shadow

ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரம் போல… அதிகரிக்கும் ‘புதுமண’ விவாகரத்து!
divorce

கடந்த 10-15 ஆண்டுகளில், விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. அவற்றைத் தீர்த்துவைக்க முடியாமல் நீதிமன்றங்கள் திணறுகின்றன. “சென்னையில் நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. குவிந்துகிடக்கும் குடும்ப வழக்குகளைத் தீர்ப்பதற்கு இந்த எண்ணிக்கைப் போதுமானதாக இல்லை. ஆகவேதான், சனிக்கிழமையிலும்கூட குடும்பநல நீதிமன்றங்கள் இயங்குகின்றன. சென்னையில் தேங்கியுள்ள குடும்ப வழக்குகளைத் தீர்ப்பதற்கு இன்னும் கூடுதலாக நான்கு குடும்பநல நீதிமன்றங்கள் தேவையாக இருக்கிறது” என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சிவக்குமார்.

ஃபாஸ்ட் ஃபுட் யுகத்தில்…  

உணவு, உடை, சுற்றம், நட்பு, அந்தரங்கம் என இவை எல்லாம் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்துவரை வருவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. அடித்துத் துன்புறுத்தி, அயர்ன் பாக்ஸை தன் காதில் தேய்த்த கணவனிடம்கூட, அன்பு காட்டிப் பராமரிக்கும் பெண்கள் காலம்காலமாக இருந்துள்ளனர். சிறுவயதில் இருந்தே திணித்த அறிவுரைகள், தனித்து வாழும் சூழல் இல்லாத சமூகக் கட்டமைப்பு போன்றவற்றால் முந்தைய தலைமுறை வரையிலான பெண்கள் அனைத்து இம்சைகளையும் சகித்துக்கொண்டனர். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. என் வாழ்க்கையை நான் நன்றாக, சுயமாக, மரியாதையாக வாழ விரும்புகிறேன் என இன்றையப் பெண்களில் பலர் நினைக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்வோர் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் என்பது இன்றைய நிலைமை. இதற்கு, பெரும்பாலும் ஆண்களே காரணம் என்பதை, குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பெரும்பாலான வழக்குகள் பதியப்படுவதைப் பார்த்தாலே புரியும். விவாகரத்துக் கோருபவர்கள் என்ன காரணங்களை முன்வைக்கிறார்கள் என்று வழக்குரைஞர் செயபிரகாசு நாராயணனிடம் கேட்டோம்.

“கணவன் தனக்கு சம மதிப்புத் தரவில்லை, உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள், தனிக் குடும்பம் போக மறுத்தல், வேறு பெண்ணுடன் தொடர்பு, குறட்டைச் சத்தம், டி.வி-யே கதி என்று கிடக்கிறார், குடிநோயாளி, பாலியல் உறவில் ஆர்வமின்மை, வரதட்சணைக் கொடுமை, போதுமான வருமானம் இல்லை போன்ற காரணங்களைப் பெரும்பாலான பெண்கள் சொல்கிறார்கள். மனைவி துப்பட்டா அணிவதில்லை, மனைவி ரொம்ப குண்டாக இருப்பதால் அவளுடன் வெளியே சேர்ந்துபோக அசிங்கமாக இருக்கிறது என்பதுபோன்ற காரணங்களை ஆண்கள் சொல்கிறார்கள்” என்கிறார்.

ஆணாதிக்கப் போக்கு!

தான் ஓர் ஆண் என்கிற ஆதிக்கப்போக்கு விவாகரத்துக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. சுயசார்பை ஏற்றுக்கொள்கிற தன்மை, மரியாதை, சேர்ந்து முடிவெடுத்தல் போன்ற விஷயங்களில் பெண்களுக்குச் சமமான மதிப்பை ஆண்கள் தருவது இல்லை என்று பெண்களே குற்றம்சாட்டுகிறார்கள். “பெண் காரணம் என்றால், ‘அவகூட ஏன் வாழுற’ என்பதும், ஆணாக இருப்பின், ‘அனுசரித்துப் போம்மா’ போன்ற அறிவுரைகளைக் குடும்பங்களில் விதிக்கின்றனர். இது தவறு. பொதுவாக, நோயாளியாக ஆண் இருந்தால், பெண் அதை எடுத்துச் செய்ய அறிவுறுத்தப்படுகிறாள். இதுவே பெண்ணுக்கு ஏதோ ஓர் உடல்சிக்கல் என்றால், ‘ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க’, ‘இரண்டாவது கல்யாணம் செய்துக்கோடா’ போன்ற ஆதிக்கத் தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன” என்கிறார் மனநல மருத்துவர், கார்த்திகேயன்.

குறைந்துவரும் சகிப்புத்தன்மை!

விவாகரத்து அதிகரித்து வருவதற்கு அடிப்படையான சில காரணங்கள் குறித்து மனநல மருத்துவர் பிரபாகர், “கெட்டப் பழக்கம், வேறு பெண்ணுடன் தொடர்பு, பொறுப்பின்மை, வேலைக்குப் போகவில்லை போன்ற காரணங்கள் இருந்தால் விவாகரத்துக்குப் போகலாம். ஆனால் இன்று, விவாகரத்துக்கான காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. சகிப்புத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. சுயநலம் அதிகமாகி வருகிறது. இன்றையத் தலைமுறையினர் ரொம்பவும் செல்லமாக வளர்க்கப்படுவதால், மூளையில் வலியைத் தாங்கும் சக்தி அவர்களுக்குப் போய்விடுகிறது. கலாசார மாற்றங்கள் ஒரு காரணமாக இருக்கிறது. திருமண பந்தத்துக்குள் போகும்போதே, நீண்டகாலம் சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் போனது அந்தக் காலம். சரிவரவில்லை என்றால் விவாகரத்துச் செய்துவிடுவோம் என்ற மனநிலையோடுதான் இப்போது மணபந்தத்துக்குள் போகிறார்கள். பெண்கள் பொருளாதார ரீதியாக சுயசார்புடன் இருக்கிறார்கள். எனவே, சரியில்லை என்றால் போய்க்கிட்டே இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்” என்கிறார்

Leave a Reply