shadow

இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்படுவது ஏன்? அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

தேவைக்கும் அதிகமான இன்ஜினியர்களை உருவாக்குவதால் வேலைவாய்ப்பு பெரும் பிரச்னையாக உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா பேசினார்.சென்னை ஐஐடியில் பான் ஐஐடி லீடர்ஷிப் சீரீஸ் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்ப திறன் போட்டிகள் நேற்று தொடங்கியது. இதன்துவக்க விழா நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்க தனியாருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநில பல்கலைக்கழகங்களின்கீழ் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் கல்வி செயல்முறையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை, அவ்வாறு ஆசிரியர்கள் இருந்தாலும் போதுமான கல்வித்தகுதி பெற்றிருப்பதில்ைல. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.இந்த இன்ஜினியரிங் கல்லூரி நிறுவனங்கள் எவ்வாறு ஐஐடி போன்ற சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக இருக்க முடியும். இன்ஜினியரிங் கல்வி நிறுவனங்களின் பெருக்கம், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவைக்கும் அதிகமாகவே நாம் இன்ஜினியர்களை உருவாக்கி வருகிறோம். இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அரசின்கீழ் செயல்படும் எந்த நிறுவனமும் இதில் தலையிட முடியாத சூழல் உள்ளது. கண்மூடித்தனமாக இன்ஜினியரிங் கல்லூரிகளை திறக்க அனுமதி கொடுத்ததே இதற்கு காரணம். 10 லட்சத்துக்கும் அதிகமான இன்ஜினியர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள்.
நம்முடைய பொருளாதார வளர்ச்சியில், தொழிற்துறைகளால் எல்லா இன்ஜினியரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. இந்த இன்ஜினியர்களை நம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தயார்ப்படுத்தும் நிலையில் நாம் இல்லை.

அரசும், இன்ஜினியரிங் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் அமைப்புகளுக்கு இதுதொடர்பாக எச்சரிக்கவில்லை. 2003ம் ஆண்டு அல்லது அதற்குபின் யு.ஆர்.ராவ் கமிட்டி அரசை எச்சரித்தது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு இணைவு வழங்குவதை நிறுத்த அறிவுறுத்தியது. அத்துடன் ஒரு லட்சம் இந்தியர்களில் 15 பேர் இன்ஜினியர்கள் என்றும் எச்சரித்தது. நமக்கு எவ்வளவு இன்ஜினியர்கள் தேவை என்று நமக்கு தெரியாது. தொழில்துறையின் பல்வேறு பிரிவுகளில் எவ்வளவு பேர் வேலைக்கு தேவை என்பதை கண்டறிய சர்வே ஏதும் நடத்தப்படவில்லை. அதேபோல், ஒவ்வொரு இன்ஜினியரிங் துறையிலும் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாகிறது என்றும் தெரியாது.ஆனால் அதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு வரை இன்ஜினியரிங் கல்லூரிகள் எண்ணிக்கையும், அங்கு படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில், ஏற்கனவே படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் இன்ஜினியரிங் கல்லூரிகளில் போதுமான மாணவர்கள் சேரவில்லை. பல இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இன்ஜினியரிங் படித்த நம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெரும் பிரச்னையாக உள்ளது.

இந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு, போதுமான பணித்திறன் இருக்குமா என்பது கேள்விக்குறியே. இந்த இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்த மாணவர்கள் வேறு கல்லூரியில் எம்.இ அல்லது எம்.டெக் படித்து விட்டு ஆசிரியர்களாக வருகிறார்கள். அவர்கள் இன்ஜினியரிங் பாடத்திட்டதை சொல்லித்தருவதற்கு போதுமான தகுதியுடையவர்களாகவும் இருப்பதில்லை.அதே போல், பாடத்திட்டத்ததை மேம்படுத்த வேண்டும் என்று அரசியல்வாதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள் பல துறையை சேர்ந்தவர்களும் பேசுகிறார்கள். அவர்கள் சொல்வதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டத்தை மாற்ற முடியாது. அடிப்படை இன்ஜினியரிங் கல்விக்கான பாடங்களை எப்போதும் மாற்ற முடியாது.இப்படிப்பட்ட சூழலில் இருந்து மாற்றி தொழில்துறைக்கு தேவையான தகுதிகள் உள்ள மாணவர்களை உருவாக்கும் வகையில் நம் இன்ஜினியரிங் கல்வியை கட்டமைக்க வேண்டும். இவ்வாறு சூரப்பா பேசினார்.

Leave a Reply