்கும் அவசியம்.

ஒவ்வொரு கட்டத்திலும்…

இவ்வளவுதானா எனத் தோன்றுகிறதா! இவை ஒவ்வொன்றும் வெறும் வார்த்தைகள் இல்லையே. உதாரணமாக, தலைமைப்பண்பு என்பது பல பண்புகளை உள்ளடக்கியது. குழுவோடு இணைந்து பணியாற்றுதல், திட்டமிடல், ஒருங்கிணைத்தல், முடிவெடுத்தல், தொடர்பாற்றல் – இப்படிப் பலவற்றை உள்ளடக்கியது. இவற்றில் தொடர் பாற்றல் என்பதில் குழுவினரோடு அடிக்கடி பேசுவது, தொலைபேசியில் சரியாகக் கருத்தைப் பரிமாறிக்கொள்வது, ஒரு கருத்தைக் குழுவினரிடம் விளக்குவது, தனிநபர்களிடம் சரியாகக் கருத்தை முன்வைப்பது – இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கும். இப்படி ஒரு ஆற்றலை மேம்படுத்தும்போது இன்னும் பல ஆற்றல்கள் கைவரப்பெறும்.

இதேபோல வேலைக்கான ஒவ்வொரு கட்டத்தில் சில குறிப்பிட்ட திறன்கள் அவசியம். அவை:

# ஆள்சேர்ப்பின்போது வெற்றி பெற நேர்முகத் தேர்வின் நுட்பங்கள், கரிகுலம் விட்டே/ ரெஸ்யூம் வடிவமைப்பு போன்றவற்றை அறிந்திருப்பது அவசியம்.

# பணியில் சேர்ந்த ஆரம்பக் கட்டத்தில் சூழலுக்கு ஏற்ப ஒத்துப்போகும் பண்பு, உளச்சார்புத் திறன், உந்துதல், கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளிட்டவை கட்டாயமாகத் தேவை.

# மேம்படுத்தும் ஆற்றல், ஒத்துப் போகும் பண்பு, சுயசார்புத் தன்மை, நம்முடைய பலம்-பலவீனங்களை அறிந்துவைத்திருப்பது, வேலையைத் தேடிக் கண்டுபிடித்தல், உங்களுடைய திறன்களை நிறுவனத்திடம் சரியான முறையில் சந்தைப்படுத்துதல் ஆகியவை எப்போதுமே வேலைக்குத் தகுதியானவராக மாறவும், பணியில் நிலைத்து நிற்கவும் அவசியமானவை.

# பணிவாழ்க்கைக்குத் தேவையான தகவல்களைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுதல், நேர்மறையான அணுகுமுறை, கவனிக்கும் பண்பு, நிர்வகிக்கும் திறன், தன்னம்பிக்கை, பொறுப்பேற்பு, மென்பொருள் அறிவு, நேர மேலாண்மை, தோற்றத்தில் மெருகேற்றுதல், சரியான உடல் அசைவு ஆகியவை இன்றைய பணிச் சூழலுக்குத் தேவையாக உள்ளன.

இவை அனைத்தையும் சரியாகத் திட்டமிட்டு வடிவமைத்த பிறகு,

# உங்களுடைய பணிவாழ்வைத் தேர்ந்தெடுங்கள்.

# அந்தப் பணிக்கு எத்தகைய திறன்களும், அறிவும், அனுபவமும் தேவை என்பதைக் கண்டுபிடியுங்கள்.

# வேலை சந்தையைக் கூர்மையாகக் கவனியுங்கள்.

# ஊழியர்களைத் தேர்ந்தெடுக்க நிறுவனங்கள் கையாளும் முறையையும் புரிந்துகொள்ளுங்கள்.

# உங்களுடைய பலத்தை முன்னிறுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து பயிற்சி எடுங்கள்

Leave a Reply