shadow

உங்கள் பாக்கெட்டில் ஒரு உளவாளி!

1நம்முடைய உலகம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்னர் வரை, பெரும்பாலும் தகவல் பரிமாற்றத்திற்காகவே சாதாரண போன்கள் பயன்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வருகைக்கு பின்னர், இணையம் மட்டுமல்ல, மனிதனின் அன்றாட தேவைகளை தீர்த்துக்கொள்ளும் ஒரு அத்தியாவசியமான பொருளாக ஸ்மார்ட்போன்கள் மாறியிருக்கின்றன. நீங்கள் பாக்கெட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனும் ஒரு உளவாளி என்றால் நம்புவீர்களா நீங்கள்?

ஸ்மார்ட்போனை நாம் உபயோகப்படுத்த ஆரம்பிக்கும்போது தேவையான செயலிகளை (ஆப்ஸ்) பதிவிறக்கம் செய்கிறோம். இந்த செயலிகள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்ததா என்றால் கேள்விக்குறிதான். நாம் உபயோகப்படுத்தும் ஒருசில செயலிக்கு நாம் அனுமதி (I agree) கொடுத்த பின்னரே ஸ்மார்ட்போனில் ‘இன்ஸ்டால்’ செய்ய முடியும். என்றாவது ‘Terms& Conditions-ஐ நாம் முழுதாகப் படித்துப் பார்த்திருக்கிறோமா? ‘I agree’ கொடுப்பதற்கு முன்னர் நாம் யாரும் அதை படித்து பார்ப்பதில்லை. அதில் சில செயலிகள், நமது ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்களையும், ஸ்மார்ட்போன் பயணம் செய்யும் இடங்களையும் அறிந்துகொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டு இருக்கும். இவை நமது தனிப்பட்ட தகவல்களை, இன்னொரு நிறுவனத்திற்கு அனுப்புகின்றன.

தற்போது ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகள் மூலம், ஒருவரை எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் உருவாக்கிய ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு மொபைல் போனின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வு குறித்து பேசிய நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் குவேரா நோபிர், ” கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களைப் பதிவிறக்கும் பிளே ஸ்டோரில், 25 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தி, எந்தவொரு நபரும் ஒரு செயலியை மக்களின் பயன்பாட்டுக்காக பதிவேற்ற முடியும். அந்த செயலிகளின் நம்பகத்தன்மை குறித்து பயன்படுத்துவோர் யாரும் சோதிப்பதில்லை. எனவே ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மை குறித்து, சிந்தித்து முடிவெடுப்பது சிறந்தது” என்று சொல்கிறார். மேலும், இதுபோன்ற ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஒருவரின் அனுமதியின்றி கேமிரா மூலம் கண்காணிக்க முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒரு செயலியை பதிவிறக்கும்போது அதன் நம்பகத்தன்மை குறித்து தீவிரமாக ஆலோசித்து, அதன் தேவை இருந்தால் மட்டுமே இன்ஸ்டால் செய்யலாம். இல்லையெனில் அவற்றை தவிர்ப்பது நல்லது!

Leave a Reply