shadow

இந்திய முடிவால் ஏமாற்ற ஸ்டேட்டஸ் பதிந்த ‘ஃபேஸ்புக்’ மார்க்

facebook.2இணையதளம் பயன்படுத்துவதில் கட்டண அடிப்படையில் சேவை வழங்குவதை டிராய் தடை செய்துள்ள நிலையில், இம்முடிவுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

டிராய் முடிவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டுமே இலவசமாக வழங்கும் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இவ்வுலகில் அனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதன் காரணமாகவே நாங்கள் Internet.org சேவையை துவக்கினோம். எங்களது இந்த சேவையானது பல்வேறு முன்மாதிரி முயற்சிகளை உள்ளடக்கியது. ஃப்ரீ பேசிக்ஸ் மூலம் எண்ணற்றோருக்கு இணையத்தை பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டும்.

ஆனால், இன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் இணையதளத்தில் அடிப்படை சேவை வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.

இந்த முடிவால் நாங்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தியாவிலும், உலகின் ஏனைய சில பகுதிகளிலும் ஃப்ரீ பேசிக்ஸ் இணைய சேவையை அறிமுகப்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம். அனைவருக்கும் இணைய சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிட்டும்வரை நாங்கள் முயற்சியை தொடர்வோம்.

Internet.org சேவையால் ஏராளமானோர் வாழ்வியல் முன்னேற்றம் கண்டுள்ளது. எங்களது வெவ்வேறு திட்டங்களால் 38 நாடுகளில் 19 மில்லியன் மக்கள் ஃப்ரீ பேசிக்ஸ் சேவை மூலம் பயனடைந்துள்ளனர்.

இச்சேவையின் மூலம் இந்தியாவை இணைக்க வேண்டும் என்பதே எங்களது மிகப்பெரிய லட்சியம். இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி ஒரு பில்லியன் (100 கோடி) மக்களுக்கு இணைய சேவை வாய்ப்பு இல்லை. அவர்களை இணைய வழியாக இணைப்பதால் பெரும் பயன் கிட்டும். வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், கல்வி வாய்ப்புகள் குறித்த தகவல் பரிமாற்றம் என மக்கள் பல்வேறு வகையிலும் பயனடைவர். அதன் காரணமாகவே நாங்கள் இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸ் அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். எங்களது லட்சியப் பயணம் தொடர்கிறது. இந்தியாவில் ஃப்ரீ பேசிக்ஸை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற உறுதிப் பயணமும் நீளும்.

இவ்வாறு மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் மீதான குற்றச்சாட்டு என்ன?

ஃபேஸ்புக் நிறுவனம் முன்மொழியும் திட்டத்தின்படி ஃபேஸ்புக் உள்ளிட்ட சில வலைதளங்களை இணைய கட்டணமின்றி நுகர்வோர் பயன்படுத்த முடியும்.

ஆனால், ஏற்கெனவே மொபைல் டேட்டா சேவைக்குக் கட்டணம் செலுத்திவிட்டுத்தான் ஒட்டுமொத்த இணைய சேவையையும் நாம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஃப்ரீ பேசிக்ஸ் அறிமுகமானால், இலவச சேவை வழங்கப்படலாம்.

ஆனால், அடிப்படைத் தகவல் பரிமாற்றம் தவிர ஆடியோ, வீடியோக்களையும், ஃபேஸ்புக்கோடு உடன்படிக்கை செய்துகொள்ளாத மற்ற இணையதளங்களையும் அதில் இலவசமாகப் பயன்படுத்த முடியாது.

இந்தத் தகவல்களைச் சாதுரியமாக மறைக்கிறது ஃபேஸ்புக்கின் பிரச்சாரம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

Leave a Reply