shadow

உலகையே திரும்பிப்பார்க்கவைத்த புகைப்படக் கலைஞர்!

சிரியாவில் நடந்த வன்முறைத் தாக்குதலின்போது, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், தன் கேமராவைக் கீழேவிடுத்து, தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவனைத் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் வலுத்துவரும் நிலையில், வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து சிரிய மக்களை வதைத்து வருகின்றன. இந்த நிலையில், போரினால் முற்றுகையிடப்பட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறிவருகின்றனர். பலரும் அகதிகளாக இடம்பெயர்கின்றனர். இதேபோல சிரியாவில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பேருந்துகளில் இடம்பெயரும்போது நடந்த தாக்குதலில், 126 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அறிந்த பத்திரிகையாளர்கள், அங்கு செய்திசேகரிக்கச் சென்றபோது, குழந்தைகள் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடியதைப் பார்த்துள்ளார், புகைப்படக் கலைஞர் அபத் அல்காதர் ஹபக்.

புகைப்படம் எடுக்க மனமின்றி, தன் சக புகைப்பட நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு, காயமடைந்தவர்களை மீட்டுள்ளார் ஹபக். ஒவ்வொருவருக்கும் உயிர் இருக்கிறதா இல்லையா எனப் பரிசோதித்து ஆம்புலன்சில் ஏற்றிவிட்டவர், ஒரு கட்டத்தில் வன்முறையின் கோரம் கண்டு மண்டியிட்டுக் கதறி அழுதுள்ளார். இந்தத் தாக்குதலில் மொத்தம் 68 குழந்தைகள் பலியாகியுள்ளனர். ஆனால், தன்னால் முடிந்தவரை பலரையும் காப்பாற்ற முடிந்தது எனக் கூறுகிறார், ஹபக்.

’வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத காட்சிகளைக் கண்டேன்’ என வன்முறைத் தாக்குதல்கள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார், அந்த புகைப்படக் கலைஞர்

Leave a Reply