ரேஷன் கடைகளில் வங்கிச் சேவை: மத்திய அரசு பரிசீலனை

13நாடு முழுவதும் 5.5 லட்சம் ரேஷன் கடைகளில் (பொது விநியோகக் கடைகள்) (பிடிஎஸ்) வங்கிச் சேவை அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வங்கிச் சேவைகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இதன் மூலம் ரேஷன் கடைகளில் வங்கி கணக்கை செயல்படுத்திக் கொள்ள முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்தில் வங்கி முகவர்களாக ரேஷன் கடைகள் செயல்படும். இந்த திட்டத்தை முதல் கட்டமாக 55 ஆயிரம் கடைகளில் விரைவில் கொண்டு வர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அனைத்து ரேஷன் கடைகளும் மாநில அரசின் கீழ் இயங்கி வருகின்றன. சர்க்கரை, அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்றவை இந்தக் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. உணவு பாதுகாப்பு அமைப்பின்படி மானிய விலையில் இந்த உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ஆதார் விவரங்கள் இணைப்பு

தற்போது 1.5 லட்சம் ரேஷன் கடைகள் இயந்திரங்கள் மூலமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனாளிகளின் விவரங்களை அறிந்துகொண்டு உணவுப் பொருட்கள் வழங்கப் பட்டு வருகின்றன. இதனுடன் ஆதார் விவரங்களை இணைத்து அதை மையத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். இதற்கு எளிதான சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்பாடு தேவைப்படும். இந்த இயந்திரத்தின் மூலமே வங்கி அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்ள முடியும் என்று அதிகாரி தெரிவித்தார்.

இந்தியாவில் அஞ்சலகங்களை விட ரேஷன் கடைகள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு ஆயிரம் மக்கள் கொண்ட கிராமத்திற்கும் ரேஷன் கடைகள் உள்ளன. அதனால் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அடுத்த மூன்று மாதங்களில் 55 ஆயிரம் ரேஷன் கடைகளில் இந்தத் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *