வீடு வாங்குவதில் அதிகரிக்கும் ஆர்வம்

1ரியல் எஸ்டேட் துறை வளம்பெற வேண்டுமானால் புதிய புதிய வாடிக்கையாளர்கள் வந்துசேர வேண்டும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும்போது விற்பனைகூடும், ரியல் எஸ்டேட் துறையும் பலன் பெறும். ஆகவே, புதிய வாடிக்கையாளரை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதே அத்துறையினர் தேடுதலாக இருக்கும். ஆனால் சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற கதையாக ரியல் எஸ்டேட் துறைக்கு அவ்வப்போது அடியும் கிடைத்துவருகிறது. ஆனால், அத்தனை பாம்பு கொத்தலையும் மீறி ஏணியில் கால் பதித்து ஏற்றம் பெற்றுவிட வேண்டும் என்னும் முனைப்புடன் ரியல் எஸ்டேட் துறையும் தனது பரமபதத்தைத் தொடர்ந்துவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8 அன்று அறிவித்த பண மதிப்பு நீக்க அறிவிப்பால் ரியல் எஸ்டேட்டின் செயல்பாடுகள் சிறிது தேக்கமடைந்தன. உடனடியாக பெரும் தொகையைப் புரட்ட முடியாததால் புது வீடு வாங்குவது உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் சுணக்கம் ஏற்பட்டது. உழைத்துச் சம்பாதித்த பணம் என்றாலும்கூட உடனடியாக அதை வங்கியிலிருந்து எடுக்க முடியாத ஒரு நிலையைத் தேசம் சந்திக்க வேண்டியதிருக்கிறது. ஆகவே, ரியல் எஸ்டேட்டின் பணப் பரிவர்த்தனை இறங்குமுகமானது. இனி நிலைமை புத்தாண்டிலாவது மேம்பட்டுவிடாதா என்று அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அதற்குள் பணப் புழக்கம் கூடி மீண்டும் குடியிருப்புத் திட்டங்களும் வணிக வளாகங்களும் விற்கப்பட வேண்டும் என வேண்டுகிறார்கள். அவர்களுடைய மனத்தைக் குளிர்விக்கும்படியான ஓர் அறிக்கை தற்போது வெளியாகியிருக்கிறது. சிபிஆர்இ நிறுவனம் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் வசித்துவரும் இளம் தலைமுறையினரிடம் நடத்திய அறிக்கையில் ரியல் எஸ்டேட் துறையினர் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு கூற்று இடம்பெற்றிருக்கிறது.

புத்தாயிரத்தத் தலைமுறையினரில், அதாவது, 22-லிருந்து 29 வயது வரையான இளைஞர்களில் 23 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் அடுத்த இரண்டிலிருந்து ஐந்து ஆண்டுக்குள் புது வீடு வாங்கும் திட்டத்தில் இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பு, வீடு அவர்களது நுகர்வு முறைமை போன்றவற்றைப் பற்றிய ஆய்வை நடத்தி, அதில் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்தியாவில் புத்தாயிரத் தலைமுறையினரில் 82 சதவீதத்தினர் தங்கள் பெற்றோருடன்தான் வசித்து வருகிறார்களாம்; சீனாவில் 62 சதவீதத்தினரும் ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்தினரும் மட்டுமே பெற்றோர்களுடன் வசித்துவருகிறார்கள்.

இந்த ஆய்வில் கலந்துகொண்டு பதில்களைத் தந்த இளைஞர்களில் பெற்றோருடன் வசிக்காத 70 சதவீத இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவதைவிட வாடகை வீட்டில் குடியேறுவதையே விரும்புகிறார்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தக் கூற்றிலிருந்து பெற்றோருடன் வசிக்காத இளைஞர்களில் 30 சதவீதத்தினர் சொந்த வீடு வாங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கலாம் என ஊகிக்க இடமிருக்கிறது. இது ரியல் எஸ்டேட் துறைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஊகமே.

இந்தியாவைப் பொறுத்தவரை, குடும்பத்துடன் ஒரே வீட்டில் வாழும் புத்தாயிரத் தலைமுறையினரில் 25 சதவீத்தினர் அந்த வீட்டை விட்டு வெளியேறி தனி வீட்டில் வாழும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் 65 சதவீதத்தினர் தாங்கள் இப்போது வசிக்கும் தரத்தில் எந்தச் சமரசமும் இல்லாமல் அதே போன்ற தரத்திலான வீட்டை வாங்கும் விருப்பத்தில் உள்ளார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த எண்ணம் அவர்களிடம் உறுதிபட வெளிப்படுகிறது என்பதை அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்திய இளைஞர்களின் வீடு வாங்கும் எண்ணமானது ஒரு முதலீடு என்னும் அளவிலேயே உள்ளது என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது. இந்த அம்சங்களை எல்லாம் கூர்ந்து நோக்கும்போது, இவர்கள் தங்கள் எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் போது அதனால் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பெறும் என்பது உறுதிப்படுகிறது என அத்துறையின் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *