shadow

அப்துல்கலாமுக்கு ஒத்துழைக்காத உடல்நிலை மோடிக்கு மட்டும் எப்படி ஒத்துழைத்தது? குஷ்பு கேள்வி

kushbooமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஒத்துழைக்காத உடல்நிலை மோடிக்கு விருந்து கொடுப்பதற்கு மட்டும் எப்படி ஒத்துழைத்தது என  ஜெயலலிதாவிற்கு பிரபல நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளார்.
 
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியும் தனது பங்கிற்கு மாநிலம் முழுவதும் இன்று  உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.

சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் கூட்டணிக்கு அச்சாரம் ஆகாது. மக்களிடையே மதுவிலக்கு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். அதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கின்றனர். சசிபெருமாள் மரணம் அரசியல் ஆக்கப்படுவதாக நத்தம் விஸ்வநாதன் கூறி உள்ளார். உண்மையில், மதுவிலக்கு போராட்டங்களில் அரசியல் கிடையாது” என்று கூறினார்.

இதே போல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் திருநாவுக்கரசர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய நடிகை குஷ்பூ, “பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. நாட்டின் தேசியத் தலைவராக அனைவராலும் போற்றப்பட்ட அப்துல் கலாமின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்கு ஜெயலலிதாவிற்கு உடல் நிலை ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஆனால் மோடிக்கு விருந்து கொடுப்பதற்கு மாத்திரம் உடல் நிலை ஒத்துழைப்பு கொடுத்ததா?

தமிழ் நாட்டு மக்களின் தேவைகள் பற்றி கேட்பதற்கு கூட ஜெயலலிதாவிற்கு உடல் நலன் சரியில்லை. பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு கூட அதே நிலைதான். உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும் ஜெயலலிதா ஆட்சி அமைத்தவுடன் அவர் கூறியது,  ஒவ்வொரு வாரமும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் என, ஆனால் இப்போது எத்தனை வாரங்கள் கடந்து விட்டது? சந்தித்தாரா ஜெயலலிதா?”  என கேள்வி எழுப்பினார்.

Leave a Reply