shadow

இந்தியா சில ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகும்: ஜேட்லி உறுதி

arun jaitleyபொருளாதார சீர்த்திருத்தங்களை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருளாதார நாடாக வளர்ச்சியடையும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள அருண் ஜேட்லி, ஒசாகாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவில் முதலீடு வளர்ச்சி குறித்த கருத்தரங்கில் பேசும் போது கூறியதாவது:

இந்தியாவின் ஜிடிபி வெகு வேகமாக வளரும் நிலையில் உள்ளதால், ஒவ்வொரு சில ஆண்டுகளிலும் 1 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் பொருளாதாரம் வளர்ச்சியடையும். தற்போது 2 டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக உள்ளது இந்தியா, இன்னும் சில ஆண்டுகள்தான், 5 டிரில்லியன் பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்து விடும். பொருளாதாரம் எந்த விதமான விரிவாக்கம் அடையப்போகிறது என்பதை இது எடுத்துரைப்பதாக அமையும்.

உலகப் பொருளாதார சூழ்நிலைகள் ஆதரவளிக்க முடியாத நிலையில் உள்ள போது, சில வேளைகளில் இடையூறு விளைவிப்பதாக உள்ள போதும், இந்தச் சூழ்நிலைகளை எதிர்கொள்வது பெரிய சவாலே. இந்த நிலையிலும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற சிறப்புப் பெயரை சம்பாதித்துள்ளது. நுகர்வோர் செலவினம் மற்றும் நகர்ப்புற தேவைகள் ஆகியவை மெதுவாக உயர்வடைந்துள்ளன, ஊரகத் தேவைகளும் போராடி முன்னேற்றம் கண்டுள்ளது.

இதனால் வரும் காலங்களில் இந்திய தனியார் துறைகளில் இதன் தாக்கம் இருக்கும். தனியார் துறைகளும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் தீவிரமாக இயங்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகப் பொருளாதாரச் சூழ்நிலை மந்தமாக இருந்த போதிலும் ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி 7.9% என்பதும் 2015-16-ல் மொத்தமாக ஜிடிபி 7.6% என்பதும் அரசின் வளர்ச்சி நோக்கிய பொருளாதார கொள்கையினால் விளைந்ததே.

எனவே உலகின் அதிவேக வளர்ச்சிப் பொருளாதார நாடு என்ற உச்ச நிலையை இந்தியா நிச்சயம் பராமரிக்க விரும்புகிறது. இதனை சாதிக்க முடிந்தால் இந்தியா ஒரு வளரும் பொருளாதார நாடு என்ற அடையாளத்திலிருந்து வளர்ச்சியுற்ற பொருளாதார நாடு என்பதை நோக்கி இந்தியா ஒரு சமூகமாக நடைபோடும் என்பது உறுதி.

2 ஆண்டுகால மோசமான பருவமழை, உலக அளவில் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றின் போது கூட அடுத்து வரும் சில ஆண்டுகளில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் வரிசையில் உள்ளன. உலகில் அதிவளர்ச்சி விகிதத்தை எட்டும் ஒரு நாடு என்ற நிலையை நாங்கள் ஏற்கெனவே எட்டியுள்ளோம்.

எனவே எங்களது சீர்திருத்த நடைமுறைகள், தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இதனால் பொருளாதார நம்பகத்தன்மை, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை நாங்கள் வென்றெடுக்க முடிந்துள்ளது. தற்போது இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து முதலீட்டாளர்கள் கூடுதல் நம்பிக்கையை வந்தடைந்துள்ளனர்.

இங்கும் கூட இந்தியாவில் முதலீடு செய்ய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர். அவர்களுக்கு லாபம் தரும் வகையில் அமையும், சாதகமான சூழ்நிலைகளால் உள்நாட்டு தேவைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இறுதியாக, வரலாற்று ரீதியாக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சியும் இணைந்து செல்ல முடியும் என்பதை நாங்கள் உலகிற்கு நிரூபிக்க முடியும். ஜனநாயகத்தையும் உறுதி செய்து, பொருளாதார ரீதியாக வளர்ச்சியும் அடைய முடியும்.

உலகப்பொருளாதாரம் 4-5% வளர்ச்சியடைந்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி 9% என்பதாக உயர்வடையும்.

ஆனால் இன்றைய நிலையில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.9% என்பதாக பின்னடைந்துள்ளது. எனவே இந்நிலையில் அதிவேக வளர்ச்சி விகிதத்தை பராமரிப்பது கடினம், காரணம் உலக அளவில் நாடுகள் பொருளாதார மந்த நிலையைச் சந்தித்து வருகின்றன. இந்த மந்தநிலைக்கு எந்த ஒரு பொருளாதரமும் விதிவிலக்கல்ல. ஜப்பானும், ஐரோப்பாவும் இந்த மந்தநிலையின் தாக்கத்தை உணர்ந்துள்ளனர்.

வரிவிகிதத்தை அறிவுக்குகந்ததாக மெதுவே மாற்ற முயற்சி செய்து வருகிறோம். வங்கி நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அளிக்க முயற்சி செய்கிறோம், மானியங்கள் விவகாரத்திலும் என்ன சீர்திருத்தங்கள் செய்ய முடியுமோ முயன்று வருகிறோம்.

அடுத்த சில ஆண்டுகளில் எளிதான வர்த்தகச் சூழல் என்ற தரவரிசையில் இந்தியா நிச்சயமாக உயர்வடையும். ஜிஎஸ்டி விரைவில் சட்டமாக உருமாறும். இந்திய உள்கட்டமைப்புக்குத் தேவையான முதலீடு மிகப்பெரிது. முதலீட்டாளர்களுக்கு வருவாய் பெருக்கத்தை உறுதி செய்வது இந்தியாவில் முதலீடு திட்டத்தின் ஒரு பகுதி.

முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் மாற்றங்களை சட்ட ரீதியாக பாதியில் கொண்டு வரப்போவதில்லை என்பதை ஒரு அரசாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி

Leave a Reply