shadow

வருங்கால சந்ததிக்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்: கமல்ஹாசன்

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் பரபரப்பான அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை தெரிவித்து தன்னை முன்னிலை படுத்தி வருகிறார். அவரது ஒவ்வொரு பேச்சிலும், ஒவ்வொரு டுவிட்டிலும் அவர் தன்னை முன்னிலைப்படுத்துவது மட்டுமின்றி, தன்னை தானே பெருமைப்படுத்தி பேசுவதிலும் அக்கறை காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் இன்று விவசாய சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் ஒரு கிராமத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் ஒரு ஆறு மாயமாகி இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாளில் இதை வெளிப்படுத்துவோம். சினிமாத் துறையை இண்டஸ்ட்ரியாக அறிவித்து விட்டார்கள், கோக்கக்கோலாவை இன்டஸ்டரியாக அறிவித்து விட்டார்கள். இவை இரண்டும் இல்லாமல் வாழலாம் ஆனால் குடிநீர், உணவு இன்றி வாழ முடியாது அதற்கு அடிப்படையான விவசாயத்தை இன்னும் இன்டஸ்டிரியாக அறிவிக்கவில்லை. விவசாயத்தை முதலில் இண்டஸ்ட்ரியாக அறிவிக்க வெண்டும்.

நான் உழவரின் மருமகன். என்னைத் தமிழ் பொறுக்கி என்கிறார்கள். என்னை தேசவிரோதி எனக் கூறி சுட்டுக் கொன்றுவிடலாம் என முயற்சிக்கிறார்கள். நான் இந்த கூட்டத்திற்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை, வருங்கால சந்ததிக்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்.

தமிழர்களும் மராட்டியர்களுமே இந்தியாவிற்கு அதிகமாக வரி செலுத்துகிறார்கள். ஆனால் அந்த வரிப்பணம் விவசாயிகளுக்கு செலவிடப்படவில்லை. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. காவிரி மேலாண்மை உடனடியாக அமைக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். ஆனால் நாம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தலைவனைத் தேடுவதை விடுத்து நம்மிலிருந்து ஒரு நல்ல தலைவனை நாம்தான் நியமித்துக் கொள்ள வேண்டும். நான் தெய்வ நம்பிக்கை இல்லாதவன், இங்கே தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் தெய்வங்களின் வரிசையில் விவசாயியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புராணக் கதையில் ராமனுக்கு அணில் உதவியதைப் போல, விவசாயிகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய அணில் போல ஒரு ஜந்துவாக நான் இங்கு வந்திருக்கிறேன். என்னோடு இருப்பவர்கள் பல குழுக்களாக இனி உங்களைத் தேடி வருவார்கள். அவர்களிடம் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் தெரிவிக்கலாம்” இவ்வாறாக கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply