shadow

அதிபர் தேர்தலின்போது ரஷ்ய வழக்கறிஞரை எனது மகன் சந்தித்தது உண்மைதான்: டிரம்ப்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி வெற்றி பெற்றதில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தும் நோக்கில் அவருக்கு எதிரான தகவல்களை பெறுவதற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு சொந்தமான ட்ரம்ப் டவரில் ரஷ்யாவை சேர்ந்த பெண் வழக்கறிஞரை ட்ரம்பின் மூத்த மகன், டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் சந்தித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், இந்த குற்றச்சாட்டிற்கு ட்ரம்ப் மற்றும் அவரது மகன் இருவரும் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். எனினும், இது தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தனது மகன் சட்ட ரீதியிலான அபாயத்தில் சிக்கியிருப்பதை நினைத்து அதிபர் ட்ரம்ப் கவலையில் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்ய வழக்கறிஞருடனான தனது மகனின் சந்திப்பை ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

தனது மகன் சட்ட ரீதியிலான அபாயத்தில் இருப்பதை நினைத்து தான் வருந்துவதாக வெளியான செய்திகள் முழுக்க கற்பனையானது. தேர்தலில் எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியை பற்றிய தகவலை அடுத்தவர்களிடம் பெறுவது சட்டப்பூர்வமான ஒன்று தான். அரசியலில் எல்லா நேரங்களில் இது போன்று நடைபெற்று வந்துள்ளது. ஆனால், அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

முதலில் ரஷ்ய வழக்கறிஞருடனான தனது மகனின் சந்திப்பை ட்ரம்ப் மறுத்து வந்த நிலையில் தற்போது அதை ஒப்புக்கொள்வது போன்ற கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #DonaldTrump

Leave a Reply