வேலை – குடும்பம் சரியாக சமாளிக்கிறீர்களா?

1இன்று வெள்ளிக்கிழமை..நாளை காலை எழுந்திருக்கும் போது ஆபீஸ் ஃபைல்களோடும், கணினியில் எக்ஸ்.எல் ஷீட்களோடும் ஆரம்பிக்கிறதா உங்கள் வார இறுதி நாட்கள். இந்த கட்டுரை உங்களுக்கானது தான். வாழ்க்கை – வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், வேலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் குடும்பத்தைக் கவனிக்காமலோ அல்லது குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வேலையைக் கவனிக்காமல் போனாலோ சிரமம்தான். இதனை சமாளிக்க எளிமையான 5 வழிகள் இதோ…

1. திட்டமிடுங்கள்!

உங்களது ஒருநாளை அட்டவணைப்படுத்தி திட்டமிடுங்கள். ஒருநாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளைக் கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம் என்பது சமநிலையில் அமையும். இது அப்படியே சரியாக ஃபாளோ செய்ய முடியுமா? என்றால் இல்லை என்பது தான் பதில் ஆனால் இந்த நேரத்தை ஓரளவுக்கு பேலன்ஸ் செய்தாலே உங்கள் வார இறுதி நாட்கள் ஹாப்பி தான்.

2.நல்ல தருணங்களை இழக்காதீர்கள்!

உங்கள் வேலைதான் முக்கியம். அதுதான் உங்கள் குடும்பத்தை நடத்த உதவுகிறது. இதற்காக வேலையே கதி என்று இருந்து விடாதீர்கள் ஊரில் நடக்கும் திருவிழா போன்ற விழாக்களுக்கோ அல்லது உங்கள் உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அலுவலக வேலைகளை முன்னரே திட்டமிட்டு முடித்துவிட்டு, அந்த நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் சென்று வாருங்கள். இது உங்களை மீண்டும் புத்துணர்ச்சியோடும், அதிக பொறுப்போடும் வேலையை தொடரவும் உதவும்.

3. அலுவலகம்- வீடு இணைக்காதீர்கள்!

அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒருசிலர் தங்கள் வீட்டுக்கு போனில் பேசிக்கொண்டும்; வீட்டில், குழந்தைகளுடன் விளையாடு வதற்கு பதிலாக லேப்-டாப்பை எடுத்துவைத்து அலுவலக வேலை களையும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.இப்படி ஒன்றோடு ஒன்றை கலப்பதை நிறுத்தினாலே உங்கள் குடும்பம் – வேலை சமநிலை அடைந்து விடும். அலுவலகத்தில் குடும்பம் பற்றிய நினைப்பு வேண்டாம்; வீட்டுக்கு வந்தவுடன் அலுவலகம் பற்றிய சிந்தனை வேண்டாம். இரண்டையும் ஒன்றோடு ஒன்றை கலக்காமல் இருந்தாலே போதும்.

4. வொர்க்கஹாலிக்காக இருக்காதீர்கள்!

சிலர் எப்போதும் குடிபோதையில் இருக்கிற மாதிரி, வேலை, வேலை என்று வேலை போதையில் இருப்பார்கள். இப்படி வொர்க் ஹாலிக்காக இருப்பவர்கள், அலுவலக வேலையை அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து செய்தது போதாதென்று, அந்த வேலையை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் செய்வார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் விளையாட அழைத்தால், வள்ளென்று விழுவார்கள். இந்த பழக்கத்தை மட்டும் கைவிடுங்கள் உங்கள் வொர்க்-லைஃப் பேலன்ஸ் தானாக சீராகும்.

5. மிஸ்டர் கூலாக இருங்கள்:

வீட்டில் உள்ள கோபத்தை அலுவலகத்திலோ அல்லது அலுவலகத்தில் ஏற்பட்ட மனக் கவலையை வீட்டிலோ காட்டா தீர்கள். வீட்டில் நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி வைக்கும் போதே, அலுவலகம் தொடர்பான அதிருப்தியான எண்ணங்களையும் மறந்து விடுங்கள். அதேபோல, வீட்டில் இருக்கும் பிரச்னையை அலுவலகத்தில் ஸ்வைப்பர் கார்டினைக் காட்டி வருகைப்பதிவை பதியும் போதே, மனதிலிருந்து அழித்துவிடுங்கள். இது இரண்டும் உங்களை கூலாக வைத்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *