shadow

இபே இந்தியா நிறுவனத்தை வாங்கியது பிளிப்கார்ட்: 140 கோடி டாலர் நிதி திரட்டவும் திட்டம்

இந்தியாவின் முன்னணி ஆன் லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் 140 கோடி டாலர் நிதி திரட்ட உள்ளது. மேலும் இபே இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் டென்சென்ட், இபே மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களிடமிருந்து முதலீட்டை திரட்ட உள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் மற்றும் இபே நிறுவனங்களுடனும் கைகோர்க்க உள்ளது. புதிய முதலீட்டுக்குப் பிறகு பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 1,160 கோடி டாலர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் மதிப்பு 1,500 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருந்தது.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஏற்கெனவே டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட், நாஸ்பெர்ஸ் குழுமம், ஆக்ஸெல் பார்ட்னர்ஸ் மற்றும் டிஎஸ்டி குளோபல் மேனேஜ்மெண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. டென்சென்ட், இபே, மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் எங்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப் பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுதவிர இபே நிறுவனத்தின் இந்திய பிரிவையும் பிளிப்கார்ட் கையகப்படுத்துகிறது. இபே-யின் இந்தியப் பிரிவை பிளிப்கார்ட் கையகப்படுத்தினாலும் அது தனியாகவே செயல்படும்.

இது தொடர்பாக பிளிப்கார்ட்டின் நிறுவனர்களாக சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர், இந்த நிறுவனங்கள் எங்களோடு இணைவதன் காரணமாக நாங்கள் இந்தியாவில் மேலும் முக்கிய இடத்துக்குச் செல்ல முடியும். இந்த நிறுவனங்கள் வழியாக நாங்கள் நீண்ட காலத்துக்கு இந்த துறையின் முன்னோடி நிறுவனமாக வளர்வோம் என்று கூறினர். இந்தியாவில் தொழில்நுட்பத்தின் மூலம் சேவைகளை வழங்குவதில் எங்களை மேலும் உறுதிபடுத்தும் விதமாக இருக்கிறது என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave a Reply