வீடு கட்ட சில யோசனைகள்

1சொந்த வீடு கட்டுவது என்பது இன்றைக்குப் பெரும் சவாலான காரியம். வீட்டுக் கடன் வாங்குவது, கட்டுநரைத் தேர்ந்தெடுப்பது எனப் பரபரப்பாக இருக்கும்போது நண்பர்கள் வேறு ஆளாளுக்கு ஆயிரம் யோசனைகள் சொல்லிக் குழப்புவார்கள். இம்மாதிரியான சூழல்களில் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் இது நாம் ஒரு ஆயுளைக் கழிக்கப்போகும் வீடு அதனால் நாம் நமக்கான வீட்டை நம் விருப்பப்படிதான் கட்ட வேண்டும். அதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்படிச் சொத்த வீடு கட்டுபவர்களுக்கான சில யோசனைகள்.

கட்டிடப் பணிகளுக்குத் தண்ணீரின் தரம் முக்கியமானது. உப்புச் சுவை உள்ள தண்ணீர் என்றால் அது கட்டிடத்தின் உறுதிக்குப் பங்கம் விளைவிக்கும். அதனால் கட்டிடப் பணிகளுக்கு நல்ல தண்ணீர் உபயோகிக்க வேண்டும். அதைக் கவனிக்க வேண்டும். கட்டிடப் பணிகளுக்காக முதலில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்குப் பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

கட்டிடத்தின் உறுதிக்கான மற்றொரு விஷயங்களில் ஒன்று, சிமெண்ட். அந்த சிமெண்டின் தரத்தை அதன் நிறத்தை வைத்தே ஒரளவு தீர்மானித்துவிடலாம். லேசான பச்சை நிறத்தில் இருந்தால் அது நல்ல சிமெண்ட் என ஊகித்துக்கொள்ளலாம். அதுபோல சிமெண்ட் மூட்டைக்குள் கைவிடும்போது குளுமையாக இருந்தால் அது சிறந்த தரம் என அறிந்துகொள்ளலாம்.

சிமெண்டின் தரத்தை அறிய மற்றொரு முறை, அதைத் தண்ணீருக்குள் இடும்போது அது மிதந்தால் தரம் சரியில்லை என அறிந்துகொள்ள முடியும். சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ. அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஓரளவு குறைவாக இருந்தால் சரி. 1 கிலோவுக்கும் அதிகமாகக் குறைந்திருந்தால் அதை வாங்கிய இடத்தில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

இன்றைக்குத் தங்கத்தைப் போல விலை மதிப்பான பொருளாக மணல் மாறிவிட்டது. விலை மதிப்பு அதிகமாக, அதிகமாக அதில் கலப்படம் வந்துவிடும் அல்லவா? ஆற்று மணலில் தூசியைக் கலக்கிறார்கள். சிலர் ஆற்று மணலுடன் கடல் மணலைக் கலக்கிறார்கள். அதனால் மண்ணை முறையாகப் பார்த்து வாங்க வேண்டும். கடல் மணலைக் கண்டுபிடிக்க மணலின் உப்புச் சுவையைப் பரிசோதித்தாலே போதும். கடல் மணலில் உப்புச் சத்து அதிகமாக இருக்கும். மணலில் அதிகமாகக் குருணை இருந்தால் பயன்படுத்தத் தகுதியில்லாததாக இருக்கும். குருணை அதிகமாக உள்ள மணல் சிமெண்டுடன் கலக்காது.

இப்போதுள்ள நவீனத் தொழில்நுட்பத்தைத் துணிச்சலாகப் பயன்படுத்த வேண்டும். அதனால் நேரமும் கூலியும் மிச்சமாகும். உதாரணமாக ரெடிமேட் கட்டுமானக் கம்பிகள் இப்போது சந்தையில் கிடைக் கின்றன. கட்டிடத்தின் வரைபடத்துக்குத் தகுந்தாற்போல் அவர்களே கம்பியை வளைத்துக் கொண்டுவந்து இடத்திலேயே இறக்கிவிடுவார்கள். முன்புபோல கட்டுமான இடத்தில் தனியான இடத்தை நிர்மாணித்துக் கம்பிகளை வளைத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்ல.

அதுபோல, சிமெண்ட் கலவையிலும் தேவையான அளவு ரெடி மிக்ஸைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டுமானத்துக்குப் பிரித்துப் பார்க்க முடியாத அளவில் உறுதியும் உருவமும் தருவது செங்கல். இதன் தரத்தை அறிய ஓர் எளிய வழிமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது நாலைந்து செங்கற்களை எடுத்து நீரினுள் இட வேண்டும்.

24 மணி நேரத்துக்குப் பிறகு அதை எடுத்து விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் அந்தச் செங்கற்கள் தரம் குறைவானவை என அறிந்துகொள்ளலாம். இப்போது பலவகையான மாற்றுச் செங்கற்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் விலையும் மிச்சமாகும்; தரத்திலும் சிறந்தவையாக இருக்கும்.

அதுபோல தேவையப் பொறுத்து அதற்குத் தகுந்த கற்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுச் சுவர்களுக்கு ஹல்லோ செங்கல் உகந்தவையாக இருக்கும். இப்போது வீடு கட்டுவதற்கும் இவ்வகையான மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்துவது நல்லது எனப் பசுமைக் கட்டிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பாரம்பரிய முறையிலான செங்கற்கள் தயாரிக்கச் செலவாகும் ஆற்றலால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது மாற்றுச் செங்கற்கள் சுற்றுச் சூழலுக்கு உகந்தவை.

அதனால் கூடியவரை நாம் மாற்றுச் செங்கற்களைக் கட்டிடப் பணிகளுக்குப் பயன்படுத்துவோம். கட்டுமானப் பொருள்களைக் கையாளும்போது அவற்றில் சிறிதளவு வீணாகக்கூடும். அவை சிறிய அளவாக இருந்தால் சரி. அப்படியில்லாமல் அஜாக்கிரதையாகக் கட்டுமானப் பொருள்களைக் கையாண்டு அதன் மூலம் ஆகும் கட்டுமானச் சேதாரத்திற்கு நாம் பொறுப்பாக வேண்டிய அவசியமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *