shadow

indiaஇமாஜினிங் இண்டியா’ என்கிற புத்தகத்தைத் தொடர்ந்து தற்போது நந்தன் நிலேகனி, விரால் ஷாவுடன் இணைந்து எழுதியிருக்கும் புத்தகம்தான் `ரீபூட்டிங் இண்டியா’. நந்தனுக்கு அறிமுகம் தேவை இல்லை. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் களில் ஒருவர். தகவல் தொழில்நுட்பத் துறை ஜாம்பவான்களில் குறிப்பிடத்தக்கவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றபின் 2009-ம் ஆண்டு Unique Identification Authority of India  சுருக்கமாக, UIDAI என்கிற அமைப்புக்குத் தலைவராக இருந்தவர். இந்த அமைப்புதான் `ஆதார்’ என்கிற `ஆதார அட்டையை’ எல்லோருக்கும் வழங்கி வந்தது. இவருடைய குழுவில் ஆரம்பத்திலிருந்தே பணியாற்றி வந்தவர் விரால் ஷா. அமெரிக்காவில் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் மற்றும் தொழில் முனைவோர். 

2009-ம் ஆண்டு செப்டம்பரில் மகாராஷ்டிராவில் நந்தூர்பார் (Nandurbar) மாவட்டத்தில் உள்ள தெம்பிலி என்னும் குக்கிராமத்தில் வசிக்கும் ரஞ்சனா சோனாவானேவுக்கு  ஆதார் அட்டை தரப்பட்டது. அடுத்த ஐந்தாண்டு காலத்தில்  60 கோடி (ஏறக்குறைய பாதி இந்திய மக்களுக்கு) ஆதார் அட்டையை தர இலக்கு நிர்ணயித்தார்கள். ஆனால், இன்று இந்திய மக்கள் தொகையில் சுமார் 75 சதவிகிதத்தினரிடம் ஆதார் அட்டை இருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் இன்னொரு தொடக்கத்துக்காக நூலாசிரியர்கள் 12 புது முனைவுகளை (Initiatives) முன்வைக்கிறார்கள். இவை அனைத்தும் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் சவால்களுக்கான குறைந்த முதலீட்டிலான தீர்வுகளாகும். இந்த 12 புது முனைவுகளில் ஏற்கெனவே இரண்டு, அதாவது ஆதார் அட்டை, சமையல் எரிவாயு மானியம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த 12 புதிய முனைவுகளும் சட்டம், கல்வி, மருத்துவம், பொருளாதாரம், தேர்தல், சக்தி, செலவு ஆகியவை சம்பந்தப்பட்டது.

ஆதார் அட்டை வழங்கும் பணி எப்படி செயல்பட தொடங்கியது, அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள், தடைகள், சவால்கள் அதையெல்லாம் சமாளித்த விதம் ஆகியவை குறித்து ‘ரீபூட்டிங்’ புத்தகத்தில் விலாவாரியாக சொல்லி இருக்கிறார் நந்தன். இந்தத் திட்டத்தை அமலாக்குவதில் ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இந்தத் திட்டத்தை நந்தனால் நடத்த முடிந்ததற்கு காரணம், அவரது மேலாண்மை அனுபவமும், தன்முனைப்பு (ஈகோ) இல்லாததும், சிறந்த ஆட்களை பணிக்குத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுத்த முழுச் சுதந்திரமும்தான். 

விவேகானந்தர், `திறமை வாய்ந்த 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள்.  இந்தியாவின் தலையெழுத்தை நான் மாற்றிக் காட்டுகிறேன்’ என்று அன்றைக்கு அறைகூவல் விடுத்தார். இன்றைக்கு நந்தனும் அதைத்தான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார். 12 புது முனைவுகளில் இரண்டு ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டது. மீதம் இருப்பது 10 முயற்சிகள். ஒவ்வொரு முயற்சிகளுக்கும் திறமையான 10 பேர் கொண்ட குழு. ஆக மொத்தம், 100 பேர் கொண்ட குழு இந்தியாவை மறு தொடக்கத்துக்கு இட்டுச் செல்லும் என தனது ஆதார் அனுபவத்தின் வாயிலாக உறுதிபட இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார். இவர்களுக்கெல்லாம் தலைமை இந்த முனைவுகளுக்கு ஆதரவு தரக்கூடிய நாட்டின் பிரதமர்.

