shadow

ஸ்ரீராமாநுஜ பிரசாதம்!

மனிதர்கள் அனைவரிடமும் அன்பும் கருணையும் கொண்டு அருள்புரிந்த மகான் ராமாநுஜரின் திருவருட் பிரசாதம், சிற்றின்பத்தில் மூழ்கித் திளைத்த ஒருவரின் மனதை மாற்றி, பெண்கள் எல்லோரையும் தெய்வமாகப் பார்க்கும்படிச் செய்துவிட்டது!

மகானின் வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த அற்புதச் சம்பவம்…

ஒருமுறை ஸ்ரீராமாநுஜர் தம்முடைய சீடர் களுடன் யாத்திரை புறப்பட்டார். யாத்திரை செல்லும் வழியில் திருக்கோவிலூரை அடுத்துள்ள எண்ணாயிரம் என்ற கிராமத்தில் தங்குவதற்குத் திருவுள்ளம் கொண்டார். அந்த ஊரில் அவருடைய பக்தர்களும் சீடர்களுமான யக்ஞேசர், வரதாச்சார்யர் என்பவர்கள் வாழ்ந்து வந்தனர். யக்ஞேசர் வசதி படைத்தவர் என்பதால், தம்முடைய சீடர்களின் உணவு மற்றும் தேவைகளை அவரால் கவனித்துக் கொள்ள முடியும் என்று நினைத்த ஸ்ரீராமாநுஜர், செய்தியை யக்ஞேசருக்குத் தெரிவிக்க இரண்டு சீடர்களை அனுப்பினார்.

சீடர்களும் விரைவாகச் சென்று யக்ஞேசரிடம் தெரிவித்தனர். ஸ்ரீராமாநுஜர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டதுமே பரவசப்பட்ட யக்ஞேசர், மகானை வரவேற் பதற்கான ஏற்பாடுகளில் மூழ்கிவிட்டார். செய்தி கொண்டு வந்தவர்களை ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை; தண்ணீர் கொடுத்து உபசரிக்கவும் இல்லை.

அவர்களின் மூலம் விஷயத்தைக் கேள்விப் பட்டு மனம் வருந்திய ஸ்ரீராமாநுஜர், யக்ஞேசர் வீட்டுக்குச் செல்லாமல், மற்றொரு சீடரும் விதுரரைப் போன்ற குணநலன்களைப் பெற்றவருமான வரதாச்சார்யர் வீட்டுக்குச் செல்ல திருவுள்ளம் கொண்டார்.

மகானும் சீடர்களும் வரதாச்சார்யர் வீட்டுக்குச் சென்றபோது கதவு மூடப்பட்டு இருந்தது. கதவை மெள்ளத் தட்டிய ஸ்ரீராமாநுஜர், தமது வருகையை தெரியப் படுத்தினார். அப்போது வரதாச்சார்யரின் மனைவி லட்சுமி நாச்சியார் குளித்துவிட்டு, ஒற்றை அங்கியை மட்டும் போர்த்திக்கொண்டு, புடைவையை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

மகானின் குரல் கேட்டதுமே பரபரப்புடன் கதவை லேசாகத் திறந்த லட்சுமி, “என் கணவர் வெளியில் பிட்சைக்குச் சென்றிருக்கிறார்’’ என்று கூறியபடி, தன்னுடைய ஒரு கையை வெளியில் நீட்டினாள். அவள் இருக்கும் நிலையைப் புரிந்துகொண்ட மகான், தன்னுடைய மேலங்கியை அவளிடம் நீட்டினார். அந்த அங்கியைப் போர்த்திக் கொண்டு கதவைத் திறந்த லட்சுமி நாச்சியார், ஸ்ரீராமாநுஜரையும் அவருடைய சீடர்களையும் உள்ளே வரச்சொல்லி, மகானுக்குப் பாதபூஜை செய்தாள். அனைவரையும் அமரச் சொல்லி உபசரித்தவள், அவர்களுக்கு உணவு தயாரிப் பதற்காக சமையலறை பக்கம் சென்றாள்.

அங்கே சமைப்பதற்குத் தேவையான பொருள்கள் எதுவுமே இல்லை. கருணையுடன் தங்கள் இல்லம் நாடி வந்த மகானை உபசரிக்க இயலாத தன் கையறுநிலையை நினைத்து லட்சுமி நாச்சியார் கலங்கி நின்றபோது, அவளுக்குப் பக்கத்து வீட்டு வணிகரின் நினைவு வந்தது.

