வாழவைக்கும் வாழை இலை… மலைக்கவைக்கும் மருத்துவப் பலன்கள்!

தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாழை இலையில் உணவு வைத்து உண்ணவும், விழாக்களில் அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தென் இந்தியாவில் உணவும் வாழை இலையும் பிரிக்க முடியாதவை; கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்தவை. எவ்வளவோ இலைகள் இருக்கும்போது இதற்கு மட்டும் ஏன் இந்தத் தனிச்சிறப்பு? விடை இங்கே…

அப்படி என்ன இருக்கிறது?

இதில் பாலிபினால்கள் (Polyphenols) நிறைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஈ.ஜி.சி.ஜி (Epigallocatechin gallate-EGCG) எனும் பாலிபினால் இதில் இருக்கிறது. இது ஓர் இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட். காற்று மாசுபாடு, புகைபிடித்தல் போன்றவற்றின் மூலம் நம் செல்களைச் சிதைக்கும் இதய நோய், புற்றுநோய், விரைவாக மூப்படைதல் போன்றவற்றுக்கு எதிராக இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் செயல்படுகிறது. கிரீன் டீயின் இலைகளிலும் இது இருக்கிறது.

அப்படியே சாப்பிடக் கூடாதா?

இவ்வளவு நன்மைகள் இருக்கும் இந்த இலையை அப்படியே பச்சையாகச் சாப்பிடலாமே என்று தோன்றலாம். ஆனால், இந்த இலையை அப்படியே சாப்பிட்டால், செரிமானமாகத் தாமதமாகும். சூடான உணவைப் பரிமாறும்போது இந்த இலையில் இருக்கும் பாலிபினால்கள் உணவால் உறிஞ்சப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலை வந்தடைகின்றன. கூடுதலாக, பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும் தன்மை (Anti-bacterial properties), வைட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம், கரோட்டின் ஆகியவையும் இதில் இருக்கின்றன.

வாழை இலை

வாழை இலையில் பரிமாறும் உணவைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்…

முக்கியமாக, இது மிக ஆரோக்கியமானது. ஏனென்றால், சூடாக இந்த இலையில் உணவு பரிமாறப்படும்போது, இதில் இருக்கும் பல்வேறுவிதமான ஊட்டச்சத்துக்கள் உணவோடு கலக்க வாய்ப்பு உள்ளது.

இதில் உள்ள குளோரோபில் (Chlorophyll), அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும். தோல் வாழை ஆரோக்கியம் காக்கவும் உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவை எளிதில் செரிக்க உதவும்.
ஏன் பெஸ்ட்?

சூடான பொருள் இந்த இலையில் பரிமாறப்படும்போது உணவின் சுவை இன்னமும் கூடும்.

பிளாஸ்டிக்போல் அல்லாமல் இது சுற்றுப்புறத்துக்கு உற்ற, உகந்த தோழன்! இதை உபயோகித்துவிட்டு தூக்கி எறியும்போது நம் வளர்ப்புப் பிராணிகளுக்கும் பயனாகும்.

இயல்பாகவே இது தூய்மையானது, ஆரோக்கியக்கூறுகளை உள்ளடக்கியது. இதில் லேசாக நீரைத் தெளித்துவிட்டே பயன்படுத்தலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் தட்டுகூட சுத்தமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு; வாழை இலை சுத்தமாக இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை.

நச்சுப்பொருள்களோ, வேதிப்பொருள்கள் கலப்போ இதில் இல்லை.

நீர்ப்புகாத் தன்மையுடையதாக இருப்பதால், இதில் குழம்பு, ரசம் போன்ற திரவ உணவுகளையும் பரிமாற முடியும்.
இந்த இலையைச் சாறாக அரைத்துப் பூசினால் சிறிய தோல் காயங்கள் நீங்கும். அரிப்பு, வேனல் கட்டி போன்ற தோல் தொடர்பான பிரச்னைகளைப் போக்கும். குளிர்ந்த நீரில் சிறிது வாழை இலையை ஊறவைத்து, அரைத்துப் பூசினால் வேனல் கட்டி சரியாகும்.
பூச்சிக்கடி, தேனீக்கடி, சிலந்திக்கடி போன்றவற்றுக்கு இதன் மருத்துவக் குணங்கள் உதவுகின்றன.
முடிந்த வரை வாழை இலையைப் பயன்படுத்துவோம்; வாழை இலை வாழவைக்கும்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *