வடிவமைப்பில் தற்போதைய பாணி

வீடு என்பது சகல வசதிகளுடன் திகழ வேண்டும் எனில், அது தன்னகத்தே வரவேற்பறை, படுக்கையறை,சமையலறை, சாப்பாட்டு அறை, பூஜை அறை, சேமிப்பறை எனப் பலவற்றையும் கொண்டதாக அமைய வேண்டும். ஆனால் இன்றைய நவ நாகரிக யுகத்தில் இடப்பற்றாக்குறையின் காரணமாக அனைத்துமே சுருங்கிக் குறைவான இடத்தில் வளமான வாழ்வு வாழ்வது என்பதை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம்.

பூஜை அறையைச் சுவரில் மாட்டும் அலமாரியாகவும், கழிப்பறை, குளியலறை இரண்டையும் இணைத்து ஒரே இடத்தில் அமைத்தும் இடத்தைச் சேமிக்கிறோம். தற்கால வடிவமைப்பு முறைகளின்படி சாப்பாட்டு அறை வரவேற்பறையை ஒட்டியதாக அல்லது அதன் அருகில் அமைக்கப்படும் போக்கு காணப்படுகிறது. சில சமயங்களில் பயன்பாட்டு வசதிக்காகச் சாப்பாட்டு அறையையும் சமையலறையையும் இணைத்து அமைக்கிறார்கள்.

இவ்வாறு இரு அறைகளை இணைக்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் வரவேற்பறையின் எழில் குன்றாமல் பார்த்துக் கொள்ளலாம். இரு அறைகளிலும் அறைக்கலன்கள் எங்கெங்கே வரும் என்பதை முதலிலேயே முடிவுசெய்து கொள்ள வேண்டும். நெருக்கமாக அமைத்தால் சிறப்பாக இருக்காது. அப்படி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோமானால் இரு அறைகளுக்கும் நடுவே அழகிய திரைச்சீலை அல்லது தடுப்பான் கொண்டு மறைத்து விடலாம். அறைக்கலன்களை அடுக்கும்போது சுவரை ஒட்டினாற்போல அமைக்காமல் சிறிது தள்ளி அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அறை சிறியதாயினும் பெரிதாய் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்.

அறையில் இருக்கும் ஒளியின் அளவானது அறையின் அளவை நிர்ணயிக்கும். நன்றாக ஒளியூட்டப்பட்ட அறையைப் பெரிதாகக் காட்ட முடியும். நீண்ட நிற்கும் விளக்குகள் அல்லது தொங்கும் சர விளக்குகள் அறையின் நீள அகலத்தைச் சற்றே பெரிதாகக் காட்டும். அறைகளில் அதிக கண்ணாடிகள் வருவதுபோல் வடிவமைத்தால் அதுவும் அவற்றை விசாலமாகக் காட்டும். இரு அறைகளையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேறு வேறு வகையான திரைச்சீலைகள் அமைக்க வேண்டும்.

இரு அறைகள் இணைந்திருந்தால் அதற்குரிய தரை அமைக்கும்போது இரு அறைகளையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் வண்ணம் அமைக்க வேண்டும். அவை ஒன்றோடு ஒன்று இணையும் இடம் தனியே விலகி நின்று தெரியாமல் இயைந்தாற் போல அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக பளிங்கால் அமைத்தால் இரு அறைகளையுமே பளிங்கால் அமைக்க வேண்டும். டைல்களால் அமைத்தால் இரு அறைகைளயுமே டைல்களால் அமைக்க வேண்டும். சில சமயங்களில் பழைய வீடு வாங்கி, அவற்றில் வேறு வேறு தளங்கள் அமைந்திருந்தால், அவற்றின் மீது கார்பெட் விரித்து அந்த வித்தியாசத்தை மறைத்து விட்டால் அழகாக இருக்கும். இதனையும் மீறி சில சமயங்களில் வேறு வேறு தரைகள் அமைக்க வேண்டியதிருந்தால் அவற்றின் வடிவமைப்பு ஒத்து இருக்கிறாற் போல பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதே போல் இரு அறைகளை இணைக்கும் போது அவை ஒரே சுவரைப் பொதுவாகப் பெற்று அமையும். அவற்றை ஒரே வண்ணத்தில் அமைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. வெவ்வேறு வண்ணங்கள் என்றாலும் ஒத்தாற்போல உள்ள வண்ணங்களாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். உள் அலங்காரத்திலும் ஒத்து இருக்கிறாற் போல பார்த்துக் கொள்ள வேண்டும்.