லட்சுமி நாச்சியாரின் அழகில் மயங்கிய வணிகர். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று துடித்தார். ஆனால், கற்பரசியான லட்சுமி நாச்சியார் எப்படி அதற்குச் சம்மதிப்பாள்? இதனால் வணிகரின் தகாத ஆசை நிராசையாகப் போனது. இப்போது லட்சுமி நாச்சியார் ஒரு முடிவுக்கு வந்தாள். வணிகரின் வீட்டுக்குச் சென்றவள், “ஐயா, தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். ஆனால், அதற்கு முன் என் வீட்டுக்கு வந்திருக்கும் மகானையும் அவருடைய சீடர்களையும் நான் உபசரித்து பசியாற்ற வேண்டும். அதற்குத் தேவையான பண்டங்களைத் தாங்கள் கொடுக்க வேண்டும்’’ என்றாள். வணிகரின் விருப்பத்தை நிறைவேற் றிய பிறகு தன் உயிரை மாய்த்துக்கொள்வது என்றும் அவள் தீர்மானித்துவிட்டாள்.

வணிகரும் சம்மதித்து அவள் கேட்ட பண்டங்களை எல்லாம் கொடுத்து அனுப்பினார். லட்சுமி நாச்சியார் அறுசுவை விருந்து சமைத்து ஸ்ரீராமாநுஜருக்கும் அவருடைய சீடர்களுக்கும் பரிமாறினாள். அனைவரும் திருப்தியாக உண்டனர்.

பிட்சைக்குச் சென்ற வரதாச்சார்யர் வீட்டுக்கு வந்ததும், குருநாதர் சீடர்களுடன் தம் வீட்டில் எழுந்தருளி இருப்பதைக் கண்டு பரவசப்பட்டார். மனைவியிடம் சென்று, “குருநாதரையும் வந்தவர்களையும் நன்றாக உபசரித் தாயா?’’ என்று கேட்டார். லட்சுமி நாச்சியாரும் நடந்ததை அப்படியே மறைக்காமல் கணவரிடம் கூறினாள். அதைக் கேட்டு வரதாச்சார்யர் கொஞ்சமும் கோபம் கொள்ளவில்லை. “குரு சேவையே பகவானுக்கான சேவை. கணவருக்கு இழுக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்து நீ செய்த செயல் உன் கற்புத் திறத்துக்குச் சாட்சி’’ என்று கூறினார். இந்த விவரத்தை குருதேவரிடம் தெரிவித்தார் வரதாச்சார்யர். அதைக் கேட்டு சீடர்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்.

அனைத்தும் அறிந்த ஸ்ரீராமாநுஜர், தங்களுக்காக லட்சுமி நாச்சியார் சமைத்த உணவுப் பண்டங்களில் தாங்கள் அருந்தியது போக மிச்சம் இருந்ததைப் பிரசாதமாக அவர்கள் இருவரையும் உண்ணச் சொன்னதுடன், அந்த பிரசாதத்தில் சிறிது எடுத்துச் சென்று வணிகரிடம் கொடுக்கும்படிக் கூறினார்.

வரதாச்சார்யரும் அவருடைய மனைவியும் குருதேவர் சொன்னபடியே, சிறிது பிரசாதத்தை எடுத்துக்கொண்டு சென்று வணிகரின் வீட்டுக்குச் சென்றனர். வரதாச்சார்யர் குரு கொடுத்த பிரசாதத்தை வணிகரிடம் கொடுத்து உண்ணும்படிக் கூறினார். வணிகர் பிரசாதம் உண்ட பிறகு, லட்சுமி நாச்சியார் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாள் என்றும் கூறினார்.

வணிகரும் குருவருள் பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் உண்டார். அவ்வளவுதான், அவர் மனதில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. அதுவரை லட்சுமி நாச்சியாரை இச்சையுடன் பார்த்த வணிகரின் பார்வையில் பக்தி தெரிந்தது. லட்சுமி நாச்சியாரைப் பணிவுடன் வணங்கிய வணிகர், “தாயே, நான் திருந்திவிட்டேன். உன்னைப் பற்றி என் மனதில் நான் கொண்டிருந்த விகல்பமான எண்ணம் அடியோடு தொலைந்து போனது. நீ இப்போது என் கண்களுக்கு என்னை ஆட்கொண்ட தெய்வமாகத் தெரிகிறாய். அன்பு கூர்ந்து என்னை மன்னித்துவிடு’’ என்று இறைஞ்சினார். வரதாச்சார்யரும் லட்சுமி நாச்சியாரும் குருவருள் பிரசாதம் நிகழ்த்திய அற்புதம் என்பதை உணர்ந்தனர். வீட்டுக்குச் சென்று குருவின் திருவடிகளில் இருவரும் பணிந்தனர்.

ஆம்! குருவருள் பிரசாதம் நிகழ்த்திய அற்புதம் தான் அது!

Leave a Reply