shadow

ஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது மற்றொரு ஆய்வாளரா?

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் கொள்ளையர்களால் சுடப்பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் வீரமரணம் அடைந்ததாக கூறப்படும் நிலையில் அவரை மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் தான் சுட்டார் என்று ராஜஸ்தான் காவல்துறையினர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

பெரியபாண்டியன் கொலை குறித்து ராஜஸ்தான் போலீசார் விசாரணை செய்து கொண்டு வரும் நிலையில் பெரியபாண்டியனின் சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளதாக ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக போலீசார் கூறியபோது, ”துப்பாக்கி கீழே விழுந்தது தொடர்பாக ராஜஸ்தான் போலீஸில் முனிசேகர் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளார். தற்போது முனிசேகர் சுட்டதாக ராஜஸ்தான் போலீஸார் கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. முனிசேகர் வைத்திருந்தது 9எம்எம் பிஸ்டல். அதன் லாக் ரீலீஸாகி விட்டால் 20 குண்டுகளைச் சுட முடியும். ஆனால் ஒரே ஒரு குண்டு மட்டுமே முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டுள்ளது.

கொள்ளையர்களிடம் துப்பாக்கி கிடைத்திருந்தால் தமிழக போலீஸாரின் கதி பரிதாபமாகிருக்கும். இதுதான் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநில போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திலிருந்தவர்களும் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான முழுவிவரம் விசாரணையில் தெரியவரும்’ என்று கூறினர்

ஆனால் இதுகுறித்து சக ஆய்வாளர் முனிசேகர் ஏற்கனவே ராஜஸ்தான் காவல்துறையில் கூறியிருப்பதாவது: ‘நானும், பெரியபாண்டியனும் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அவர்கள் கட்டையால் எங்களைத் தாக்கினார்கள். அப்போது, நான் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். அப்போது கையிலிருந்த என்னுடைய துப்பாக்கி கீழே விழுந்தது. அதனை பெரியபாண்டியன் தான் எடுத்தார். அப்போது, எங்களுடன் வந்த சக காவலர்கள் உதவியுடன் நாங்கள் வெளியே வந்தோம். எதிர்பாராதவிதமாக பெரியபாண்டியன் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய புகாரில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுடப்படுவதற்கு முன்னதாக, துப்பாக்கி அவரிடமிருந்து தவறி விட்டதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply