shadow

வீட்டிற்கு இன்வர்ட்டர் ஏசி நல்லதா? கெட்டதா?

எனக்கு சின்னச் சின்ன சத்தத்துக்கெல்லாம் முழிப்பு வந்துடும். அதுக்கப்புறம் சுலபத்திலே தூக்கம் வராது” இப்படி நண்பர் ஒருவர் சொன்னார். உடனே அருகிலிருந்த நண்பர் இன்னொருவர் “உன் வீட்டிலிருக்கிற வழக்கமான ஏ.சி.யை மாற்றி, இன்வர்ட்டர் ஏ.சி.யைப் பொருத்து” என்றார்.

அதைக் கேட்டபோது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதுபோல இருந்தது. ஆனால், இதற்கான அறிவியல் பின்னணி உண்டு என்பது பின்னர் ஒரு எலக்ட்ரிஷியனிடம் பேசியபோது தெரிந்தது.

முதலில் ஒன்றில் தெளிவு வேண்டும். பெயரை வைத்துக் காண்டு சிலர் இன்வர்ட்டர் ஏ.சி.யைத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். வீட்டில் நாம் இன்வெர்ட்டர் பொருத்துவதன் நோக்கம் என்ன? மின்வெட்டு நிகழ்ந்தாலும் அடுத்த சில மணி நேரத்துக்கு வீட்டில் அது மின்தொடர்பை அளிக்க வேண்டும். இதுதானே! இதை மனத்தில் கொண்டு இன்வர்ட்டர் ஏ.சியை நாம் பொருத்திவிட்டால் மின் இணைப்பு இல்லாதபோதும் தானாக அது (சில மணி நேரங்களாவது) இயங்கிக் கொண்டிருக்கும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்வர்ட்டர் ஏ.சி.யின் இயக்கம் வேறு வகையானது.

வழக்கமான (அதாவது இன்வர்ட்டர் ஏ.சி. அல்லாத) ஏ.சி.யில் உள்ள கம்ப்ரஸரின் வேகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்வர்ட்டர் ஏ.சி.யில் கம்ப்ரஸரின் மோட்டார் மாறுபடக்கூடிய வேகத்தைக் கொண்டது. அறையின் வெப்பத்துக்குத் தகுந்தாற்போல இந்த இன்வர்ட்டரால்தான் அளிக்கும் காற்றை அதிகம் குளிரூட்டவோ குறைக்கவோ முடியும். இதன் காரணமாக மின் பயன்பாடு குறையும்.

இன்வர்ட்டர் ஏ.சி. என்பது நவீன முறையில் உருவாக்கப்பட்டது. அதன் கம்ப்ரஸர் எல்லா நேரமும் முழு மூச்சுடன் இயங்குவதில்லை. அதன் வேகம் குறையும்போது ஏ.சி. கருவி இயங்கத் தேவைப்படும் மின்சாரமும் குறைகிறது. எனவே, மின்சாரக் கட்டணமும் குறைகிறது.

இன்வர்ட்டர் ஏ.சி மேலும் அதிக காலத்துக்கு உழைக்கும். வழக்கமான ஏ.சி.யைவிட இன்வர்ட்டர் ஏ.சி. அறையைச்சற்று சீக்கிரமே குளிர வைக்கும். அது எப்படி என்று பார்ப்போம்.

வழக்கமான ஏ.சி. என்பது நீங்கள் எந்த அளவு வெப்பத்துக்கு அதை ‘செட்’ செய்கிறீர்களோ அதைவிட இரண்டு டிகிரி வெப்பத்துக்குக் குறைவாகத் தன்னை அமைத்துக்கொண்டு கம்ப்ரஸரை அணைத்து விடும். அதாவது 24 டிகிரி செல்ஷியஸுக்கு நீங்கள் ஏ.சி.யை வைத்தால் அறை 22 டிகிரி செல்ஷியஸுக்குக் குளிரவைக்கப்பட்டு அதன் கம்ப்ரஸர் நின்றுவிடும். பிறகு ஏ.சி.யில் உள்ள விசிறி இயங்கத் தொடங்கி விடும். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அறையின் வெப்பம் 26 டிகிரி செல்ஷியஸை அடையும்போது கம்ப்ரஸர் மீண்டும் இயங்கத் தொடங்கும். (அந்த நேரம் விசிறிப் பகுதியிலிருந்து அறைக்குள் ஃப்ரீயான் வாயு வெளிப்படும் ஒலியை நம்மால் கேட்க முடியும்). அப்போது மீண்டும் அறை 24 டிகிரி செல்ஷியஸுக்குக் குளிர வைக்கப்படும். இதுதான் வழக்கமான ஏ.சி.யின் இயக்கம்.

ஆக இப்படி மாறும் வெப்பம் என்பது சில நேரம் உங்களுக்கு அதிக வெப்பத்தையோ அதிகக் குளிரையோ தரலாம். இது உங்கள் தூக்கத்தைப் பாதிக்கலாம். இன்வர்ட்டர் ஏ.சியில் இப்படித் தோராயங்கள் கிடையாது (அதாவது 2 டிகிரி கீழோ, 2 டிகிரி மேலோ என்பதுபோல). அதிகபட்சம் 0.5 டிகிரி செல்ஷியஸ் மட்டுமேதான் நீங்கள் செட் செய்த வெப்பத்தைவிட அது மேலான அல்லது கீழான வெப்பத்தில் இயங்கும்.

தவிர இன்வர்ட்டர் ஏ.சி.-யிலிருந்து சத்தம் வராது. இதுவும் தடையற்ற தூக்கத்துக்கு வழிவகுக்கிறது. ஆக சீரான குளிரூட்டல் நடைபெறுவதாலும், சத்தம் வராததாலும் இன்வர்ட்டர் ஏ.சி. உங்களுக்குத் தடையில்லாத உறக்கத்தை வழங்குகிறது எனலாம்.

இன்வர்ட்டர் தொழில்நுட்பத்தில் வேலை செய்வதால் இது சீராக இயங்குகிறது. எனவே, வோல்டேஜில் மாற்றங்கள் உருவாவதில்லை. குளிர்விப்பதற்காக இன்வர்ட்டர் ஏ.சி.யில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள் ஆகியவை (வழக்கமான ஏ.சி.யில் பயன்படுத்துவதைவிட) தரமானவை. எனவே, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்துவதில் இது அதிகப் பங்கு வகிப்பதில்லை.

குறைவான மின்சக்தியே இதற்குத் தேவைப்படுகிறது. எனவே, மின் கம்பியில் இது கொடுக்கும் அழுத்தம் என்பது குறைவானதுதான். எனவே, இது வீடுகளில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பான ஒன்றாக இருக்கிறது.

ஆனால், இன்வர்ட்டர் ஏ.சி.யின் விலை அதிகம். காரணம் இதில் பல உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே இதன் பராமரிப்புக்கும் அதிகச் செலவு உண்டாகலாம். என்றாலும் காலப்போக்கில் வழக்கமான ஏ.சி.-ஐவிட இன்வர்ட்டர் ஏ.சி.யே சிறந்த முதலீடாக இருக்கும் என்பதுதான் இப்போதைய நிலை

Leave a Reply