சாப்பாட்டு அறை சிறியதாக இருக்கும் பட்சத்தில் அதனைப் பெரிதாகக் காட்ட வேண்டுமெனில் வட்டம் அல்லது நீள்வட்ட மேஜை அமைக்கலாம். இவை அதிக நாற்காலிகளைத் தன்னகத்தே கொள்ள உதவும். மேஜை மீது விரிப்பான் அமைத்துவிட்டால் மேஜையின் மேலுள்ள கறை மற்றும் கீறல்கள் மறைத்துவிடும். கண்ணாடியினாலான மேஜை எனில் ஒளியைப் பிரதிபலித்து அறையைப் பெரிதாகக் காட்டும். மேலும் தேவைக்கதிகமான பொருட்கள் சிதறிக் கிடந்தால் அதுவே அறையை அழகற்றதாக்கி விடும். எனவே எப்போதும் அறைகளை ஒழுங்குபடுத்தி சுத்தமாக வைத்தக் கொள்ள வேண்டும். சாப்பாட்டு அறையில் சமைத்த உணவை வைக்கும் பக்க மேஜை, தட்டு வைத்திருக்கும் அலமாரி, குளிர் பதனப்பெட்டி போன்றவை பெரிதாக இடத்தை அடைக்காமல் அறைக்கேற்ற அளவில் இருத்தல் நலம்.

வரவேற்பறையில் பெரும் பகுதியை அடைத்துக் கொள்வன சோபா மற்றும் தொலைக்காட்சி தாம். காலத்திற்கேற்ப, மற்றும் இருக்கும் இடப்பற்றாக்குறைக்கேற்ப மடக்கி, விரித்துக் கொள்ளும் சோபாவைப் பயன்படுத்தலாம். தொலைக்காட்சியைச் சுவரில் மாட்டும் வண்ணம் அமைத்தால் நிறைய இடம் சேமிப்பாகும். சுவர்களை பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். புத்தகங்களை, அலங்காரப் பொருட்களை சுவரில் அமைத்து வரவேற்பறையை எழிலூட்டலாம். அறைக்கலன்கள் வாங்குவதை விட அவற்றைப் பொருத்தமான இடத்தில் அமைக்க வேண்டும். அது தான் முக்கியமானது. இடத்தை அடைத்தாற் போல தெரியக் கூடாது.

சாப்பாட்டு அறை, வரவேற்பறை இரண்டுமே குடும்பத்தினர் மற்றும் உறவினர் கூடும் இடம் என்பதனால் அவற்றைக் கவனத்துடன் அலங்கரித்தால் அது நமது பாணியைப் பறைசாற்றும். சாப்பாட்டு அறையின் அருகில் நீண்ட, பெரிய, அழகிய ஜன்னல்கள் இருந்தால் அவற்றின் அருகில் ஒரு நாற்காலி அல்லது பலகை அமைத்தால் அதிகம் பேர் கூடும் போது அதில் அமர்ந்து உரையாடலாம். குழந்தைகள் தங்கள் பாடங்களைப்படிக்க அல்லது விளையாட உபயோகிக்கலாம். சில இடங்களில் கதவுகள் அல்லது பால்கனி இருக்கும். அவை இன்னும் சவுகர்யமானது. காற்று வருவதற்காகத் திறந்து வைத்துக் கொண்டு உரையாடலாம்.

சில சமயங்களில் வீட்டில் விருந்து வைத்து உபசரிக்கும் போது இந்த இரு அறைகள் இணைந்த இடத்தில் மெல்லிய இசை பரவவிட்டு விருந்து பரிமாறலாம். உங்கள் புகைப்பட ஆல்பங்களைக் காட்டி பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம். அறைகளை அழகாயப் பராமரித்து அலங்கரித்தால் விருந்தினர் முன்பு உங்களுக்குள் இருக்கும் வடிவமைப்பாளரை நீங்கள் வெளிப்படுத்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *