shadow

வேலைக்காரன் திரைவிமர்சனம்

ஒரு வேலைக்காரன் என்பவர் முதலாளி செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருப்பது விசுவாசமில்லை, நுகர்வோர்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்த எடுத்த முயற்சிதான் இந்த வேலைக்காரன் திரைப்படம்

அப்பாவி குப்பத்து இளைஞர்களை அடிமையாக்கி கூலிப்படை வைத்திருக்கும் பிரகாஷ்ராஜிடம் இருந்து இளைஞர்களை விடுவிக்க முயற்சியில் ஆரம்பிக்கும் கதை பின்னர் பிரகாஷ்ராஜ் கூலி வாங்கிக்கொண்டு செய்வதை தான் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்க்கும் மார்க்கெட்டிங் அதிகாரிகள் செய்கின்றனர் என்பதை உணர்ந்து வேலைக்காரர்களையும் முதலாளிகளையும் திருத்த சிவகார்த்திகேயன் எடுக்கும் முயற்சிதான் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவருடைய வழக்கமான காதல், காமெடி, பாடல், டான்ஸ், கலாய்ப்பு போன்ற அம்சங்களை எதிர்பார்த்து சென்றால் நிச்சயம் ஏமாந்துவிடுவீர்கள். முழுக்க முழுக்க படம் முழுவதும் ஒரு வித்தியாசமான சிவகார்த்திகேயனை இந்த படத்தில் பார்க்கலாம். சிவகார்த்திகேயனை இந்த படம் நிச்சயம் வேறு லெவலுக்கு அழைத்து செல்லும் என்பது உறுதி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த படத்தின் ஒருசில காட்சிகளுக்கு உதவினாலும், அவர் இந்த படத்திற்கு தேவையே இல்லை என்பதுதான் உண்மை

சிவகார்த்திகேயனுக்கு இணையான கேரக்டர் பகத் பாசிலுக்கு. அவரும் நடிப்பில் பிச்சு வாங்குகிறார். கார்ப்பரேட் முதலாளி கேரக்டருக்கு பொருத்தமானவர்.

பிரகாஷ்ராஜின் ரெளடித்தன நடிப்பு, கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உண்மையில் யார் கூலிப்படையினர் என்பதை சிவகார்த்திகேயனிடம் விளக்கும் காட்சி அருமை

ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் காமெடி செய்யவில்லை, ஆனால் கருத்து சொல்கிறார், அதுவும் மனதில் பதியும்படி. மன்சூர் அலிகான், சார்லி, ரோகினி, ரோபோ சங்கர், தம்பி ராமையா, என அத்தனை கேரக்டர்களும் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

அனிருத்தின் இசையில் இரண்டு பாடல்கள் சூப்பர். பின்னணி இசையும் அருமை. ராம்ஜியின் ஒளிப்பதிவைவும் கலை இயக்குனரின் உழைப்பையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை

இயக்குனர் மோகன்ராஜாவின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் எடிட்டர் கவனித்திருக்கலாம். கூர்மையான வசனங்கள் படத்திற்கு முதுகெலும்பு.

மொத்தத்தில் ‘வேலைக்காரன்’ விவேகமாக தந்திரக்காரன்

Leave a Reply