shadow

வீட்டை விற்க போகிறீர்களா? இதை முதலில் கவனிக்கவும்

ன் வீட்டை விற்பது ஒரு பிரச்சினையே இல்லை. இந்தக் காலத்தில் நல்ல இடத்தில் வீடுகள் அதிகம் விற்பனைக்கு வருவதில்லை. அப்படியிருக்க நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வந்து வாங்கிச் செல்வார்கள்” என்று என் நண்பர் ஒருவர் நினைத்தார். ஆனால் நடந்தது வேறு. பலரும் வந்து வீட்டைப் பார்த்தார்கள். ஆனால் யாரும் நண்பர் குறிப்பிட்ட விலைக்கு அதை வாங்க முன்வரவில்லை. இத்தனைக்கும் என் நண்பர் அப்படியொன்றும் பேராசைத்தனத்துடன் விலையை நிர்ணயிக்கவில்லை.

வீடுகளை வாங்குவது, விற்பதில் அனுபவமுள்ள ஒருவரைக் கேட்டபோது வீட்டை விற்க நினைப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வீட்டை வெள்ளையடித்து நெடுங்காலமாகி இருந்தால் அதை வெள்ளையடித்த பின் விற்பதுதான் நல்லது. ‘விற்கத்தானே போகிறோம். இது எதற்கு வீண் செலவு?’ என்று நினைப்பது தவறு. பாழடைந்த வீடாகக் காட்சியளிக்கும் ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். வெள்ளையடிப்பதற்காக நீங்கள் செலவழிக்கும் பணத்தைவிட அதிகமாகவே விற்பனை விலை அதிகரிக்கும்.

சிலர் தன் வீட்டிலிருக்கும் அறைக்கலன்களுடன் சேர்த்து வீட்டை விற்கத் தயார் என்பார்கள். கரும்பு தின்னக் கூலியா என்பதுபோலப் பலரும் இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் மிகவும் பழமையான அறைக்கலன்களை அங்கு வைத்திருந்தாலோ குறைபாடுள்ள, பழுதடைந்த அறைக்கலன்கள் வைத்திருந்தாலோ அந்த வீடு உடனடியாக விற்பனையாகாது. வாங்குபவருக்கு அந்த அறைக்கலன்கள் பிடிக்காமல் போகலாம். மேலும் அது வீடு வாங்கும் அவர்களது எண்ணத்தையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் அவர் வீட்டை வாங்காமல் போக வாய்ப்பு உண்டு. தவிர மிகவும் பழைய அறைக்கலன்கள் என்றால் அந்த வீடு மிகவும் பழையது என்பதை அது கோடிட்டுக் காட்டுவதுபோல இருக்கும்.

“நான் உங்கள் வீட்டை விற்றுத் தருகிறேன். இவ்வளவு சதவிகிதம் கமிஷன் கொடுங்கள்’’ என்று கூறிக் கொண்டு சில தரகர்கள் முன்வரலாம். அவர்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். வலைதளங்களும்கூட இந்த விதத்தில் உதவலாம். “சமீபத்தில் யாருடைய வீட்டை விற்றீர்கள்?’’ என்று விவரங்களைக் கேட்டறிந்து, அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களது அனுபவத்தைக் கேட்டறியலாம்.

யூ-டியூபில் உங்கள் வீட்டைப் புகைப்படங்களாகவோ வீடியோவாகவோ பதிவேற்றலாம். இதற்கு ஒன்றும் செலவில்லை. பார்த்துவிட்டு உங்களை அணுகுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்.

சரியான காலகட்டமாகப் பார்த்து விற்பனைக்கான நடைமுறையைத் தொடங்குங்கள். மார்ச் மாதத்திலிருந்து தொடங்கும் சில மாதங்கள் பெரும்பாலும் சரியான காலகட்டமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு விடுமுறை எனும்போது வீடு பார்க்க வருவதும் எளிது. பள்ளிக்கு அருகே உள்ள வீடாக வாங்குவதற்கும் வாய்ப்பு உண்டு.

முடிந்தவரை வீட்டிலுள்ள சின்னச் சின்ன பழுது நீக்கும் வேலைகளையெல்லாம் சரி ெய்து விடுங்கள். முக்கியமாகக் கதவில் உள்ள கைப்பிடிகள் மற்றும் தாழ்ப்பாள்கள்.

விளம்பரம் செய்தாலோ புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொண்டாலோ உங்கள் வீட்டை தேவலோகம் போலக் காட்ட முயற்சிக்க வேண்டாம். மிகவும் எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் உண்டாகி அதன் காரணமாகவே அவர்கள் அதை வாங்காமல் போகலாம்.

இப்போது உங்கள் வீட்டில் குடியிருப்பவர்களைக் காலிசெய்ய வைத்துவிட்டு அதற்குப் பிறகு வீட்டை விற்பனைசெய்ய முயலுங்கள். என்னதான் நீங்கள் அவர்கள் காலி செய்வதற்கான நோட்டீஸ் கொடுத்திருந்தாலும் வருபவர்களின் மனதில் ‘அவர்கள் ஒருவேளை காலி செய்ய மறுத்துவிட்டால்?’ என்ற சந்தேகம் எழும்.

வீட்டு வரி, தண்ணீர் வரி போன்றவற்றை முழுவதுமாக முன்னதாகவே கட்டி விடுங்கள்.

சின்னச் சின்ன காரணங்களால் உங்கள் வீட்டு விற்பனை தடைப்படக் கூடாது இல்லையா?

Leave a Reply