shadow

இளமை .நெட்: இன்னும் இன்னும் நோக்கியா..!

புதிய அறிமுகங்கள் கோலோச்சும் கைபேசி உலகில், இப்போது பழைய கைபேசி ஒன்றின் மறு அறிமுகம் தொடர்பான செய்திதான் பலரிடமும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நோக்கியாவின் 3310 மாடல் கைபேசிதான் அது.

ஒரு காலத்தில் அதிகம் விற்பனையான போனாக இருந்த இந்த கைபேசி, மீண்டும் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுவது உண்மைதானா? இந்த கைபேசி அறிமுகமானால் அதன் விலை என்னவாக இருக்கும்? அதில் என்னென்ன புது அம்சங்கள் இருக்கும்? இப்படிப் பல கேள்விகளோடு கைபேசிப் பிரியர்கள் காத்திருக்கின்றனர்.

ஸ்மார்ட்ஃபோன் உலகில் இந்த பழைய போனால் வெற்றி பெற முடியுமா, எனும் கேள்வி எழுந்தாலும், அறிமுகமான 17 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த கைபேசி இன்னமும் மறக்கப்படாமலிருப்பதும், அதன் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும் ஆச்சரியமான விஷயம்தான்.

ஒரு காலத்தில் கைபேசி உலகில் நோக்கியா முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை மாறியது. இதன் விளைவாக நோக்கியா முன்னணி இடத்தை இழந்து தடுமாறியதும், பின்னர் அதன் கைபேசி வர்த்தகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், ஒரு கட்டத்தில் அதன் தயாரிப்பை நிறுத்திக்கொண்டதும் கைபேசி உலகின் ஃப்ளாஷ்பேக் தகவல்களாக நினைவுக்கு வரலாம்.

நோக்கியா ஃபோன்களைப் பயன்படுத்தியவர்கள், என்னதான் இருந்தாலும் நோக்கியா ஃபோன் போல வருமா என்றுகூட அதன் புகழ் பாட முற்படலாம்.

நோக்கியா பற்றிப் பழம்பெருமை பேசலாமே தவிர, ஸ்மார்ட்ஃபோன் யுகத்தில் நோக்கியா கைபேசிகளுக்கு இடமில்லையே என்றும் நினைக்கலாம். ஆனால் நோக்கியா இரண்டாவது இன்னிங்ஸுக்குத் தயாராகி வருகிறது.

இம்மாத இறுதியில் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ்’ கண்காட்சியில் நோக்கியாவின் என் 3, 5 மற்றும் 6 கைபேசிகள் அறிமுகமாக இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளன. இவை அனைத்தும், நோக்கியா பெயர் கொண்ட ஆண்ட்ராய்டு கைபேசிகளாக இருக்கும். இவற்றில் நோக்கியா 6 ஏற்கெனவே சீனாவில் மட்டும் அறிமுகமாகி விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது.

நோக்கியா பிராண்டில் கைபேசிகளை அறிமுகம் செய்வதற்கான விநியோக உரிமை பெற்றுள்ள பின்லாந்து நிறுவனமான எச்.எம்.டீ. குளோபல் சார்பில் இந்த அறிமுகங்கள் நிகழ உள்ளன. இந்தப் புதிய மாடல்களோடு, பழைய 3310 மாடல் போனும் மறு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் உலகில் புதிய அறிமுகங்கள் தொடர்பான ரகசியச் செய்திகளைக் கசிய விடுவதில் வல்லவராகக் கருதப்படும் தொழில்நுட்பப் பத்திரிகையாளர் இவான் பிளாஸ் மூலம் வெளியான தகவல் என்பதால், இதை வெறும் வதந்தி என அலட்சியபடுத்த யாரும் தயாராக இல்லை. எனவே, நோக்கியா 3310 மாடல் மறு அவதாரச் செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நவீன ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் என்ன, இரண்டாவது கைபேசியாக நோக்கியாவை வைத்துக்கொள்வேன்’ என்று சமூக ஊடகங்களில் பலர் உற்சாகமாகக் கருத்துத் தெரிவித்து வருகின்ற‌னர். இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், இதன் விலை உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன.

ஐஃபோனுக்கும், விதவிதமான ஆண்ட்ராய்டு போனுக்கும் பழக்கப்பட்ட தலைமுறைக்கு நோக்கியா பழைய அற்புதமாகவே தோன்றும். ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகும் நோக்கியா 3310 மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

முதல் விஷயம் இந்த கைபேசி அது அறிமுகமான காலத்தில் அதன் விலைப் பிரிவில் மற்ற கைபேசிகளில் எல்லாம் இல்லாத மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருந்தது. கால்குலேட்டர், நெட்வொர்க் மானிட்டர், ஸ்டாப் வாட்ச், நினைவூட்டல் வசதி உள்ளிட்ட அம்சங்களை இந்த கைபேசி கொண்டிருந்தது. இப்போது இவை சாதாரணமாகத் தோன்றினாலும், புத்தாயிரமாண்டின் தொட‌க்கத்தில் இந்த அம்சங்கள் பிரம்மிப்பை ஏற்படுத்தவே செய்தன.

இவை தவிர, கைபேசி பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பாம்பு விளையாட்டையும் இந்த கைபேசி பெற்றிருந்தது. மேலும் நாட்கணக்கில் தாக்குப் பிடிக்கக் கூடிய இந்த பேட்டரியும், கீழே போட்டாலும் உடையாத‌ இதன் கட்டமைப்பும், இந்த போனை விருப்பத்துக்கு உரியதாக்கின. நீளமான குறுஞ்செய்திகளை டைப் செய்யும் வசதி, மேல் உரையை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் பற்றியும் நோக்கியா பிரியர்கள் பேசித் தீர்க்கத் தயாராக இருக்கின்றனர்.

1999-ல் அறிமுகமான நோக்கியாவின் 3210 மாடலின் அடுத்த கட்டமாக 2000-மாவது ஆண்டு செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கைபேசி நோக்கியாவின் சூப்பர் ஹிட் ஃபோனாக அமைந்தது. மொத்தம் 126 மில்லியன் கைபேசிகள் விற்பனையானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதே வரிசையில் வேறு சில ரகங்களும் அறிமுகமாயின.

நம்பகமானது, நீடித்து உழைக்கக் கூடியது, உடையாத தன்மை கொண்டது என்றெல்லாம் பலவிதங்களில் பாராட்டப்பட்ட இந்த கைபேசி, ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் மீண்டும் அவதாரம் எடுக்க இருப்பதாகக் கூறப்படும் தகவல் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளே இதன் செல்வாக்கிற்குச் சான்று.

நெருக்கடிகள் மிகுந்த நவீன வாழ்க்கையில், மீண்டும் இயற்கைக்குத் திரும்புதல் எனும் கருத்து முன்வைக்கப்படுவது போல, கைபேசி உலகிலும் கூட எண்ணற்ற அம்சங்களும், எல்லையில்லா வசதிகளும் கொண்ட நவீன ஸ்மார்ட்ஃபோன்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட பழைய கைபேசிகளே சிறந்தவை எனும் ஏக்கமும் வலுப்பெற்று வருகிறது. அதனால்தான் நோக்கியா 3310 இன்னமும் பேசப்படக்கூடிய ஃபோனாக இருக்கிறதோ!

Leave a Reply