வெறுக்கக்கூடியதா வெயில்?

கோடை காலம் தொடங்கி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியர்’ வேகம் போல் 100 டிகிரி வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இன்னும் நாலைந்து மாதங்களுக்கு கஷ்டகாலம் தான். என்றாலும், எப்படி இயற்கையின் கொடை, மழையோ அதுபோல் வெயிலும் ஒரு கொடையே. நமக்கு ஆரோக்கியம் தரும் சூரிய ஒளியின் மகத்துவத்தை நாம் அறியாமல் அதனை வெறுக்கிறோம். காலை வெயிலும், மாலை வெயிலும் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு அளிக்கின்றன.

காலையில் 7 மணிக்கு முன்னும், மாலையில் 4 மணிக்கு பின்னும் சூரிய ஒளி நம் உடலில் படுவதால் வாத நோய் குணமாகிறது. தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால் தோலுக்கடியில் மறைந்திருக்கும் ஒருவித வைட்டமின், வைட்டமின் “டி”யாக மாறுகிறது. இதனால் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி எலும்புகளை, தசைகளை பலப்படுத்தி வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியிலுள்ள கொழுப்பு சூரிய ஒளியால் கரைகிறது.

சோரியாசிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய்க்கு, வெட்பாலை தைலத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இளவெயிலில் சிறிது நேரம் காட்டினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் ‘டி’, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. முகத்தில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து 5 நிமிடம் சூரியஒளி படும்படி இருந்து பின்னர் இதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும், சூரிய ஒளி, நீர் நிலைகளில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்கிறது.

உடலில் செரடோனின் எனும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து டிப்ரஷன் எனும் மனச்சோர்வைத் தடுக்கிறது. தினமும் காலை சூரிய ஒளி படும்படி நடைபயிற்சி மேற்கொண்டால் வாழ்நாள் அதிகரிக்கிறது. சூரிய ஒளியால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் தாவரங்கள் சூரிய ஒளியின் மூலமே அதிக மகசூல் பெற்று நமக்கு காய்கள், பழங்களைத்தருகின்றன. இப்படி எண்ணற்ற மகத்துவம் கொண்ட வெயிலை வீட்டுக்குள் விடாமல் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் அடைந்து கிடந்தும், வாகனங்களை பயன்படுத்தியும் நோயை விலை கொடுத்து வாங்குகிறோம்.

ஆக வெயில் என்றால் காலையில் அடிக்கும் இளவெயில் மிகவும் நல்லது. மாலை நேர மஞ்சள் வெயிலும் நல்லது தான். அதேநேரம் உச்சி வெயில் உடம்புக்கு ஆகாது. எனினும், கொளுத்தும் மதிய நேர வெயிலில் இருந்து நம்மை காக்க நாம் இருக்கும் இடங்களில் அதிக அளவில் மரங்களை நட்டும், அதிக அளவில் சுத்தமான குடிநீரை பருகியும், கம்பங்கூழ், மோர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, பதநீர், மண்பானை நீர் போன்றவற்றை அருந்தியும் கொதிக்கும் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

ஒரேயடியாக வெயிலை வெறுக்கக்கூடாது. அது தரும் அனுகூலங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *