shadow

அடுக்குமாடி குடியிருப்பில் எந்த தளம் வசதி?

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது இடம், திட்டம், பட்ஜெட், கட்டுநர் போன்ற முக்கிய அம்சங்களைத் தாண்டி எந்தத் தளம் உங்களுக்கு ஏற்றது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். வீட்டின் தளத்தைத் தேர்தெடுப்பது முழுக்க முழுக்க தனிப்பட்ட தேர்வுதான் என்றாலும், அதைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் இருக்கின்றன.

சிலர் எளிமையான அணுகுமுறைக்காகத் தரைத் தளத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். சிலர் நகரத்தின் அழகை ரசிப்பதற்காக உயர் தளத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கணக்கில் எடுத்துகொள்ள வேண்டிய அம்சங்கள்.

நகரத்தின் அழகு

அனைவருக்குமே வீட்டின் பால்கனியிலிருந்து நகரத்தின் அழகை ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அதனால்தான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க விரும்பும் பலரும் உயர் தளங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நகரத்தின் அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கு உயர் தளங்கள்தாம் ஏற்றவை.

பட்ஜெட்

வீட்டை வாங்குவதற்கான உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், தரைத் தளங்களைத் தேர்ந்தெடுப்பதுதான் பாதுகாப்பானது. அடுக்குமாடிக் குடியிருப்பின் உயர் தளங்கள் ஒவ்வொரு தளத்துக்கும் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இது அடுக்குமாடிக் குடியிருப்பு அமையவுள்ள இடம், கட்டுமான நிறுவனம் ஆகிய அம்சங்களைப் பொறுத்து வித்தியாசப்பட வாய்ப்புள்ளது.

அமைதி வேண்டுமா?

பெரும்பாலானவர்கள் வீடு அமைதியான இடத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடுத் தளங்களும் உயர் தளங்களும் சிறந்த தேர்வாக இருக்கும்.

பொறுமையானவரா?

நீங்கள் தினமும் வேலைக்கு அவசரஅவசரமாகக் கிளம்புவீர்களா? லிஃப்டுக்குக் காத்திருப்பது உங்களுக்குப் பிடிக்காத விஷயமா? அப்படியென்றால் நீங்கள் உயர் தளங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தரைத் தளம் அல்லது படிக்கட்டுகளைப் பயன்படுத்தும்படி முதல், இரண்டு தளங்களைத் தேர்வு செய்வதுதான் உங்களுக்கு ஏற்றது.

காற்று வசதி, வெப்பம்

அடுக்குமாடிக் குடியிருப்பின் தரைத் தளங்களில் சூரிய வெளிச்சமும் காற்று வசதியும் குறைவாக இருக்கும். ஆனால், தரைத் தளங்களில் வெப்பம் குறைவாக இருக்கும். நீங்கள் வசிக்கும் நகரம் வெப்பமானதாக இருந்தால், தரைத்தளங்களைத் தேர்ந்தெடுப்பதைப் பரிசீலிக்கலாம்.

பூச்சித் தொல்லை

பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தவை தரைத்தளங்கள்தான். அதனால், பூச்சிகளிடமிருந்து தப்பிக்க விரும்புபவர்கள் நடுத் தளங்களையோ உயர் தளங்களையோ தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால், நடுத் தளங்களிலும் உயர் தளங்களிலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எளிமையாக இருக்கும்.

கட்டுமானக் குறைபாடுகள்

அடுக்குமாடிக் குடியிருப்பில், தரைத்தளங்களிலும் உயர் தளங்களிலும்தாம் நீர்க் கசிவு, நீர் ஓதம் போன்ற கட்டுமானக் குறைபாடுகள் அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க விரும்புவர்கள் நடுத் தளங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

பயங்கள், தேவைகள்

அக்ரோஃபோபியா: உயரத்தைக் கண்டு பயப்படுபவர்கள் உயர்தளங்களைத் தேர்ந்தெடுப் பதைத் தவிர்க்க வேண்டும். சிறப்புத் தேவைகள் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் தரைத் தளத்தில் இருக்கும் வீடுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

விலை வித்தியாசம்

உயர்தளங்களில் இருந்து நகர அழகை ரசிக்கும் வாய்ப்பை வழங்கும் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களில் விலையும் அதிகமாக இருக்கும். உயர்தளங்களை வாங்கும் போது வீட்டுக்குக் கூடுதல் விலைக் கொடுப்பதுடன், தளத்தை எழுப்பும் கட்டுமான விலையையும் கொடுக்க வேண்டியிருக்கும். இந்த விலை ஒவ்வொரு திட்டத்துக்கும் மாறுபடும்.

Leave a Reply