shadow

வாடகை வீட்டை அலங்கரிக்கும் உத்திகள்

1வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீட்டைத் தங்களுடைய ரசனைக்கேற்றபடி வடிவமைப்பது என்பது சற்றுக் கடினமான விஷயம்தான். வீட்டின் உரிமையாளர்கள் தங்களிடம் எப்படி வீட்டை ஒப்படைத்தார்களோ அப்படியே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற பயத்தில் பெரிதாக எந்த வடிவமைப்பு மாற்றங்களும் செய்ய மாட்டார்கள். ஆனால், வாடகை வீட்டில் வசித்தாலும் வீட்டின் அடிப்படைத் தோற்றத்தை மாற்றாமல் சில அலங்காரங்களைச் செய்ய முடியும். அதற்கான சில வழிகள்…

பன்முகப் பயன்பாடு

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இடப்பற்றாக்குறை தவிர்க்க முடியாத பிரச்சினை. அதனால் ஒரே அறையை இரண்டு விதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். சமையலறை சற்றுப் பெரிதாக இருந்தால், சமையல் மேடைக்குப் பக்கத்தில் இரண்டு நாற்காலிகளைப் போட்டு அதைச் சாப்பாட்டு மேசையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் வரவேற்பறைச் சுவரில் புத்தக அலமாரியைப் பொருத்தி, வரவேற்பறையின் ஒரு பகுதியை வாசிக்கும் அறையாக மாற்றிக்கொள்ளலாம்.

அலங்கரிக்கும் பொருட்கள்

வீட்டின் உட்புறத்தை அலங்கரிக்க மரம், துணி, பீங்கான், வெல்வெட் போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம். இந்தப் பொருட்கள் வீட்டுக்கு மென் அலங்காரத் தோற்றத்தைக் கொடுக்கும்.

வெள்ளை, வெள்ளை

வீட்டின் வண்ணத்தை அடிக்கடி மாற்ற முடியாது என்று கவலைப்படத் தேவையில்லை. வாடகை வீட்டுக்குக் குடிபோகும்போதே வெள்ளை வண்ணத்தைச் சுவருக்கு அடிக்கச் சொல்லிவிடுங்கள். வெள்ளை நிறம் வீட்டைப் பெரிதாகவும் பளிச்சென்றும் வைக்கும்.

செடிகள் முக்கியம்

வாடகை வீட்டின் வெளியே செடிகள் வைக்க வசதியில்லை என்று வருத்தப்படத் தேவையில்லை. வீட்டின் வரவேற்பறையில் ஜன்னல்கள் இருந்தால் ஒரு பெரிய செடியை வாங்கிப் பொருத்தமான இடத்தில் வைக்கலாம். இந்தப் பெரிய செடி வீட்டுக்கு உள்ளேயே ஒரு சின்ன தோட்டம் வைத்த மனத்திருப்தியை அளிக்கும். அத்துடன், வீட்டின் உட்புறக் காற்றையும் சுத்தப்படுத்த உதவும்.

தனியாகப் பிரிக்கலாம்

சுவருக்கு வண்ணமடிக்க முடியாத அறையின் தோற்றத்தை மாற்றுவதென்பது இயலாத காரியம். அதனால், விதவிதமான வடிவமைப்புகளில் கிடைக்கும் அறை பிரிப்பான்களைப் பயன்படுத்தி அறையின் தோற்றத்தை மாற்றலாம். இந்தப் புதுமையான அறைப் பிரிப்பான்களால் குழந்தைகளுக்குத் தனியாக ஒரு விளையாட்டு அறையையும், உங்களுடைய அறையில் அலுவலக அறையையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

தரைவிரிப்பின் அழகு

அறையில் ஒன்றுக்கு மேற்பட்ட தரைவிரிப்புகளைப் பயன்படுத்துவது பன்முகத் தோற்றத்தைக் கொடுக்கும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் குஷனுடன் இருக்கும் தரைவிரிப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். இது குழந்தைகள் கீழே விழும்போது அடிபடுவதைத் தடுக்க உதவும்.

ஆடம்பர அலங்காரம்

வீட்டில் இருக்கும் பொருட்களை அலங்கரிப்பதாலேயே தோற்றத்தை ஆடம்பரமாக மாற்ற முடியும். அதை ‘வஷி டேப்’ (Washi Tape) உதவியோடு எளிமையாகச் செய்யலாம். உதாரணமாக, உங்களுடைய ‘ஃப்ரிட்ஜ்’ வண்ணமிழந்து போயிருந்தால் ‘கோல்ட் டக்ட் டேப்’ (Gold Duct Tape) ஒட்டி அதற்குப் புது தோற்றத்தைக் கொடுக்கலாம். இது சமையலறைக்குப் புதுப்பொலிவைக் கொடுக்கும். இந்த ‘வஷி டேப்’பை உங்கள் படைப்பாற்றலின் உதவியுடன் சுவர் அலங்காரத்துக்கும் பயன்படுத்தலாம்.

Leave a Reply