shadow

அம்மை நோய் தடுப்போம்… தவிர்ப்போம்!

p21aகோடையில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவது அம்மை நோய். ‘அம்மை நோய் தெய்வ குத்தத்தால் வருவது’ என்ற நம்பிக்கை இன்னமும் நம் சமூகத்தில் இருக்கிறது. அம்மை வந்தால் குளிக்கக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என எண்ணற்ற தவறான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. உண்மையில் இது தெய்வ குத்தத்தால் ஏற்படுவது இல்லை… வைரஸ் கிருமியின் வரவால் ஏற்படுகிறது.

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பெரியம்மை நோயால் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். பெரியம்மைக்குத் தடுப்பூசி வந்த பிறகு அது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த வைரஸ் கிருமியை மிகவும் பாதுகாப்பாக ஒரு சில ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக வைத்துள்ளனர். தற்போது பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துவது சிக்கன்பாக்ஸ் (Chickenpox) எனப்படும் சின்னம்மை. இது ஒரு தொற்றுநோய். யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம்.

சின்னம்மை வருவதற்கு காரணம் வெரிசெல்லா ஸோஸ்டர் (Varicella Zoster) என்கிற வைரஸ்தான். இது, காற்று மூலமாக, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். கோடைக்காலத்தில் இது பரவுவதற்கான சூழல் உள்ளதால், அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும்தான் சின்னம்மை வருகிறது. 5 முதல் 10 நாட்கள் வரை உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இருமல், சளி, உமிழ்நீர், தும்மல் வழியாக இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அம்மை வந்தவர்களுக்கு ஏற்பட்ட புண்களை இன்னொருவர் தொடுவதன் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

அறிகுறிகள்

வெரிசெல்லா ஸோஸ்டர் வைரஸ் உடலுக்குள் புகுந்த 1-3 வாரத்தில் தனது வேலையைக் காட்டும். ரத்தத்தில் வைரஸ் கலந்தஉடன்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக, பலருக்கும் சுவாசம் மூலமாகத்தான் இந்த வைரஸ் முதலில் பரவுகிறது. தீவிரமான காய்ச்சல் இருக்கும். 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும்கூட காய்ச்சல் ஏற்படலாம். இது, தொண்டை, நுரையீரல் மற்றும் தோலில் புண்களை ஏற்படுத்தும். வழக்கமாக முதுகு, வயிறு போன்ற பகுதிகளில் சின்னம்மை புண்கள் ஏற்படும்.

அதிகப் பாதிப்பு யாருக்கு?

குழந்தைகளைப் பொறுத்தவரை சின்னம்மை வந்தால் பெரும்பாலும் எந்த சிகிச்சையும் தேவைப்படாது. சில நாள்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால், முதியவர்களுக்கு சின்னம்மை சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, சின்னம்மை வந்த முதல் இரண்டு நாட்களுக்குள் மருத்து வரை அணுகி ஆன்டிவைரல் மருந்துகளைச் சாப்பிட்டால், அம்மை நோயின் தீவிரம் குறையும். முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், வெரிசெல்லா வைரஸ் நரம்பியல் மண்டலத்தைத் தாக்க வாய்ப்பு இருக்கிறது. மூளைக் காய்ச்சல், நிமோனியா மற்றும் சிறுமூளைப் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, வயதானவர்களுக்கு அம்மை நோய் வந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.

என்ன செய்ய வேண்டும்?

பொதுவாக, அம்மை புண்களில் இருந்து நீர் வடியும். சிலருக்கு, இந்த புண்களில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, அம்மை நோய் வந்தால் தனி அறையில் இருப்பதுதான் நல்லது. அம்மை காரணமாக உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், குளிர்ச்சி நிறைந்த அறையில், புண்கள் ஆறி உதிரும் வரை இருப்பது சிறந்தது. நமது முன்னோர்கள் வேப்பிலையைப் பரப்பி அதன் மேல் அம்மையால் பாதிக்கப்பட்டவர்களைப் படுக்கவைப்பார்கள். வேப்பிலை ஒரு கிருமிநாசினி என்பதால், அம்மைப் புண்களுக்கு மிகவும் நல்லது. ஆனால், சுத்தமாக இல்லாத வேப்பிலையின் மேற்புறத்தில் ஏதாவது கிருமிகள், தொற்றுகள் இருந்தால் அதன் மேல் படுக்கும்போது அம்மைப் புண்கள் பெரிதாகிவிடும் வாய்ப்பும் உண்டு.

உணவில் கவனம்

அம்மை நோய் ஏற்பட்டால் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த உணவை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், வீட்டில் சுத்தமாகச் சமைத்ததாக இருக்க வேண்டும். உணவில் காரம் மற்றும் எண்ணெய் குறைவாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு சாப்பிடலாம். பழச்சாறுகள், உப்புக்கரைசல்கள், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களையும் பப்பாளி, கேரட் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும்.

அம்மை வந்தால் குளிக்கலாமா?

கிராமப்புறங்களில் பலர் அம்மை வந்தால் குளிக்கவிடுவது இல்லை. இது தவறு. அம்மையால் பாதிக்கப்பட்டவர் தினமும் குளிக்கலாம். சோப் பயன்படுத்தாமல் குளிக்கலாம். நிறைய நாட்கள் குளிக்காமல் இருந்தால், சில நேரங்களில் தொற்றுப் பாதிப்புகளால் நோய் பெரிதாகிவிடும் வாய்ப்பு உண்டு. அம்மை வந்த சமயங்களில் குளிக்காவிட்டாலும் அவசியம் ஈரத்துணியால் உடலைத் துடைக்க வேண்டும்.

என்ன சிகிச்சை?

சின்னம்மையைப் பொறுத்தவரை பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது. ஓய்வே போதுமானது. ஒரு முறை ஒருவருக்கு சின்னம்மை வந்தால், அதன் பின்னர் அவரது வாழ்நாளில் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், சின்னம்மையை ஏற்படுத்தும் வெரிசில்லா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ளும்.

வீட்டில் யாராவது ஒருவருக்கு அம்மை இருந்தால், வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஒருவருக்கு அம்மை வந்த அடுத்த ஒரு வாரத்தில் இருந்து மூன்று வாரங்களுக்குள் வீட்டில் இருப்பவர்களுக்கும் அம்மை வரலாம். இதைத் தடுக்க வீட்டில் உள்ள மற்றவர்கள் சின்னம்மைக்கான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது சிறந்தது. 18 மாதங்களைக் கடந்த குழந்தைகளாக இருந்தால், ஒரு டோஸ் தடுப்பூசியும், பெரியவர்கள் ஒரு மாத இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள வேண்டும்.

அம்மை வந்தால் ஏற்படும் மிகப்பெரிய சோதனையே தழும்புகள்தான். வேலைக்குச் செல்லும் பலர் அம்மைத் தழும்புகளால் மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அம்மைத் தழும்புகள் முற்றிலும் நீங்க ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும். அம்மைத் தழும்புகளை நீக்கப் பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. எனவே, முடிந்த வரை அம்மை வராமல் தடுப்பதுதான் சிறந்த வழி.

– பு.விவேக் ஆனந்த்

Leave a Reply