shadow

அனைவருக்கும் வீடு ‘2022’: வெறும் கனவா?
கடந்த ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசு ‘அனைவருக்கும் வீடு 2022’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 9 மாநிலங்களில் 305 நகரங்களைக் கண்டறிந்து அங்குள்ள ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்துதருவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த முயற்சியால் நகரங்களில் வாழும் ஏழைகள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினர் ஆகியோரும் பயன்பெற உள்ளனர். பிரதன் மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி செய்துதர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஏழைகள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் வீடு, அதில் மின்வசதியும் தண்ணீர் வசதியும் இருக்கும், வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகிய வசதிகள் அமைந்திருக்கும் என்ற கவர்ச்சிகரமான உறுதிமொழியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய இத்திட்டம் நடைமுறையில் சாத்தியமா?

நான்கு பிரிவுகள்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டமானது நான்கு பிரிவுகளாகச் செயல்படுத்தப்பட இருக்கிறது. முதலாவது, நகரத்தில் உள்ள குடிசைப் பகுதிகளை அகற்றிவிட்டு, அங்கு வசித்தவர்களுக்கு மாற்றுக் குடியிருப்புகளைக் கட்டும் பொறுப்பைத் தனியார் கட்டுமான நிறுவனங்களிடம் ஒப்படைப்பது. குடிசைப் பகுதியில் வசித்தவர்களுக்கு உயரமாகக் கட்டப்படும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மாற்று வீடுகள் வழங்கியது போக, எஞ்சியிருக்கும் வீடுகள் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் அல்லது வணிகப் பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்படும்.

இரண்டாவது பிரிவின் கீழ், பொருளாதாரரீதியில் நலிவடைந்த பிரிவினர் வாங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்கப்படும். ஆறு லட்சம் வரையிலும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கும். மூன்றாவதாக ஒரு குறிப்பிட்ட கட்டுமானத் திட்டத்தில் 35 சதவீத வீடுகள் பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படும். அவர்களுக்கு 1.5 லட்சம் மானியம் வழங்கப்படும். நான்காவதாக, பயனாளிகள் தாங்களே வீடு கட்டிக்கொள்ளவும் பழைய வீட்டைப் புனரமைத்துக்கொள்ளவும் அரசே நேரடியாக மானியம் வழங்கும்.

குடிசை மாற்றுக் குடியிருப்புகள்

குடிசைகளை அகற்றும்போது, அங்கே குடியிருந்தவர்கள் தங்குவதற்கு மாற்று வசதிகள் செய்யப்படுவதில்லை. எனவே, அடிக்கடி குடிசைப் பகுதிகள் அகற்றப்படுவதும் அதே இடத்தில் மீண்டும் குடிசைகள் உருவாவதும் வழக்கமாக இருந்துவருகிறது. அதனால் குடிசைப் பகுதியில் வாழ்பவர்கள் அதற்கு ஆதாரமாக மின் கட்டண ரசீது, குடிநீர் ரசீது ஆகியவற்றைப் பெற முடியாது. இதன் காரணமாக, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மறு குடியிருப்பு வாய்ப்புகளை அவர்களால் பெற முடியாத சூழலே நிலவுகிறது.

வருமான வரம்பு

இரண்டாவது வகையின் கீழ், மூன்று லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பொருளாதாரரீதியில் நலிவடைந்த பிரிவினராகக் கணக்கில் கொள்ளப்படுகின்றனர். மூன்று லட்சம் முதல் ஆறு லட்சம் வரையில் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள், குறைந்த வருமானம் கொண்டவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் கொண்டவர்கள் ஆறு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே குறைவான வட்டி விகிதச் சலுகையைப் பெற முடியும். மேலதிகமாக வாங்கும் கடன் தொகைக்கு வட்டிச் சலுகை இல்லை. எனவே. பெருநகரங்களில் உள்ள குறைந்த வருமானப் பிரிவினருக்கு இத்திட்டத்தால் குறிப்பிடத்தக்க வகையில் எந்தப் பயனும் இல்லை.

மூன்றாவது பிரிவின்படி, கட்டுமான நிறுவனங்கள் இந்த வாய்ப்பைத் தவறான வகையில் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நான்காவது பிரிவின் கீழ் ஏற்கெனவே நிலமும் வீடும் உள்ளவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். ஆக மொத்தத்தில், பிரதமரின் வார்த்தைகள் நல்லதொரு கனவு. ஆனால், திட்டமாக நிறைவேற்றப்படும்போது அக்கனவு நிறைவேறும் வாய்ப்பு இல்லை.

அதிகரிக்கும் இடப்பெயர்வு

தொழில்துறையிலும் சேவைப் பணிகள் துறையிலும் மட்டுமே வேலைவாய்ப்புகள் உள்ள நிலையில், கிராமங்களிலிருந்து நகரத்துக்குக் குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்த இருபதாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகையில் சரிபாதி பேர் நகரங்களில் குடியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், இன்னும் 25 கோடிப் பேர் நகரங்களுக்குக் குடிபெயர இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பது நிறைவேற்றப்பட முடியாத திட்டம். அதேநேரத்தில் வரும்காலத்தில் இடப்பெயர்வு அதிகரிக்கும்போது அதைச் சமாளிக்கும் வகையில் தற்போதைய நகரங்களில் நிச்சயமாக இடமில்லை.

தொழிற்சாலைகளோடு குடியிருப்பு வசதிகளையும் கொண்ட புதிய நகரங்களை உருவாக்குவதே அதற்குத் தீர்வாக இருக்க முடியும். வேலை தேடி இடம்பெயர்பவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு என்பதைக் காட்டிலும் அனைத்து வசதிகளையும் கொண்ட குறைந்த வாடகை வீடுகளே உடனடித் தேவை.

Leave a Reply