அந்த 10 புது முனைவுகள் என்னென்ன?

1. மைக்ரோ ஏ.டி.எம் – சிறுவியாபாரிகளின் உதவி யோடு இதை அமலுக்குக் கொண்டுவர முடியும்.

2. பேப்பர் இல்லாத e-KYC (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்)

3. மின்னணு சாலைச் சுங்கம் (Electronic Toll) வெளிநாடுகளில் இருப்பதுபோல, பணம் லோட் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது. குறிப்பிட்ட சுங்க வாயிலை கடக்கும்போது தேவையான கட்டணம் தானாகவே ஸ்மார்ட் கார்டில் குறைக்கப்பட்டுவிடும்.  

4. தற்போது மிகவும் பிரச்னையிலிருக்கும் `பொருள் மற்றும் சேவை வரி’ (GST)

5. தொழில்நுட்ப உதவியுடன் ஜனநாயகத்தை வலுவுள்ளதாக்கவும், மோசடிகளைத் தவிர்க்கவும் தேவையான `மையப்படுத்தப்பட்ட வாக்காளர் மேலாண்மை அமைப்பு’.

6. புதிய தலைமுறைக்கான கல்வி (`மனம் என்பது எல்லாவற்றையும் போட்டு அடைப்பதற்கான கொள்கலனாக இல்லாமல் எழுச்சி மூட்டுவதாக இருக்கவேண்டும்’). இதன் முதல் படிதான் `கல்வி எங்கள் உரிமை’ என்கிற `Right to Education’. நந்தன் தனது `இமாஜினிங் இண்டியா’ புத்தகத்திலும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமாக தனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். இந்திய மக்கள் தொகையில் சுமார் 25 சதவிகித மக்கள் இன்னும் கல்வியறிவில்லாமல் இருக்கும்போது, தொழில்நுட்ப புரட்சியினால் ஏற்படும் பலனை நாம் எப்படி பெறமுடியும்? எனவே, முதல் தேவை, அனைவருக்கும் கல்வி. அதன்பின் கல்வி முறை, பாடத்திட்டம் போன்றவற்றில் மாற்றம். 

7. ஆரோக்கியமான இந்தியா என்கிற முயற்சியில் சில அம்சங்கள்: தொழில்நுட்ப உதவியுடன் உடல்நிலை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங் களும் ஆன்லைனில் தொழில் வல்லுநர்களால் மேலாண்மை செய்யப்பட வேண்டும். இதனால் நோயாளி தனது நோய் சம்பந்தப்பட்ட ஆவணங் களை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல வேண்டுமென்ற அவசியம் இருக்காது. அரசின் மருத்துவ நலத் திட்டங்கள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் போன்றவை தங்கள் பணப்பட்டு வாடாவை ஆதார் தொடர்பு கொண்ட கணக்குக்கு மின்னணு முறையில் அனுப்பும்.

8. பவர் க்ரிடை தொழில்நுட்ப உதவியுடன் திறமையாக நிர்வகிப்பது; சமையல் எரிவாயு மானியம் போல, சக்திக்கான மானியத்தையும் மக்களின் கணக்குக்கு நேரடியாக அனுப்புவது. 

9. நீதி – இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 30 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நேஷனல் ஜூடிசியல் நெட்வொர்க் என்கிற அமைப்பை நிறுவுவது, சட்டம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தன்னியக்கமுறை ஆக்குவது, ஆவணங்களை எண்மின் மயமாக்குவது (digitization) போன்றவை இதில் அடங்கும்

10. அரசாங்கச் செலவுகளை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிப்பதற்கான `ரோட் மேப்’ இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு புது முனைவையும் வரைபடத்துடன் விளக்கி இருக்கிறார்கள் ஆசிரியர்கள். இந்த 12 புது முயற்சிகளும் அமல்படுத்தப்பட்டால், அரசு வருடத்துக்கு குறைந்தது 1 லட்சம் கோடி (அதாவது, நமது ஜிடிபி-யில் 1%) சேமிக்க முடியும் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதை அமல்படுத்த நல்ல திறமைகொண்ட, ஊக்கத்துடன் செயல்படக்கூடிய 100 பேரும், அதற்கு ஆதரவான பிரதம மந்திரியும் போதும் என்கிறார் நவீன கால விவேகானந்தரான நந்தன்! நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் நந்தனின் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்.

Leave a Reply