shadow

 அனுமன் இதயத்தில் வாழ்ந்த சீதா ராமர்

வனவாசமாக 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து விட்டு, அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றன. 14 ஆண்டுகளாக வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாவிட்டாலும் ராமன் இல்லாததால் எதுவுமே இல்லாதது போல் வாழ்ந்து வந்த மக்களின் முகத்தில் அன்றுதான் உண்மையான ஆனந்தம் தென்பட்டது.

புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அனைத்தும் சேகரித்து வரப்பட்டன; மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டன; வேதங்கள் முழங்கின; பல இன்னிசை வாத்தியங்கள் இசை மழை பொழிந்தன. சீதையும் ராமரும் சேர்ந்து அரியாசனத்தில் சீதாராமராக அமர்ந்தனர். அவர்களை பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த முனிவர்களும், நாட்டு மக்களும், பெரியவர்களும் பூமாரி பொழிந்தனர்.

ராமரின் பாதத்தில் ஆஞ்சநேயர் அமர்ந்திருக்க, அங்கதன் உடைவாள் ஏந்தினான். பரதன் தனது அண்ணனுக்கு வெண்கொற்றக் குடைபிடித்தான். லட்சுமணனும், சத்துருக்கனனும் வெண் சாமரம் வீசினர். பெரியவர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, ரகு வம்ச குருவான வசிஷ்ட முனிவர் அதை வாங்கி ராமபிரானுக்கு முடிசூட்டினார். பட்டாபிஷேகம் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நடந்து முடிந்தது.

அப்போது அனுமனை பார்த்து, ‘வாயுவின் புத்திரனே, இந்த ராமனின் உன்னத பக்தனே மாருதி! உதவி செய்வதில் உனக்கு ஒப்பாக யாரும் இருக்க முடியாது. எனக்கு நீ செய்த பேருதவியானது அளவு கடந்தது. அதற்கு இணையாக நான் உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என் அன்பைத் தவிர விலை உயர்ந்தது எதை நான் உனக்கு தரமுடியும்’ என்று கூறி அனுமனை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அனுமனின் திறமையையும், அவரது ராம பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி, அனுமனுக்கு சிறப்பான ஒளி சிந்தும் முத்துமாலை ஒன்றை பரிசாக கொடுத்தார். அதனை ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டார் அனுமன். பின்னர் அனைவரும் பார்க்கும் விதமாக அந்த முத்துமாலையை பிய்த்து அதில் ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்க தொடங்கினார்.

அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சீதாதேவியே ஒரு கணம் அனுமனின் செய்கையைக் கண்டு திகைத்துப் போனார். ஆஞ்சநேயருக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி அனைவரும் பேசத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது ராமருக்கு தெரியாதா என்ன?. அவருக்கு மட்டும் தெரிந்தது அனைவருக்கும் தெரியவேண்டாமா? அதனால் அனுமனை ஏறிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று கேள்வி எழுப்பினார் ராமர்.

அதற்கு அனுமன், ‘பிரபு! உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள சீதாதேவி கொடுத்த முத்துமாலையில் உங்கள் இருவரின் உருவமும் இருக்கும் என்று எண்ணித்தான் அந்த முத்துக்களை உடைத்து பார்த்தேன். ஆனால் ஒன்றில் கூட உங்களின் திருவுருவம் இல்லை. அது இல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை’ என்று கூறினார்.

இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள், ‘இவன் முத்துமாலையை மாசுபடுத்தியதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக இப்படி கூறுகிறான். நன்றாக நடிக்கிறான்’ என்று ஆளுக்கொரு விதமாக பேசத் தொடங்கினர். இதனை கேட்டதும் ராமர், ‘அப்படியானால் நீ எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறாய். உனக்குள் நானிருப்பதை அனைவருக்கும் காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

ஆஞ்சநேயர் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் கருதினர். ஆனால் ஆஞ்சநேயர், அனைவரும் திகைத்துப் போகும் செயலை அங்கு செய்தார். தன் நெஞ்சை பிளந்து காட்டினார். அதில் அந்த ராமர், தனது உள்ளம் கவர்ந்த சீதாதேவியுடன், சீதாராமராக அமர்ந்திருந்தார். ராமரின் மீது அனுமன் வைத்திருந்த அன்பை, அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

Leave a Reply