shadow

இனி 140 எழுத்துக்களும் நமக்கே! ட்விட்டரின் அடுத்த அப்டேட்!

twitter1”அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்”

என்று ஔவையார் திருக்குறளைப் பாராட்டி எழுதியது மீண்டும் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி புது அர்த்தம் பெறத் தொடங்கியது. அன்றுதான் ட்விட்டர் எனும் சேவை உலகுக்கு அறிமுகம் ஆனது. சமூக ஊடகங்கள் புதிதாக கிளைத்தெழுந்து வரத் தொடங்கிய காலத்தில் ’இதுவும் பத்தோடு பதினொன்று என்பதாக இருக்குமோ’ என்ற ஐயத்தோடு பார்க்கப்பட்டாலும் ட்விட்டரின் தனித்தன்மையால் நான் தனி ஒருவன் என்றுப் புகழ்பெற்று நிற்கத் தொடங்கியது. வெறும் 140 எழுத்துகளுக்குள் ‘கண்டேன் சீதை’யை எனக் குறைவான எழுத்துகளால் எழுதச் சொல்லியதே அதன் தனித்தன்மையான விஷயம். இந்தத் தனித்தன்மையை இழக்கும் விதமான வதந்திகள் கடந்த மே மாதம் முதல் வரத்தொடங்கின.

’ட்விட்டரின் 140 தடை நீங்குகிறது’ என்று இந்த வதந்திகளை 140 எழுத்துகளுக்குள் தான் ட்விட்டர் வாழ் பெருமக்கள் ஊதித்தள்ளினார்கள். 140 எழுத்துக்களை மட்டுமே, ட்வீட் செய்ய முடியும் என்ற விதியை, ட்விட்டர் மாற்றவிருக்கிறது எனக் கிளம்பின வதந்திகள்.
இதனை அடுத்து, ட்விட்டரின் தரப்பில் இருந்து அப்போது விளக்கமாக, என்னென்ன மாற்றங்கள் செய்யப்போகிறோம் என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பிலேயே ட்விட்டரின் வசதிகளைப் பயன்படுத்தும் பிற செயலிகளிலும், ட்விட்டரை அடியொற்றி அமைக்கப்பட்ட பிற தளங்களிலும், இந்த புதிய வரையறைகளுக்கு ஏற்றபடி தங்களை மேம்படுத்திக்கொள்ள கால அவகாசம் அளிப்பதற்காக, இப்போது உடனடியாக இந்தப் புதிய நடைமுறைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராது என அறிவித்தது.
இப்போது, செப்டம்பர் 19-ம் தேதி முதல் இந்தப் புதிய மாற்றங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்பு அறிவித்த மாற்றங்கள் அத்தனையும் ஒரே நேரத்தில் வெளிவருமா, அல்லது ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படுமா என்பதையும் ட்விட்டர் இன்னும் அறிவிக்கவில்லை.

புதிய மாற்றங்கள் என்னென்ன?

1. ஒரு ட்வீட்டிற்கு ரிப்ளை செய்யும் போது, @ குறிக்கு அடுத்து வரும் பயனர்பெயர் (Username) இனி 140 கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படாது.

2. இப்போது படங்கள், வீடியோக்களைச் சேர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எழுத்துகளைத் தியாகம் செய்ய வேண்டி உள்ளது. இனி படங்கள், வீடியோ, gif போன்றவற்றுக்கு எழுத்துகளைத் தியாகம் செய்ய வேண்டியது இல்லை. எனவே 140 எழுத்துக்களும் நமக்கே!

இந்த மாற்றங்கள் மொத்தமாக சொல்ல வருவது என்னவென்றால் குறுகத் தரித்த குறளுக்கு எந்த இடையூறும் இல்லாமல், இனி படங்கள், வீடியோக்களால் அலங்கரிக்கலாம் என்பதுதான். இதன் மூலம் ட்விட்டர் தனது தனித்தன்மையை இழக்காமல், அதனை மேலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Leave a Reply