shadow

வயதானவர்களுக்கு தகுந்த வீடு எது தெரியுமா?

தங்களுக்குப் பிடித்தது போல்தான் வீடு கட்டிக் கொள்கிறார்களே தவிர, வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்குத் தகுந்தாற்போல் பலரும் இக்காலத்தில் வீடு கட்டுவதில்லை என்பதே உண்மை. தற்போது பல ஊர்களில் பல இடங்களில் வயதானவர்கள் தனிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். வீட்டின் கட்டுமானத்திலும் பல பிரச்சினைகள் எழுகின்றன. வீட்டில் சில மாறுதல்களைச் செய்தால் வயதானவர்கள் இயல்பாய் வாழ முடியும். வயதானவர்களுக்குத் தகுந்தாற்போல் எவ்வாறு வீட்டினை அமைப்பது எனக் கட்டுமானப் பொறியாளர் மூர்த்தி நம்மிடம் பகிர்ந்து கொண்ட யோசனைகள்:

வயதானவர்கள் வசிக்கும் வீடுகளில் முதலில் குளியல்அறை, கழிவறை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். வழுக்கி விழாத வகையில் தரைத்தளம் அமைக்க வேண்டும். மிக வழவழப்பான டைல்ஸை வீட்டில் அமைக்காமல் இருப்பது நல்லது. சொரசொரப்பான டைல்ஸ் அமைக்கலாம். வழுக்கி விழ வாய்ப்பு இருக்காது.

குறிப்பாகத் தனியாக இருப் போர் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பது நலம். உதவிக்கு உடனே யாராவது வர வாய்ப்புள்ளது. தரைத்தளம், முதல் தளத்துக்கு முன்னுரிமை தரலாம். வயதானவர்கள் மட்டும் இருந்தால் பெரிய வீடாகப் பார்க்காமல் தேவைக்கு ஏற்றாற்போல் இருப்பது முக்கியம். வீட்டை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது. தூசி, குப்பையை எளிதாக அகற்றமுடியும். ஸ்விட்ச் போர்டுகளை மார்பளவு வைப்பது நல்லது. தலைக்கு மேலேயோ, கீழேயோ வைத்தால் அவர்களுக்குக் கடினம். வீட்டின் முன் மற்றும் பின்பக்க கதவுகளுக்கு முன்பு இரும்பு கதவு அவசியம். மிக பாதுகாப்பாக இருக்கும்.

வயதானவர்களின் வசதிக்காக அவர்கள் படுக்கை அறையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கலாம். அவர்கள் பத்திரமாக எழ, டாய்லெட் சுவரில் கைப்பிடிகளை அமைக்கலாம். முக்கியமாக வீட்டுக்குள் வீல்சேர், ஸ்ட்ரெச்சர் வரும் வகையில் வாசல் அமைக்க வேண்டும். காற்று, வெளிச்சம் நன்றாக வரும் வகையில் வீடு இருந்தால் சவுகரியமாக இருக்கும்” என்றார்.

வாடகை வீட்டில் இருந்தாலும் உரிமையாளரிடம் பேசி, குறைந்த செலவில் சில மாற்றங்களை வயதானவர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக் காவும் செய்துகொள்ள மறக்காதீர்கள்

Leave a Reply