shadow

ஆரோக்கியம் தரும் கட்டுமானப் பொருட்கள்

முன்பெல்லாம் வீடு கட்டுவதற்கான மூலப் பொருள்களை அந்தந்தப் பகுதியிலிருந்துதான் எடுப்பார்கள். உதாரணமாக மூங்கில் அதிகமாகக் கிடைக்கும் பகுதியில் மூங்கிலையே கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவார்கள். அதனால் ஒவ்வொரு பகுதி வீடுகளுக்கும் தனித்துவம் இருக்கும். ஆனால் இன்றைக்கு எல்லாப் பகுதிகளிலும் வீடுகள் ஒரே முறையில்தான் கட்டப்படுகின்றன. கட்டுமானப் பொருள்களிலும் மாற்றம் இல்லை. போக்குவரத்து வசதி எளிமையானதால் கட்டுமான்ப் பொருள்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கொண்டுச் செல்வதும் எளிமையானது. நூறு, இருநூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து கட்டுமானப் பொருள்கள் கொண்டுவரப்படுகின்றன.

கட்டுமானப் பொருட்களை வெளியில் இருந்து வாங்கி வீட்டைக் கட்டும் செலவைக் குறைத்துவிட்டால் போதும் என்று செயல்படும்போது சுற்றுச்சூழலைக் கவனித்துக் கொள்ள மறந்துவிடுகிறோம். இது சரியான செயலல்ல என எச்சரிக்கிறார்கள் கட்டிடக் கலை நிபுணர்கள். ஏனெனில் கட்டுமானப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து தொலைதூரத்திலுள்ள மற்றொரு இடத்திற்கு அனுப்புவதற்கு அதிகப்படியான வேலைகள் தேவைப்படுகின்றன.

அவற்றை பேக்கிங் செய்ய வேண்டும், வாகனங்களில் அனுப்ப வேண்டும், சந்தைப்படுத்த வேண்டும், அதற்குரிய பணியாளர்கள், இணையத்தின் மூலம் பெற்றால் அது தொடர்பான பணிகள் என அநேகர் அந்தப் பணியுடன் தொடர்புபடுவார்கள். இதற்குத் தேவைப்படும் மொத்த சக்திக்கான செலவை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அது ஒருவேளை உள்ளூரில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையைவிட வெளியிலிருந்து வாங்கும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகமாக ஆகலாம். ஆனால் தற்போது நம்மிடம் இருக்கும் வழிமுறைகள் மூலம் இந்த மொத்த ஆற்றலையும் அதற்கான செலவையும் சரிவரக் கணக்கிட முடியவில்லை.

தொலைதூரத்திலிருந்தோ அல்லது வெளிநாட்டி லிருந்தோ கட்டுமானப் பொருட்களை வாங்கும் போது இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக ஓரிடத்தின் தட்பவெப்ப நிலை சார்ந்த பொருட்கள் அந்தப் பகுதியிலேயே கிடைக்கும். அதைவிடுத்து அந்தத் தட்பவெப்பத்திற்குத் தொடர்பு இல்லாத கட்டுமானப் பொருட்களை விலை மலிவு என்பதற்காக வாங்கினால் அதனால் தீங்கு ஏற்படக் கூடும்.

வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் உள்ள பொருட்கள் குளிர் மிகுந்த பகுதியின் கட்டுமானப் பொருள்களை விலை குறைவு என்றால், விலை மலிவு என்பதற்காக வெப்பம் அதிகம் நிலவும் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களை வாங்கிக் குளிர் நிலவும் பகுதியில் வீடு கட்டினால் எப்படி இருக்கும்?

உலகமயமாக்கல் காரணமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கிடைக்கும் பொருளை விலை மலிவு என்பதற்காக நாம் வாங்கத் தொடங்கினால் நம்மையே நம்பி உள்ளூரில் கட்டுமானப் பொருட்களை உற்பத்திசெய்வோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் உள்ளூர்த் தொழில் சரிவடையும், தேசத்திற்கு அது பாதிப்பு ஏற்படுத்தும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு உள்ளூர் பொருட்களை வாங்கும்போது மட்டுமே நம்மால் இயற்கைக்கு சேதாரமற்ற வீட்டைக் கட்டியெழுப்ப முடியும். பசுமைக் கட்டிடம் என்பது கட்டிடம் அமையவிருக்கும் இடத்துக்கு அருகிலேயே கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டே கட்டப்பட வேண்டும். உள்ளூர்க் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டிடத்தின் ஆயுளை மட்டுமல்ல சமூகத்தின் ஆயுளையும் காக்கும்.

Leave a Reply