shadow

விபத்துக்குள்ளான வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வது எப்படி?

என்னதான் நாம் பாதுகாப்பாக பயணம் செய்தாலும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியாத நிலைதான் உள்ளது. நம்முடைய கவனக்குறைவு இல்லையென்றாலும், பிறரது கவனக்குறைவு மற்றும் சரியில்லாத சாலை என ஏதோ ஒரு விஷயம் விபத்துக்குக் காரணமாகிவிடலாம். எதிர்பாராத விபத்துகளில் நமக்குக் கைகொடுப்பது இன்ஷூரன்ஸ்தான்.

இன்ஷூரன்ஸ்

விபத்தில் நமக்கு ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால், அதற்கு பெர்சனல் ஆக்சிடென்ட் கவர் பாலிசிகள் இருந்தால் சமாளித்துவிடலாம். அதேபோல் வாகனங்களுக்கும் இன்ஷூரன்ஸ் எடுப்பது கட்டாயமாகிறது. அந்த இன்ஷூரன்ஸை வைத்துதான் நம்முடைய வாகனத்துக்குக்கோ, நம்மால் பிறருடைய வாகனத்துக்கோ விபத்து ஏற்படும்போது ஆகும் செலவுகளை க்ளெய்ம் செய்து சமாளிக்க முடியும். வாகனங்களுக்கான இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் விதிமுறைகள் பற்றித் தெரிந்திருந்தால் இது மிகவும் சுலபம்.

சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகிவிட்டால் நீங்கள் செய்யவேண்டியவை…

* நீங்கள் இன்ஷூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்துக்கு போன் செய்து, விஷயத்தைத் தெரியப்படுத்துங்கள். பிறகு காவல்துறையை அணுகி, விபத்துகுறித்து புகார் செய்யுங்கள்.

* இன்ஷூரன்ஸ் நிறுவனம், உங்களுக்கு அருகில் உள்ள சர்வீஸ் ஸ்டேஷனின் முகவரியைப் பரிந்துரைக்கும். நீங்கள் அந்த சர்வீஸ் ஸ்டேஷனிலோ அல்லது நீங்கள் வழக்கமாக சர்வீஸுக்கு விடும் இடத்திலோகூட விபத்துக்குள்ளான வாகனத்தை சர்வீஸுக்கு விடலாம்.

* அந்த சர்வீஸ் ஸ்டேஷனில் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்வதற்கான விண்ணப்பம் கேட்டு வாங்கி, விபத்து நடந்த விவரத்தை பூர்த்திசெய்து விண்ணப்பித்துவிடுங்கள். அந்த சர்வீஸ் ஸ்டேஷன் ஊழியர், சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு விஷயத்தைத் தெரிவித்த பிறகு, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து மதிப்பீட்டாளர் ஒருவர் வந்து வாகனத்தைப் பார்வையிடுவார்.

* அப்போது உங்களுடைய வாகனத்தின் ஒரிஜினல் ஆர்.சி., இன்ஷூரன்ஸ் பாலிசி, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவற்றை அவரிடம் காண்பிக்கவேண்டியிருக்கும். வாகனத்தைப் பழுதுபார்க்க ஆகும் செலவு விவரங்களை, சர்வீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்தவர் இன்ஷூரன்ஸ் மதிப்பீட்டாளரிடம் கொடுப்பார்.

* மதிப்பீட்டாளர் அந்தச் செலவு விவரப் பட்டியலையும் வாகனத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் பொருந்தும்பட்சத்தில் வாகனத்தின் பாகங்களைப் புதுப்பிக்க ஒப்புதல் அளிப்பார்.

* வாகனம் சரிசெய்யப்பட்ட பிறகு, மதிப்பீட்டாளருக்கு விவரம் தெரிவிக்கப்படும். அவர் வந்து, வாகனத்தின் புதுப்பிக்கப்பட்ட பாகங்களை புகைப்படம் எடுத்துக்கொள்வார். பிறகு, அவரிடம் செலவுதொகைக்கான பில் அளிக்கப்படும்.

* அந்த பில்லை அவர் சரிபார்த்து, `லையபிலிட்டி’ எனும் இன்ஷூரன்ஸ் செட்டில்மென்ட் ஆவணத்தைத் தயார்செய்து சம்பந்தப்பட்ட சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிவைப்பார்.

* சர்வீஸ் ஸ்டேஷனில் இன்ஷூரன்ஸில் க்ளெய்மான தொகையையும் மற்றும் வாகனத்தின் உரிமையாளரான நீங்கள் செலுத்தவேண்டிய மீதித்தொகை ஏதேனும் இருப்பின் அந்த விவரத்தையும் தெரிவிப்பார்கள். வாகன உரிமையாளர் கூடுதல்தொகை செலுத்தவேண்டியிருப்பின் அதைச் செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வாகனத்தை மகிழ்ச்சியுடன் எடுத்துச் செல்லலாம்.

எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்காது?

1) வாகனத்தை மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு ஓட்டி விபத்து ஏற்படுத்தினால்…

2) வாகனத்தை 18 வயதுக்கு உட்பட்டவர் ஓட்டியிருந்தால்…

3) பழகுநர் உரிமம் பெற்றவர் ஓட்டும்போது விபத்துக்குள்ளானால்… (அவருடன் உரிமம் பெற்ற ஒருவர் இருந்தால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும்.)

4.) தனிநபர் வாகன பாலிஸியில் வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தும்போது விபத்து ஏற்பட்டால் மட்டுமே க்ளெய்ம் கிடைக்கும். அந்த வாகனம் கமர்ஷியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தி விபத்துக்குள்ளானால் இழப்பீடு இல்லை.

5) சாதாரண பாலிஸியில் பந்தயங்களில் பங்கேற்று விபத்து ஏற்பட்டால்… பந்தயங்களில் கலந்துகொள்பவர்கள் அதற்கென தனி பாலிசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

Leave a Reply