வரைவு பாடத் திட்டம் கருத்துக் கூற கால அவகாசம் நீட்டிப்பு

வரைவுப் பாடத் திட்டத்தின் மீது கருத்துக் கூறுவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடத் திட்டங்கள் மாற்றப்பட உள்ளன. இதற்காக உருவாக்கப்பட்ட புதிய வரைவு பாடத் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் நவ. 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்த வரைவு பாடத் திட்டம் தொடர்பாக கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதற்காக டிஎன்எஸ்சிஇஆர்டி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, கருத்துகளைக் கூற ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் திங்கள்கிழமையோடு முடிவடைந்த நிலையில், மேலும் ஒரு வார காலத்துக்கு இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: வரைவு பாடத் திட்டத்தின் மீது கருத்துகளைக் கூற மேலும் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை ஏற்று, கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *