வடசென்னை திரைவிமர்சனம்


மெரீனா ஓரத்தில் இருக்கும் குப்பத்து ஜனங்களுக்கு பாதுகாவலனாய் இருக்கும் அமீரை சமாதானப்படுத்தி அந்த குப்பத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் துறைமுக கட்டிடங்களை கட்ட அரசு முயற்சிக்கின்றது. ஆனால் அமீர், ஜனங்களுக்கு ஆதரவாக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார். இதனால் அரசியல்வாதி ராதாரவி, அமீருக்கு உதவியாக இருக்கும் சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர்களின் மனதை கலைத்து அவருக்கு எதிராகவே அவர்களை திரும்ப வைக்கின்றார். இந்த திட்டத்தில் அமீர் கொல்லப்பட, அதனால் குடும்ப அளவில் பாதிக்கப்பட்ட அமீரின் மனைவி ஆண்ட்ரியாவும், மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுவயது தனுஷூம் போடும் திட்டங்கள், எடுக்கும் அதிரடி திருப்பங்கள் தான் இந்த படத்தின் கதை

தனுஷின் நடிப்பில் அனேகன், புதுப்பேட்டை, பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் சாயல் தெரிகிறது. இருப்பினும் இந்த படத்தை முழுவதுமாக தாங்கி நிற்பது தனுஷ்தான். சிறுவயதில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் காதல், அதன்பின்னர் சமுத்திரக்கனியின் பேச்சை கேட்டு சிறை செல்தல், சிறையில் கிஷோரின் நட்பு, கிஷோர் கொலை என தனுஷின் கேரக்டருக்கு திருப்பங்கள் அதிகம் என்பதால் அவர் கேரக்டர் மனதில் நிற்கின்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டருக்கு வேலை குறைவுதான் என்பதால் நடிப்பும் சுமார். ஆரம்பகட்ட காட்சிகளில் ஐஸ்வர்யாவின் நடிப்பு ஓகே. ஆண்ட்ரியாவுக்கு கொஞ்சம் வலுவான கேரக்டர். ஆனால் இந்த கேரக்டர் அவருடைய தகுதிக்கு மீறியதாக தெரிகிறது

சமுத்திரக்கனி, கிஷோர் ஆகிய இருவரும் இரண்டு கேங்க்ஸ்டர் தலைவர்கள். இவர்களில் சமுத்திரக்கனி நடிப்பு ஓகே. ஆனால் கிஷோருக்கு வடசென்னை தமிழ் சுத்தமாக வரவில்லை. ராதாரவி, டேனியல் பாலாஜி நடிப்பு ஓகே

சந்தோஷ் நாராயணன் இசையில் அவ்வப்போது வரும் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசையை அருமையாக இசையமைத்துள்ளார். மேலும் ஜாக்கியின் செட் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். மகாநதிக்கு பின்னர் இந்த படத்தில் அதிக ஜெயில் காட்சிகள் இருப்பதும் அதற்கு பொருத்தமாக ஜெயில் செட் போட்டிருப்பதும் அருமை. வேல்ராஜின் ஒளிப்பதிவு அந்த ஜெயில் செட்டை சரியாக பயன்படுத்தி கொண்டதும் இந்த படத்தின் பிளஸ்களில் ஒன்று

வடசென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை வருடக்கணக்கில் ஆய்வு செய்து அதை தனது திரைக்கதையில் பயன்படுத்தியுள்ளார். அவருடைய ஹோம்வொர்க்கிற்கு வாழ்த்துக்கள் ஆனால் அதே நேரம் இந்த கதையை நல்ல விறுவிறுப்புடன் கொண்டு செல்லும் வாய்ப்பு இருந்தும் கொஞ்சம் மெதுவாகவே கதையை நகர்த்தியுள்ளார். பெரிய திருப்பங்கள் , டுவிஸ்டுகள் என எதுவும் இல்லாமல் படம் நகர்வது ஒரு மைனஸ்

இந்த படத்தின் வசனங்கள் தற்போதைய அரசியல் நிலையை ஞாபகப்படுத்துகிறது.; அதேபோல் ராஜீவ்காந்தி, எம்ஜிஆர் மரணத்தை திரைக்கதையில் இணைத்தது ஒரு புத்திசாலித்தனம்

மொத்தத்தில் தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இருவரின் கடின உழைப்புக்கக ஒருமுறை பார்க்கலாம்

ரேட்டிங்: 3/5

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *